ளுந்தூர்பேட்டை அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது எறஞ்சி கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள காய்ச்சக்குடி, குருபீடபுரம், கூந்தலூர் ஆகிய கிராமங்களில், விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்களில் செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்தப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதியிலுள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் நின்றுகொண்டு, "நிலத்தை கையகப்படுத்தக் கூடாது!' என்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுதனர். சிலர் போராட் டத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும்பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த எடைக்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் நிலத்தை தொழிற்சாலைக்கு கையகப்படுத்தக் கூடாது என்று மனு அளித்துள்ளனர்.

dd

இதுகுறித்து, காச்சக்குடி விவசாயி சாமிநாதனிடம் கேட்டோம். "ஐந்து நாட்களாகத் தொடர்ந்து வந்த அதிகாரிகள் குழுவினர், எங்கள் கிராமப் பகுதியிலுள்ள விளைநிலங்களைப் பார்வையிட்டனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் நிலங்களின் பதிவேடுகளையும் வாங்கிச் சென்றனர். இதன் பிறகுதான் தொழிற்சாலைக்கு 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடப்பதாக தகவல் கிராமங்களெங்கும் பரவியது. இதையடுத்து போராட்டத்தில் இறங்கியதோடு, மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தோம். அவரோ, உங்கள் கிராமப்பகுதியில் தொழிற்சாலை கொண்டுவருவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. உங்கள் நிலங்களைக் கையகப்படுத்த மாட் டோம் என வாய்மொழியாக உறுதி யளித்து, எங்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்'' என்றார்.

கடந்த ஆண்டு வேப்பூர் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் தொழிற்சாலை தொடங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தப்போவ தாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதையடுத்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், "இப் பகுதியில் தொழிற்சாலை எதுவும் கொண்டு வரவில்லை. நிலம் கையகப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை'' என்று தெளிவுபடுத்தினார்.

Advertisment

எறஞ்சி மணிவண்ணன், "எங்கள் பகுதியில் அதிகாரிகள் விவசாய நிலங்களை பார்வையிட்டதால்தான் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினோம். அரசு, தொழிற்சாலைகள் கொண்டுவரட்டும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்கட்டும், வரவேற்கிறோம். அதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத் தத் தேவையில்லை. 1989-ல் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதே எறஞ்சி கிராமத்தினருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்நிலையில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1996-ல், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மேலும் நூறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. விழுப் புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் சிட்கோ வளாகத்தில் தொழிற்சாலைகளைக் கொண்டுவர அரசு முயற்சித்தது. 2001-ல் மீண்டும் ஆட்சி மாற்றத் தால் சிட்கோ வளாகத்தில் பெரிய தொழிற் சாலைகள் எதுவும் வரவில்லை. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சில கம்பெனிகளுக்கு மட் டும் அனுமதி வழங்கப்பட்டு, தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெரிய வளர்ச்சியில்லை.

cc

2016ஆம் ஆண்டு வேப்பூர் -சேலம் நெடுஞ்சாலையிலுள்ள விளம்பாவூர் பகுதியில் சிட்கோ மூலம் தொழிற்சாலைகள் தொடங்கு வதற்காக சுமார் 200 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. அரசு கையகப்படுத்தியது. அரசு புறம்போக்கு இடமான அங்கே, தங்கள் கிராமத்துக்கான பொதுக்கட்டடங்கள் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டு, சிட்கோவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கூறி போராட்டம் நடத்திய மக்களை சமாதானப்படுத்தி சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. அந்த இடத்திலும் பெரிய அளவில் தொழிற்சாலைகள் வரவில்லை. இப்படி சிட்கோவுக்காக ஒதுக்குவதில் பெரிய பலனேதுமில்லை.

Advertisment

2001-2006 தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இதே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில். திருமாந்துறை சுங்கச்சாவடியருகே பென்னக் கோணம், பேரையூர், இறையூர், திருமாந்துறை ஆகிய கிராம விவசாயிகளிடமிருந்து 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா முயற்சியினால் சிறப்பு பொருளாதார மண்டலம் வர உள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் தற்போதுவரை அந்த நிலத்தில் கருவேல மரங்களும், விஷச் செடிகளும் தான் வளர்ந்துள்ளன. எந்ததொழிற்சாலைகளும் வரவில்லை'' என்கிறார்.

தமிழக அரசு, விவசாயிகளின் விளைநிலங் களை தொழிற்சாலைகளுக்கு கையகப்படுத்தப் போவதாகக் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவ தாகக் குற்றம்சாட்டுகிறார்கள். ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற் சாலைகளைக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டவேண்டுமென்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகளைக் கொண்டுவர நினைக்கும் அரசு, விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதபடி திட்டங்களைத் தீட்டவேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் கேட்பது நியாயம்தானே?