புதுக்கூரைப்பேட்டை கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கொஞ்சம் தாமதமாக வேனும் சட்டம் தன் கடமையைச் செய்திருக் கிறது. 17 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராஜ் தீர்ப்பு விதித்துள் ளார்.
200 பக்கங்களுக்கு நீளும் நீதிபதியின் தீர்ப்பு விவரங்களை வாசித்தபோது, பல்வேறு விஷயங்கள் நம்மை அதிரவைப்பதாகவும் நமது மனசாட்சியை அசைப்பதாகவும் இருந்தது. அதிலிருந்து கவனத்தை ஈர்த்த சில பத்திகள் நம் வாசகர்களுக்கு:
முருகேசனுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்துக் கூறும் நீதிபதி:
கண்ணகியின் இருப்பிடத்தை அறியவேண்டும், முருகேசனை இழிவுபடுத்தி தாக்கவேண்டும் என்ற பொதுவான நோக்கத்தில்தான் மேற்கண்ட 11 எதிரிகளும் ஒன்று கூடியுள்ளனர். ஊர் பொதுமக்கள் முன்னிலையில் முருகேசனின் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டி, வெறும் ஜட்டியுடன் வைத்திருந் துள்ளனர். முருகேசனின் ஜாதியை இழிவாகப் பேசி தாக்கியுள்ளனர். கண்ணகியின் இருப்பிடத்தைக் கூறவில்லை என்றால் கொலைசெய்துவிடுவ தாக மிரட்டி, அவனின் கால்களை கயிறால் கட்டி அங்கிருந்த ஆள் துளைக் கிணற் றுக்குள் தலைகீழாக இறக்கியுள்ளனர் என்பதை இவ்வழக் கின் சாட்சியங்கள் நிரூபிக்கின்றன.
தன் மகன் முருகேசன் மரணிக்க இருக்கும் நிலையில்... காவல்நிலையத்தை நம்பிச் செல்கிறார் அவரது தாய். ஆனால் அங்கோ, அய்யனார்கோவில் வழியாக ஒரு பாதை போகும். அந்த வழியாகத் தேடிக்கொண்டு போனோம். என் மகனை அய்யனார் கோவில் பக்கத்திலுள்ள முந்திரித் தோப்பில் ஒரு மரத்தில் கட்டிப் போட்டிருந்தார்கள். எதிரிகள் அனைவரும் அங்கு இருந்தார்கள். நாங்கள் பார்க்கும்போது என் மகனின் தலை மேற்குப் பக்கமாகவும், கால் கிழக்குப் பக்கமாகவும் படுக்கவைக்கப்பட்டிருந்தது. கை, கால் கட்டப்பட்டிருந்தது. மருது பாண்டி, மகனின் வாயில் மருந்தை ஊற்றினார். என் மகன் வாயைத் திறக்கவில்லை என்பதால் ரங்கசாமி என் மகனின் வாயை அறுத்தார். எதிரிகள் ஜோதியும், மணியும் என் மகனின் கையைப் பிடித்துக்கொண்டார்கள். என் மகனுக்கு மருந்து ஊற்றுவதைப் பார்க்கும்போது எனக்கு மயக்கம் வந்துவிட்டது. என் நாத்தனார் எனக்குக் தண்ணீர் கொடுத்தார். நாங்கள் உடனே காவல் நிலையத்திற்கு ஓடினோம். அவர்கள் "படையாச்சி பொண்ணு கேக்குதா' என்று எங்களை அடித்துத் துரத்திவிட்டார்கள்..”
