பரபரப்பைக் கிளப்பிய முதல்வரின் சேலம் விசிட்!

கடந்த ஜூன் 10-ஆம் தேதி மாலை தமிழக முதல்வர் எடப்பாடி சென்னையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்றார். முதல்வர் வரும் தகவலறிந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி யருகே ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அங்கே முதல்வரின் கார் நிற்காமல் சேலம்- திருச்சி சாலைப்பிரிவு ரவுண்டானா அருகில் நின்றது. அங்கு பலத்த பாதுகாப்போடு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி சேலம் சென்றார். இவ்வாறு முதல்வர் கார் மாறிச்செல்வதைப் பின்தொடர்ந்து வந்து படமெடுக்கமுயன்ற ஊடகத்தினர் கைதுசெய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் கார் இவ்வழியே வரும்போது கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மா.செ. குமரகுரு வரவேற்பு கொடுப்பது வழக்கம். அன்றும் அதேபோல் வரவேற்பு இருக்கலாமென ஊடகத்தினர் காத்துக்கொண்டிருந் தனர். முதல்வரின் கார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நிற்காமல் சேலம்- திருச்சி சாலை ரவுண்டானாவை நோக்கி விரைந்தது. எனவே பத்திரிகையாளர்களும் முதல்வரின் காரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

முதல்வர் கார் மாறும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி உட்பட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர் கார்மாறும் காட்சியைப் படமெடுக்க காத்திருந்த பத்திரிகையாளர்களைக் கண்டதும் காவல்துறையினருக்கு கோபம் ஏற்பட்டது. யாரும் படமோ, வீடியோவோ எடுக்கக்கூடாதென எச்சரித்தபடியே 3 பத்திரிகையாளர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று ஒரு அறையில் அடைத்து, அரைமணி நேரம் கழித்தே விடுவித்தனர்.

Advertisment

முதல்வர் கார் மாறும் இடத்தில் அ.தி.மு.க. பிரபலங்கள் யாரும் இல்லை. அந்த இடத்தில் ஊடகத்தினரைப் பார்த்ததும் காவல்துறையினருக்கு ஏன் அவ்வளவு கோபம் வரவேண்டும், முதல்வர் கார் மாறுவதைப் படமெடுப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன என மக்கள் விவாதித்துவருகிறார்கள்.

-எஸ்.பி.சேகர்

கோயில்களைத் திறக்கக்கோரி நூதனப் போராட்டம்!

Advertisment

தமிழகத்தில் கோயில்களைத் திறக்கக்கோரி இந்துமுன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச் சகம் கோயில்கள், மால்கள் உள்ளிட்ட வற்றை மத்திய அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றித் திறக்கலாம் என்று அறிவித் துள்ளது. இதுதொடர்பான இறுதிமுடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாமென அறிவித்திருந்த்து.

ss

அதன் அடிப்படையில் கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கோயில்களைத் திறக்க அனுமதி யளித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுவரையில் கோயில் திறப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கோயில்களைத் திறக்க இந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களின் முன்பாக இந்து முன்னணி யினர் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கலிலுள்ள அபிராமி அம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், மேலும் பழனி, பாலசமுத்திரம், ஆயக்குடி உள்ளிட்ட 44 கோயில்களில் இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-சக்தி

விருந்தோடு மருந்தும் தந்து அசத்திய மணமக்கள்!

கொரோனா ஊரடங்கு நெருக்கடியால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் பலவற்றையும் குறித்த தேதியில் நடத்தமுடியாமல் திணறுகிறார்கள் பொதுமக்கள். அப்படியே நடத்தினாலும், 50 பேருக்குமேல் அனுமதியில்லை. இதனால், அமைச்சர் வீட்டுத் திருமணமும் எளிய முறையிலேயே நடக்கிறது. இப்படி நடந்தவொரு திருமண விழாவில், புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள் மணமக்கள். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவில் உள்ளது வெங்கடாசலபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்த மதிவாணன், நக்கீரன் இதழின் உதவி ஆசிரியர். இதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரியை, கடந்த ஜூன் 7-ஆம் தேதி கரம்பிடித்தார் மதிவாணன்.

ss

ஒருபக்கம் விருந்து நடந்துகொண்டி ருக்க… இன்னொருபக்கம், இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி வழங்கினார் கள். வெங்கடாசலபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பரமேஸ்வரனுக்கு, மருந்தின் முதல் தொகுப்பினை வழங்கி, பயன் படுத்தும் முறையையும் விளக்கினார் ஹோமியோபதி மருத்துவர் சுமதி சிவராமன். இதைத்தொடர்ந்து கூடுதலாக 1,500 பேருக்கான மருந்தினை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சாத்தூர் நகரச் செயலாளர் ஜீவாவிடம் மணமக்கள் வழங்கினார்கள். மேலும், முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு, முகக்கவசமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

இதுபற்றி நம்மிடம் பேசிய மதிவாணன், ""சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆர்சனிக்கம் ஆல்பம் மருந்தினை நோயெதிர்ப்பு ஆற்றலை அதி கரிக்கப் பரிந்துரைத்தது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி இந்த மருந்தினை, திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மட்டுமின்றி, வீடுவீடாக வழங்கவும் முடிவுசெய்தோம். எங்களால் முடிந்தள வுக்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிட் டோம்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

-ராம்கி