நாடே கொரோனா நெருக்கடியான காலகட்டத்திலிருந்த போதிலும், விவசாய, மற்றும் பொது மக்களின் வாழ்வுரிமையில் கை வைக்கிறது மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா. அதனை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குரல் கொடுக்க, அ.தி.மு.க அரசின் முதல்வர் எடப்பாடியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ff

மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்களின் மத்திய அமைப்பான சி.ஐ.டி.யூ. மே 18 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் நகரின் மின் வாரியத்தின் அலுவலகத்தின் முன்னே மின் வாரிய ஊழியர்கள் திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் வழியாக மசோதாவிற்கு எதிரான பிரளயத்திற்குப் புள்ளி வைத்திருக்கிறார்கள். மாநில மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்தும், பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களின் மின் விநியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதைக் கண்டித்தும் குரல் கொடுத்தனர். திருத்தச் சட்டத்தால் மாநில மின் ஊழியர்களின் உரிமைகள் பறிபோவது தடுக்கப்பட வேண்டும். மாநில மின் வாரியங்களையும் பிரிக்கக் கூடாது என்ற தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சி.ஐ.டி.யூ.வின் மாவட்டப் பொருளாளரான யோவான் நம்மிடம் விரிவாகப் பேசினார்.

Advertisment

""மத்திய அரசு இந்த மின்சார சட்டத்திருத்தம் எந்தக் கோணத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் அடிப்படைக் கட்டமைப்பே ஆடி விடும்.

விவசாயமும், சிறுகுறு தொழில்கள் வளர்ச்சியடைய வேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். அதே சமயம் ஏழை நடுத்தர மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே கலைஞர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ’போன்றவர்களின் அரசுகள் இந்தத் தரப்பினருக்கு மானியமாக மின்நுகர்வில் சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தன. குறிப்பாக விவசாயத்திற்கு இலவச மின் விநியோகமளித்து விவசாயிகளைத் தொடர்ந்து பாதுகாத்து வந்தார்கள். தற்போது அறிமுகப் படுத்தப்படும் இந்த மசோதா விவசாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களின் வாழ்வாதா ரத்திற்கு உலை வைத்துவிடும்.

ff

Advertisment

தமிழகத்தைப் பொறுத்தவரை, விவசா யத்திற்கு மின்சாரம் இலவசம். மக்களின் பயன்பாட்டின் யூனிட் மின் கட்டணம் ரூபாய் 1.10.பைசா. அதில் 100 யூனிட் வரை இலவசம். குடிசைத் தொழில்களுக்கு மானிய மின்சாரம் போன்ற திட்டங்கள் நடைமுறையிலிருக்கிறது. புதிய திருத்தத்தால் அது ரூ.7 என்று உயரும் பட்சத்தில் வறுமை நாட்டில் யார் தான் தாங்குவார்கள்.

2003ன் போது வாஜ்பாய் அரசு இந்த மின்சார சட்ட திருத்த மசோ தாவை பல குளறுபடி களுடன் கொண்டு வந்த போது, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்த்தார்கள். வாஜ்பாய் அரசுக்குப் போதிய மெஜாரிட்டி இல்லை என்பதால், அதனைக் கிடப்பில் வைத்து விட்டது. அந்த மசோதா காலாவதியாகும் நிலையை எட்டிக் கொண்டிருக்கும் போதுதான், ஏற்கனவே அம்பேத்கர் வகுத்த 44 தொழிலாளர் நலச்சட்டத்தை நான்கு தொழிலாளர்கள் நலச் சட்டம் என்று திருத்தியமைத்து தற்போது மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது.

இந்த மின் மசோதாவில் பல குளறுபடிகள் உள்ளன. மக்களைப் பாதிக்கும் என்று சொல்லி ஜெ.’உயிரோடிருக்கும் வரை இந்த மசோதாவை எதிர்த்தார். ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த முறையே மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வர முயற்சித்தது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் விளைவுகள் திசை மாறிவிடும் என்ற நோக்கில் கொண்டு வரவில்லை. இப்போது கொண்டு வரப்பட்டிருக்கு. இதனைக் கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் எதிர்க்கின்றன. இந்த மசோதாவின் மூலம் கார்ப்பரேட்களை உருவாக்கும் வேலைதான் நடக்கின்றன.

அதோடு மட்டுமல்ல, மாநில மின் வாரியங்கள் பிரிக்கப்பட்டு அதன் தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகிவிடும். மின்சாரம் வியாபாரமாக்கப்பட்டு விடும். விவசாயத் திற்கான மின்கட்டணத்தைச் செலுத்துங்கள். பின்னர் உங்களுக்கான மானியத்தை நாங்கள் உங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம். நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதாவது சமையல் எரிவாயு கேஸ் விஷயத்தில் மக்கள் முழுத்தொகையைக் கட்டுவார்கள். பின் அதற்கான மானியம் அவர்களின் வங்கியில் செலுத்தப்படுகிற மாதிரி சொல்வார்கள். ஆனால் சமையல் எரிவாயு மானியத்தில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்ற மாதிரி, இதிலும் நடக்க வாய்ப்பு. அப்படி ஒரு திட்டம் வருமெனில் காலப்போக்கில் படிப்படியாக விவசாயிகளின் மின் மானியத் தொகை அப்படியே காணாமல் போய்விடும்.. எனவே 11 லட்சம் விவசாயிகளைக் கொண்ட தமிழகத்தின் விவசாயிகளின் விவசாயம், மற்றும் தொழில்களில் கை வைத்தால் ஷாக் அடிக்கும்'' என்றார் அழுத்தமாக.

-பரமசிவன்

படங்கள் : இராம்குமார்