தற்கொலை முயற்சியில் சிறைக் கைதிகள்!

சிறைகள் கொரோனா பரவலுக்கான மையமாகக்கூடும் என்பதால் விசாரணைக் கைதிகள், குற்றவாளிகளைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைப் பின் பற்றாததால் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கொரோனா தொற்று வேகமெடுத் திருக்கிறது.

ஏற்கனவே, இங்கு விசாரணைக் கைதிகள் அறையிலிருந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சிறைக்கைதிகள் மூவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். இதனால் சிறை நிர்வாகம் நிலைமையை சரிவர கண்காணிக்கவில்லை என சிறைக்கைதிகள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது.

இதில், இரண்டு கைதிகள் ஜெயில் சுவரின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். மேலும் மூன்றுபேர் சீகைக்காய்த் தூளைக் கரைத்துக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காலாப்பட்டு சிறையில் கொரோனா வேகமாக பரவுவதால், கைதிகளை உடனடியாக விடுவிக்கக்கோரி புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

Advertisment

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், காலாப்பட்டு சிறைக்கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க புதுச்சேரி அரசு முடிவெடுக்காமல் போனால், பெருமளவு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றமும் இதற்கு உத்தரவிட்டது. இதைப் பின்பற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காததால், சிறைக்கைதிகள் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, சிறைக்கைதிகள், விசாரணைக் கைதிகளை பரோலில் விடுவிக்க புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தி யுள்ளனர்.

-சுந்தரபாண்டியன்

Advertisment

ss

மரங்களைப் பாதுகாக்க இளைஞர்களின் யோசனை!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ளது குமிழியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அவர்களின் வீடுகளில் திருமண விழாக்களின் போதும், குழந்தை பிறக்கும்போதும், பிறந்ததினக் கொண்டாட்டங்களின் போதும், ஊர்ப் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்ப்பதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள். இந்த கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள். இதற்காகவே இவர்கள் ’மரங்களின் நண்பர்கள்’ என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து இளைஞர்களை வழிநடத்தி வருகிறார் ஆசிரியர் முத்துகிருஷ்ணன்.

இந்த நிலையில்தான், மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதோடு, ஏற்கனவே வளர்ந்து நிற்கும் மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்க இந்த அமைப்பினர் யோசனையில் இறங்கினர். அதன்படி, ஊர்ப்பகுதியில் அழிவின் விளிம்பில் இருக்கும் புளிய மரங்களை பாதுகாப்பது என முடிவுசெய்தனர். இதற்காக அவர்கள் எடுத்த முடிவு வித்தியாசமாக இருந்தது. அதாவது, மரங்களை தெய்வமாக பாவித்து, அவற்றிற்கு அருகில் சூலம் நட்டு மஞ்சள் ஆடை அணிவித்து, கற்பூர ஆராதனை வழிபாடு செய்வதுதான் அந்த முடிவு.

“எல்லா உயிர்களை பாதுகாப்பது இறைவ னின் அருளே. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன், ஓரறிவு தாவரங்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மரங்களைக் கடவுளாக்கி வழிபடுகிறோம்’’ என்கிறார்கள் மரங்களின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

இயற்கையை இறைவனாக வழிபட்ட தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சியாகவே குமிழியம் கிராம மக்களின் செயலை பார்க்க வேண்டி யிருக்கிறது.

-எஸ்.பி.சேகர்

அமைச்சரை அதிரவைத்த போன் கால்!

கொரோனா காலத்து நிவாரண உதவிகளை வழங்கிவரும் அரசியல் தலைவர்கள் பலரும், தொற்று ஏற்படும் அபாயத்துடனே இருக்கிறார்கள். பலமுறை தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று உறுதியானது. இது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில்தான், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை அதிரவைக்கும் அந்த சம்பவம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்துவரும் சேவூர் ராமச்சந்திரன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, கடந்த ஜூன் 26ந்தேதி திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான சிறப்புநிதி கடன் தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தனது காரில் காலை 11.30 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சரின் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் செல்போன் அழைப்பின் வழியே வந்தது. இதை அருகில் இருந்த அமைச்சருக்கு தெரியப்படுத்திய உடனே, காரை நிறுத்திவிட்டு உடனடியாக கீழிறங்கினார். பின்னால் வந்த கட்சிப் பிரமுகர் ஒருவரின் காரில் ஏறி சொந்த ஊருக்குக் கிளம்பினார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருக்கும் அமைச்சர், மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகளுடன் பேசி, தனக்கும், தன்னுடன் இருந்தவர்களுக்கும், தனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பரிசோதனையும் முடிந்துவிட்டது. இந்நிலையில், அமைச்சருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் அச்ச மனநிலையிலேயே இருக்கிறார்கள்.

-து.ராஜா