"அமித்ஷா கூட்டணி அரசு எனச் சொல்லவில்லை அமித்ஷாவின் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது'' என எடப்பாடி சொன்னது பா.ஜ.க.வினருக்கே அதிர்ச்சியாகிவிட்டது. அதற்குப் பதிலாக அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை, "தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் கூட்டணி அரசு என்பதே இல்லை''’என டெல்லியில் பேட்டியளித்தார். அதைக்கேட்ட எடப்பாடி உடனடியாக "அ.தி.மு.க.வில் தன்னிச்சையாக யாரும் இதுபோல பேசக்கூடாது'’என தடை விதித்தார். எடப்பாடி தடை விதித்ததைப் போலவே பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் ‘"பா.ஜ.க.வினர் யாரும் கூட்டணி பற்றிப் பேசக்கூடாது'’ என தடை விதித்தார். இரண்டுபேரும் ஒரே நேரத்தில் தடை விதித்தது ஏன் என அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.
நாம் தமிழர் சீமான் "அ.தி.மு.க. என்னிடம் பேசியது. எனக்கு துணை முதல்வர் பதவி தருவேன் எனச் சொன்னார்கள். அதேபோல்தான் தம்பி விஜய்யிடமும் பேசியிருப்பார்கள். அவருக்கும் துணை முதல்வர் பதவி தருவேன் எனச் சொல்லியிருப்பார்கள்''’எனப் பேசினார். எடப்பாடியும் நயினார் நாகேந்திரனும் எதன் அடிப்படையில் கூட்டணி பற்றிப் பேச வேண்டாம் எனச் சொல்கிறார்கள். சீமான் எந்த முகாந்திரமும் இல்லாமல் இப்படி அ.தி.மு.க. என்னிடம் பேசியது எனச் சொன்னார் என ஆராய்ந்தபோது, அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் மாறி, மாறி சீமான் மற்றும் விஜய்யிடமும் பேச்சுவார்த்தை நடத்திய விவரங்கள் தெரியவந்தது.
சீமான் தற்பொழுது விஜயலட்சுமி வழக்கில் சுப்ரீம்கோர்ட் கொடுத்த தடையால் சிறைக்குப் போகாமல் தப்பித்து வாழ்கிறார். அவர் மீது அந்நியச்செலாவணி மோசடி வழக்குகள் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்குகள் என ஒன்றிய அரசின் ஏஜென்சிகள் அவரை தூக்கிச் சாப்பிடும் நிலை யுள்ளது. இதற்காகத்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சென்னைக்கு வந்த நிர்மலா சீதாராமனை ரகசியமாக சந்தித்தார் சீமான். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் விஜயலட்சுமி வழக்கில் பெண் நீதிபதி நாகரத்தினா சீரியஸாக கவனித்துவருகிறார். அந்த வழக்கை பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டில் தமிழக அரசு துரிதமாக நடத்தினால் அதற்கு ஆறரை வருடம் தண்டனை கிடைக்கும். அவ்வளவு ஆதாரங்களை சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி கொடுத்திருக்கிறார்.
விஜயலட்சுமியை சமாதானப்படுத்த சீமான் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. வழக்கு ட்ரையலுக்கு வருமென்றால் சீமான் தண்டிக்கப்படுவார் என்கிற சூழல் நிலவுகிறது. அதனால் அந்த வழக்கிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம் என பா.ஜ.க. சீமானுக்கு உறுதியளித்துள்ளது. விஜயலட்சுமி விவகாரத்தை கூட்டணிப் பேச்சுவார்த் தைக்கான அச்சாரமாக பா.ஜ.க. முன்வைத்துள்ளது. தொகுதிகள் பற்றிக் கவலையில்லை. சீமானை சுற்றியிருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ. சீட் என்ற உறுதியுடன் தேர்தலை சந்திக்க ஒரு பெரும் நிதி உதவியையும் பா.ஜ.க. தரத்தயாராக உள்ளது. இதையெல்லாம் ஏற்பாடு செய்வதற்கு என ஒரு புரோக்கர் படையும் தயாராக இருக்கிறது. இனி சீமான் பிரதமர் மோடி படத்தை வைத்து களமாட வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க. இடம்பெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேசவேண்டும். எடப்பாடி, நயினார் போன்ற மேடையில் பேசத் தெரியாதவர்களால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. சீமான் கூட்டணிக்கு வந்தால் மிகப்பெரிய மேடைப் பேச்சு பிரச்சாரமாக அது அமையும் என பா.ஜ.க. தரப்பிலிருந்து பேசப்பட்டுள்ளது.
