ஆவின் பதவியைக் கைப்பற்றும் டீம்!
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆவின் நிர்வாகம், டைரக்டர்கள் மற்றும் சேர்மன் இன்றி அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் செயல்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போது ஆவின் டைரக்டர் மற்றும் சேர்மன் தேர்ந்தெடுப்பு பற்றிய பரபரப்பு தொற்றியிருக்கிறது. மாவட்ட அமைச்சரான கீதா ஜீவன், தன்னுடைய ஆதரவாள ரான தூத்துக்குடி நகர தி.மு.க. செயலாளரான ஆனந்தசேகரனை ஆவின் சேர்மனாக்குவதற்காக, தனது தரப்பினரை டைரக்டர்களாகக் கொண்டுவருவதற்கு காய்களை நகர்த்தியிருக்கிறார்.
இதையறிந்த அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், சைலண்ட்டாக கீதா ஜீவனை ஓவர் டேக் செய்து, மாவட்டத்தில் ஆங்காங்கே இருக்கும் ஆவின் உறுப்பினர்களைத் திரட்டி, தனக்கு வேண்டப்பட்ட 17 பேரை எதிர்ப்பேயின்றி டைரக்டர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பதிவு செய்துவிட்டாராம். அமைச்சர் அனிதாவின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத கீதாஜீவனோ, தனது ஆதரவாளர்கள் 5 பேரையாவது அதில் டைரக்டராக்குங்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூது அனுப்பியும் அவர் கண்டுக்கலையாம். இதனால் ஆவின் நிர்வாகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் கை ஓங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் உ.பி.க்கள். தனது ஆதரவாளரான சுரேஷ்குமார் என்பவரை ஆவின் சேர்மனாக்கும் திட்டத்திலிருக்கிறாராம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவனின் ஆதரவாளரிடம் பேசியபோது, "எங்களுக்கு ஆவின் நிர்வாகத்திற்கு வருவதற்கு விருப்பமில்லை. அதனால்தான் நாங்கள் ஒதுங்கிக்கொண்டோம்'' என்றார் சிம்பிளாக.
-பரமசிவன்
ரசாயனப் பிள்ளையாருக்கு விவசாயிகள் எதிர்ப்பு!
பாரம்பரியமாக சாணியால் பிடித்தும், களி மண்ணாலும், பிள்ளையாரை உருவாக்கி வீட்டில் வைத்து வழிபட்டு, அன்று மாலையே அருகிலுள்ள கிணற்றிலோ, குளத்திலோ கரைப்பதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் வட மாநில இந்துத்துவ இயக்கங்கள் தமிழ்நாட்டில் நுழைந்தபின்னர், கடந்த 30 ஆண்டுகாலமாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கெமிக்கலால் செய்யப்பட்ட பிரமாண்ட பிள்ளையார் சிலைகளும், அவற்றைத் துண்டுதுண்டாக உடைத்து நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்துவதும் தான் தொடர் நிகழ்வாக இருக்கிறது.
இந்நிலையில், வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து, கீழ்பவானி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புச் செயலாளர் வடிவேல், தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைச்சாமி, தற்சார்பு விவசாயி கள் சங்கத்தின் தலைவர் பொன்னையன், தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுத் துள்ளார்கள். அதன்பின்னர், பொன்னை யன் கூறும்போது, "விநாயகர் சதுர்த்தி விழாவில், ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களிலுள்ள ஊர்களில் வழிபாடு செய்யும் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, அந்தந்த ஊர்களின் அருகேயுள்ள கீழ்பவானி முதன்மைக் கால்வாயில் கொண்டுவந்து போடுகின்றனர். இதனால் மதகுகளில் அடைப்பு ஏற்படுகிறது. முதன்மைக் கால்வாயின் நீரோட்டத்தில் தடை ஏற்படுகிறது. ரசாயன பொருட்கள் தண்ணீரில் கரைந்து, வயலிலுள்ள இளம் நாற்றுகளைக் கருகவைத்து பெரும் சேதத்தை உருவாக்குமென்பதால் விநாயகர் சிலைகளைக் கால்வாயில் கரைக்க அனுமதிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்'' என்றார்.
நாற்றாங்காலில் ரசாயனம் கலப்பதைப் போல, இத்தகைய அரசியலும் மக்களுக்கு ஆபத்தே.
-ஜீவா தங்கவேல்
காங்கிரஸ் தலைமை குஸ்தி!
கோஷ்டிகளுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் மாநிலத் தலைமைக்கான சர்ச்சை புகையத் தொடங்கியுள் ளது பற்றி டெல்லி மேலிடம்வரை தகவல் சென்றுள்ளது. தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியின் மூன்றாண்டு பதவிக்காலம் அடுத்த பிப்ரவரியோடு நிறைவடையும் சூழலில், தற்போதே எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி போன்றோர் பெயர்கள் சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகை செய்திகளிலும் பரபரப்பாக அடிபடுகின்றன. ஜோதிமணி எம்.பி. பங்கேற்கும் நாடாளுமன்ற -தொலைக்காட்சி விவாதங்கள், அவரது ட்வீட்டுகள், களச் செயல்பாடுகள் ஆகியவை சமீபகால மாக கவனத்தை ஈர்த்து வருகின்றன. எனினும், மாநிலத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க.வுடன் இணக்கமாகச் செயல்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ள கே.எஸ்.அழகிரியின் தலைமையிலேயே அடுத்து வரவுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்கள், நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களையும் எதிர்கொள்ள வேண்டுமென்று அவர் தரப்பு எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு முன் தலைமை மாற்றம் ஏற்பட்டால் வெற்றியை பாதிக்கும் என்கிறார்கள் கதர்ச்சட்டை சீனியர்கள்.
டெல்லி பாலிடிக்ஸ் வேறு, தமிழ்நாட்டில் கட்சிக்குத் தலைமை தாங்குவது என்பது வேறு. இங்குள்ள பிரச்சினைகளை எதிர்கொண்டு கட்சி நடத்துவது சிரமம். ஜோதிமணி, தற்போதைய சூழலில் களப்பணிகளிலும் நாடாளுமன்றச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துவது கட்சிக்குப் பலம் சேர்க்கும் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. ப.சிதம்பரத்தின் வாரிசு என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து கார்த்தி சிதம்பரத்துக்கு கட்சித் தலைவர் பதவி வழங்குவதிலும் டெல்லி ஆர்வம் காட்டவில்லை. தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் கே.எஸ்.அழகிரியின் எதிர்பார்ப்புக்கேற்ற சூழல் தற் போது காங்கிரஸ் மேலிடத்தில் நிலவு கிறதாம்.
-தெ.சு.கவுதமன்