அரசு சாட்சியும் தலைமைக் காவலருமான ராஜேந்திரன் பற்றி நீதிபதி கூறும்போது:
இரு நபர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகு எரிக்கப் பட்டிருந்தாலோ அல்லது கொல்லப்பட்டிருந்த பிறகு எரிக்கப்பட்டிருந்தாலோ அது தொடர்பான தடயங்கள், தகவல்கள் சுடுகாட் டில் தெரியவரு வதற்கு அதிக பட்ச வாய்ப்பு கள் உள்ளன. மேலும், எரிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகள். மற்றொருவர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர். ஊரில் யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லையென அ.சா. 47 கூறியுள்ளதிலிருந்தும், தனிப்பிரிவு காவலரான அவர் காலனிக்கோ, சுடுகாட்டுக்கோ சென்று, தான் பார்த்ததாகவோ விசாரித்ததாகவோ கூறவில்லை என்பதிலிருந்தும், அவர் தனக்குத் தெரிந்த உண்மையான விவரங்களை சாட்சியத்தில் கூறவில்லை என்பதும் தெளிவாகத் தெரியவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழக்கு விசாரிக்கப்படுவதற்கே கட்சித் தலைவரும், ஊடகங்களும் வரவேண்டியிருப்பது பற்றிக் கூறும் நீதிபதி:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பின்தான் இந்த வழக்கு தாமதமாகப் பதிவுசெய்யப் பட்டது என்று உயர்நீதிமன்ற உத்தரவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சி.பி.ஐ. போலீசார் விசாரிப்பதற்கு முன்பாக நக்கீரன் பத்திரிகையில் தான் தகவல் தெரிவித்ததாகவும், சென்னைக்குச் சென்று தொல் திருமாவளவனிடம் தகவல் தெரிவித்ததாகவும், அந்தத் தகவல்கள் பத்திரிகையில் வந்ததாகவும் அ.சா. 3 குறுக்கு விசாரணையில் கூறியுள்ளார்.
பல்வேறு உயரதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்ட பிறகே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பலவித அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுக்களைப் பெற்று இவ்வழக்கில் தாக்கல் செய்யாததை ஒரு குறையாகவோ, உண்மை மறைக்கப்பட்டுவிட்டது என்றோ கருத இயலாது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனோ, "நக்கீரன்' இதழ் ஆசிரியரோ, நிருபரோ வழக்கின் சம்பவங்கள் எதனையும் நேரில் பார்த்தவர்கள் அல்ல. எனவே அவர்களை இவ்வழக்கில் சாட்சியங்களாக சேர்க்காததை ஒரு குறையாகக் கருத இயலாது.
தங்கைக்காக உருகிய அண்ணன்தான், பின்பு தங்கையின் உயிரெடுத்த அண்ணன்:…
ஏ1 எதிரிக்கு ஏ2 எதிரி மட்டுமே மகன் என்பது அரசு சாட்சி ஆதாரம் 34-ல் குறிப்பிடப்பட்ட விவரங்களிலிருந்து தெரிய வரு கிறது. தனக்கு அப்பா, அம்மா பாசம் அதிகம் கிடைத்தது கிடையாது என் றும், தன் அண்ணன் எது சொன்னாலும் செய்துதருவார் என்றும் கண்ணகி யின் கடிதங்களில் 20-ஆவது பக்கத்திலுள்ள கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. பெற்றோரின் பாசம் அதிகம் கிடைக்காமலிருந்த தனது தங்கையான கண்ணகியின் மீது ஏ2 எதிரி மிகுந்த அன்பு காட்டிவந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. தான், மிகவும் அன்பு காட்டிவந்த தங்கையின் செயல் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால்தான், குற்றமுறு சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஏ2 எதிரி கூடுதல் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார்.
காவல்துறையின் திட்டமிட்ட செயலின்மையையும் நீதிபதி சொல்லிக்காட்டத் தவறவில்லை:
இவ்வழக்கு சம்பவம் தொடர்பாக உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, 9 நாட்கள் கழித்து 17-07-2003 அன்று அ.சா.ஆ. 34 முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவலறிக்கையும் ஏ 14, ஏ 15 எதிரிகளால் போலியாகப் புனையப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. கண்ணகி-முருகேசனின் இயற்கையல்லா மரணம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றும் இ.த.ச. பிரிவு 174-ன் கீழ் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.
இந்த வழக்கின் தன்மை குறித்து இறுதியில் கூறிய நீதிபதி...
கண்ணகி மற்றும் முருகேசனின் செயலால் தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டதாக அல்லது தாங்கள் அவமதிக்கப்பட்டதாகக் கருதி மட்டும்கூட எதிரிகள் செயல்படவில்லை. அதையும் தாண்டி ஆணவத்துடனும் அச்சமற்ற தன்மையுடனும் சாதாரண மனித சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்ற நிலையையும் தாண்டிய ஒன்றாக உள்ளது.
முருகேசனையும் கண்ணகியையும் எரிக்க முடிந்த குற்றவாளிகளுக்கு நீதியை எரிக்க முடியவில்லை என்பதுதான் இந்த வழக்கில் ஒரே ஆறுதல்.