கடந்த சில வருடங்களாக பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கை பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. தெரு நாய்க்கடியால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். நாய்கள் குறுக்கிடுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களாலும் உயிரிழப் பும், கை, கால் முறிவும் தொடர்கதை யாகிவருகிறது. இந்நிலையில், வளர்ப்பு ஆடுகளைத் தெரு நாய்கள் கடித்ததால் ஆடுகளைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கிறார் பிச்சையம்மாள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் மேற்குபேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல் ஜபார் மனைவி பிச்சையம்மாள். கடந்த ஒரு வருடமாக 9 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்தார். கடந்த மாதத்தில் ஒருநாள், கம்பி வேலி போடப்பட்ட தனது தோட்டத்திற்குள் ஆடுகளை மேய விட்டுவிட்டு கேட்டை சாத்திவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். மதியம் ஆடுகளைப் பார்க்க வந்தவர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சியாகி விட்டார். ஆங்காங்கே தோல் கிழிந்தும், குடல்கள் சரிந்தும், ரத்தம் சொட்டச் சொட்ட பல ஆடுகள் இறந்தும், சில ஆடுகள் உயிருக்குத் துடித்தபடியும் கிடந்தன. ஆடுகளைக் கடித்துக்கொண்டிருந்த நாய்கள், பிச்சையம் மாளைப் பார்த்ததும் ஓடிவிட்டன. கடன் மூலமாக வாங்கிய ஆடுகள் அனைத்தையும் நாய்கள் கொன்றுவிட்டனவே, இனி எப்படி கடனை அடைப்பேனென்று பிச்சையம்மாள் கதறியழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒரு வருட உழைப்பையும் சீட்டுக்கட்டுபோல தெரு நாய்கள் சரித்துவிட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் விசாரணை செய்தார். கால்நடை மருத்துவர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தார்.
ஒரே நேரத்தில் 9 ஆடுகளையும் நாய்களுக்கு பறிகொடுத்த பிச்சையம்மாள் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
இதேபோல கறம்பக்குடியில் சிறுவன் அஸ்ரஃப், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் அச்சிறுவனை கீழே தள்ளிக் கடித்துக் குதறிவிட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றினர்.
தெரு நாய்களுக்கு இப்படி வெறி ஏறுவதற்கு பல்வேறு காரணங்களைக் கூறுகின்ற னர். கடைவீதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளின் கழிவு களை மொத்தமாக பொது இடங்களில் கொட்டும்போது அவற்றை தின்பதற்காகக் கூட்டம்கூட்டமாக நாய்கள் திரிவதும், சண்டை யிட்டுக்கொள்வதும், இறைச்சி பழக்கத்தில் மனிதர்களை, விலங்குகளைக் கடிப்பதுமாக இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். சிலர், தெரு நாய்களுக்கு உணவளிப்பதாகக் கூறிக்கொண்டு, பிராய்லர் கோழிக்கழிவுகள், மீன் கழிவுகளை கடை கடையாக சேகரித்து, அவற்றை தெரு நாய்களுக்குப் போடுவதால் அப்பகுதியிலுள்ள தெரு நாய்கள், அனைவரையும் அச்சுறுத்திவருகின்றன. தோல் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களால் மனிதர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலுப்பூரில் தெருநாய்கள் பாது காப்பிற்காக பெரிய கூண்டு அமைத்து பராமரித்து வரும் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குநர் வீரசராத்பவார் நம்மிடம், "தமிழ்நாடு முழுவதும் அரசாங்கம் நிதி ஒதுக்கினாலும் பல வருடங்களாக ஏ.பி.சி. செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் சம்மதித்து, நாய்களைப் பிடித்துக் கொடுத்தால் நாங்கள் ஏ.பி.சி. செய்து கொடுக்கிறோம் என்று சொல்லியும்கூட யாரும் முன்வரவில்லை. மேலும், வெறி நோய் தடுப்பூசிகளும் போடுவதில்லை. நாங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1000 நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடுகிறோம். கடந்த வாரம் புதுக்கோட்டை மாநகராட்சியில் சுமார் 50 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டிருக்கிறோம். ஊசி போட்ட நாய்களுக்கு அடையாளம் வைத்திருக்கிறோம்.
மேலும், எங்கள் காப்பகத்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், விபத்தில் காயமடைந்த நாய்களுக்கு சிகிச்சையும், உணவும் அளித்துக் காப்பாற்றி, மீண்டும் பிடித்த இடத்தில் விடுகிறோம். அதே நேரத்தில் நகராட்சிகளிலிருந்து எங்களுக்கு அளிக்கும் நாய்களில், வெறி நோயுள்ள நாய்களைத் தனியாகப் பிரித்துக்கூடத் தரமாட்டார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாநகராட்சியிலிருந்து கொண்டுவந்த 192 நாய்களில் 40 நாய்களுக்கு வெறி நோய் இருந்தது. இவற்றிடமிருந்து மேலும் பல நாய்களுக்கு வெறி நோய் வந்துவிட்டது. உடனடியாக தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசிகள் போடுவதும், ஏ.பி.சி. செய்வதும் அவசியமாகிறது'' என்றார்.
இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினர் மு.மாதவன் நம்மிடம், "விவசாயிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை நாய்கள் கடித்துக் கொன்று போட்டுவிடுகின்றன. இதனால் அந்த குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். மழைக்கால பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது போல நாய்கள் கடித்துக் கொன்ற கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கோழிக் கழிவுகளால் தான் நாய்களுக்கு தோல் நோய்கள் வருகிறது என்றால் அந்த கழிவுகளை நாய்களுக்கு போடுவதைத் தடை செய்ய வேண்டும்'' என்றார். தெரு நாய்களால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.