பட்ட காலிலே படும் என்பது கேரளாவைப் பொறுத்தவரை உண்மையாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த கேரளத்தையும் புரட்டிப்போட்ட பருவமழை 20 ஆயிரம் கோடி சேதம் ஏற்படுத்தியதுடன் கிட்டத்தட்ட 500 உயிர்களை பலிகொண்டும் போனது. அதன் தாக்கத்திலிருந்தே விடுபடாத நிலையில் மீண்டும் இந்த ஆண்டு அதே போன்றதொரு கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார் வருணபகவான்.
தென்மேற்கு பருவமழை, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கணக்கை உடைத்து மற்ற மாவட்டங்களில் மழைவெள் ளத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்திவிட்டு பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்ட மலைக்கிராமங்களைச் சுருட்டி உயிர்ப் பலி வாங்கியிருக்கிறது. மலப்புரத்தில் கவழப்பாறயில் மலை இடிந்துவிழுந்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இரண்டு மாடிக் கட்டடங்களின் இடிபாடுகளோடு 15 அடி உயரத்துக்கு மண் புதைந்து இருப்பதால் மீட்புப் படையினர் அந்த உடல்களை மீட்க போராடிவந்தனர். 4 நாட்களில் 18 பேரின் உடல்களை மட்டும்தான் மீட்க முடிந்தது. இன்னும் 58 பேர் மண்ணுக்குள் புதைந்திருப்பதாக கிராமவாசிகள் கூறுகிறார்கள். இதில் சுகன் என்பவர் தாய், தந்தை, மனைவி, குழந்தை, சகோதரி என எல்லாரையும் இழந்துநிற்கிறார்.
""கடந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு நாங்களெல்லாம் முகாமில் அடைக்கலமாகிவிட்டு திரும்பவந்து பார்க்கும்போது எந்த பாதிப்பும் இல்லாமல் வீடும் ஊரும் அப்படியே இருந்தது. அந்த மாதிரிதான் இந்த முறையும் எங்களுக்கு பாதிப்பு இருக்காதுனு நினைச்சி இங்கே இருந்ததுனால குடும்பத் தையும் இழந்திருக்கிறோம். ஊர் இருந்த அடையாளமே இல்லாமலிருக்கிறது'' என்றனர் உயிர் பிழைத்தவர்கள்.
ராகுல்காந்தியின் தொகுதியான வயநாடு புத்துமலையில் மலை சரிந்துவிழுந்து 22 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 9 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்ட னர். "அரசு தற்போது மலையை தனியார்வசம் ஒப்படைத்திருக்கிறது. அவர்கள் பாறையை உடைத்து எடுத்துவிட்டு மண்ணைவிட்டுப் போய்விடுகின்றனர். இது நிலச்சரிவு அல்ல பாறைகள் உடைத்ததால் வந்த வினை' என குற்றம்சாட்டினர் அப்பகுதியினர்.
கோட்டயம், எர்ணாகுளம், கொச்சி, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் என மத்திய கேரளாவும் வெள்ளத்தில் மிதக்கிறது. பக்ரீத் பண்டிகைக்கு தயாராக இருந்த பிரதான கோழிக்கோடு மார்க்கெட் வெள்ளத்தில் மூழ்கியதால் பலகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பலி எண்ணிக்கை 78 என்று அரசு அறிவித்தது. இது 125-ஐ தாண்டும் என்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கூறினார்கள். இதனிடையே, நிவாரணப் பொருட்களை வழங்கவிடாமல் சமூக வலைத் தளங்கள் மூலம் விஷமப் பிரச்சாரம் செய்ததாக ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம்சாட்டுகிறார் முதல்வர் பினரயி விஜயன்.
-மணிகண்டன்