நெருக்கடியில் ஒலி ஒளி!
இங்கே கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிற நிலையில்... தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியிருப்பதால், "பெரியோர்களே... தாய்மார்களே...'’ என குரல்களை அதிரவிடும் ஒலி ஒளி அமைப்பினரும் திண்டாடத் தொடங்கிவிட்டார்கள். காரணம்... அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவந்த அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், கோயில் திருவிழா உள்ளிட்ட மத வழிபாட்டு நிகழ்ச்சி களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட வைபவங்களிலும் குறைவான நபர்களே கலந்து கொள்ளவேண்டும் என்று அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒலி, ஒளி அமைப் பாளர்களும், இசைக் கலைஞர் களும் வாய்ப்புகளை இழந்து கடும் தொழில்நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். அதனால் மற்ற துறையினரைப்போல சில தளர்வுகளோடு தொழில் செய்யத் தங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அவர்கள் தரப்பில் இருந்து எழுந்திருக்கிறது.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கோவில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் 50% சத அளவிற்காவது வேலை வாய்ப்பு கிட்டும் வகையில் அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும்படியும் அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.
-பி.அசோக்குமார்
அநாகரிக அதிகாரி!
கடந்த 21-ந் தேதி சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன், புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழித்தேவன் ஆகியோர் சிதம்பரம் அருகே இருக்கும், சி.முட்லூர் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிடச் சென்றபோது அவருடன் சிதம்பரம் பத்திரிகையாளர்களும் ஊடகத்தின ரும் புகைப்படம் எடுக்கச் சென்றனர். அப்போது பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. சரவணகுமார் பத்திரிகையாளர் களைப் பார்த்து, ஒருமையில் திட்டியபடியே, "எல் லோரும் வெளி யேறுங்கள்' என மிரட்டினார். மேலும் அதிகார தோரணையில் "வெளியே போ...' என்றும் கூச்சல் போட்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகை யாளர்கள், "வாக்கு எண் ணிக்கை மையத்திற்குள் சென்றுவர எங்களுக்கு எல்லா நேரமும் அனுமதி உண்டு. அந்த உரிமையைக் காவல்துறை பறிப்பதா?' என்றபடி தர்ணாவில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகையாளர்கள், "அநாகரிகமாக நடந்து கொண்ட ஏ.டி.எஸ்.பி. சரவணகுமாரைப் பணி நீக்கம் செய்யவேண்டும்' என்று முழக்கங்களை எழுப்பினர். கடைசியில் வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க, அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இதுகுறித்து சிதம்பரம் பத்திரிகை யாளர்கள் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநில தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், கடலூர் எஸ்.பி. ஆகியோருக்கும் ஏ.டி. எஸ்.பி. பற்றிய புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அநாகரிக ஏ.டி.எஸ்.பி.யின் நடவடிக்கைகள் பற்றி காவல்துறையினரே கடுமையாக விமர்சிக் கின்றனர்.
-காளிதாஸ்
காதலையும், பெண் காவலரையும் சாகடித்த சாதி!
திருச்சி ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்துவந்த கௌசல்யா, அங்குள்ள கே.கே. நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர். தன்னுடன் பணியாற்றும் சக போலீஸ்காரர் ஒருவருக்கும் இவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்துவந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனினும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கௌசல்யா குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இதைக்கண்ட அந்தக் காவலர், தன் காதலை ஒதுக்கிவைத்துவிட்டு தனது முறைப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பெண் காவலர் கௌசல்யாவோ, காதல் தோல்வியால் துணையை இழந்த அன்றில் பறவையாய் மன உளைச்சலில் தவித்துவந்தார். பிரிவுத் துயரை விழுங்கமுடியாத அவர், விஷத்தை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை, அவரது சக காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி கௌசல்யா இறந்துவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதியின் பசிக்கு தன் உயிரைக் கொடுத்து விட்டார் பரிதாபத்திற்குரிய கௌசல்யா.
-மகேஷ்