அதைப்போல் நடிகர் விஜய்யிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர் ஆதவ் அர்ஜுனா மூலம் முதலில் அ.தி.மு.க.விடம் பேசினார். 90 சீட்டுகள், இரண்டரை வருடம் நான் முதலமைச்சர் என விஜய் விதித்த கண்டிசன்களால் திணறிப்போன எடப்பாடி தனது மகன் மிதுனை வைத்து ஒருத்தர் மூலம் விஜய் மனசைக் கரைத்துவந்தார். இந்த பேச்சுவார்த்தைகள் முடிவே பெறாமல் நீண்டுகொண்டே வந்தன. விஜய்க்காக அவரது அப்பா சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர், அவரது மனைவி சங்கீதா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் கூட எஸ்.பி.வேலுமணி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விஜய்யின் கண்டிஷன்கள் குறையவேயில்லை. ரஜினி அரசியலுக்கு வராமல் போனவுடனே அமித்ஷா, நடிகர் விஜய்யை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். விஜய்யின் ஆடிட்டரும் பொருளாளருமான வெங்கட்ராமன் ஒரு பிராமணர். அவரும் திரிஷாவும் ஆர்.எஸ்.எஸ்.ஸோடு தொடர்பு வைத்துள்ளவர்கள். ரஜினி அரசியல் பெயிலியர் ஆனபோது ஆர்.எஸ்.எஸ்., திரிஷா மற்றும் வெங்கட்ராமன் மூலமாகத்தான் விஜய்யை தொடர்புகொண்டது. விஜய்யின் கருப்புப் பண விவகாரங்களை மத்திய அரசு மூலம் கவனித்துவந்த வெங்கட்ராமனுக்கு, ஆர்.எஸ்.எஸ்.சும் நிர்மலாவும் நெருக்கமானவர்கள். இந்த நெருக்கம்தான் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த வெங்கட்ராமனை பிடித்த பா.ஜ.க., விஜய்யை அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டுவர பேசிவருகிறது.
நடிகர் விஜய் மற்றும் சீமானிடம் நடத்திய பேச்சுகளில் பா.ஜ.க.விற்கு கிடைத்த முன்னேற்றம்தான் காரியம் மிஞ்சிவிடக்கூடாது என உடனடியாக எடப்பாடியை பேச வைத்தது. அதனால்தான் அமித்ஷா கூட்டணி அரசு என வார்த்தைகளை விட்டார். எடப்பாடி கூட்டணி அரசை ஏற்கவில்லையென்றால் பா.ஜ.க., சீமானுடனும் விஜய்யிடமும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிடும். கூட்டணியில் அ.தி.மு.க.விற்கான முக்கியத் துவத்தை வலியுறுத்தத்தான் எடப்பாடி கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை என்று பேட்டியளித்தார். அதை தம்பித்துரை வேறு வகையில் எதிரொலிக்க, இதைப்பற்றி யாரும் பேசக்கூடாது என எடப்பாடி தடை விதித்தார்.
தி.மு.க.விற்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை கொண்டு வரும் முயற்சிகள் தமிழகத்தில் வேகம் பெற்றுள்ளன. இந் நிலையில் தமிழகத்தில் அ.தி. மு.க., பா.ஜ.க கூட்டணி அமைவதற்கு முன்பு எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பில் சீமானின் ஓட்டுக்களை விஜய் கபளீகரம் செய்கிறார் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் சீமானின் ஓட்டுக்கள் வெறும் 2 சதவிகிதம்தான். விஜய்யின் வாக்குகள் அதிக பட்சம் 4 சதவிகிதம். அ.தி.மு.க. அதிகபட்சம் நாற்பது தொகுதிகளில்தான் ஜெயிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கள எதார்த்தத்தை மாற்ற வேண்டுமென்றால் ஒரு அர சியல் இரசாயன மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அதற் கான முயற்சிகளில் பா.ஜ.க. குட்டிக்கரணமடித்து வருகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசும் எடப்பாடி, “பல புதியவர்கள் கூட்டணிக்குள் வரப் போகிறார்கள் அதனால் பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந் தாத கூட்டணி என யாரும் கவலைப்பட வேண் டாம்''”எனப் பேசி வருகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
_____________
இறுதிச் சுற்று!
மறைந்தார் போப்!
கத்தோலிக்க திருச் சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவால் ஏப்ரல் 21, திங்கட்கிழமை யன்று காலமானார். வாடிகனில் அவரது இல்லத்தில் அவரது உயிர்பிரிந்ததாக வாடி கன் அறிவித்தது. அர்ஜெண்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டு களாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்துவந்தார். வயதுமூப்பின் காரணமாக சுவாசப்பிரச்சனை ஏற்பட்ட தால், ரோம் நகரிலுள்ள மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சேர்க்கப்பட்ட போப், உடல் நலமடைந்து வீடு திரும்பினார். கடந்த ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினார். இந்நிலையில், அவர் காலமான செய்தி யறிந்து, உலகம் முழுவதுமுள்ள கத்தோ லிக்க மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நாடகம்!
சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் காரசார விவாதம் திங்கள் கிழமை நடந்தது. நீட் தேர்வு குறித்து பொய் யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்ட தாக குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச் சாமி. அதனை எதிர்கொண்டு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "வாக்குறுதி கொடுத் தோம். மறுக்கவில்லை. ஆனால், தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்திருந்த தால் நீட் தேர்வை ரத்து செய்திருப்போம். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, 2026 மட்டுமல்ல 2031-லும் கூட்டணி சேரமாட் டோம் எனச் சொல்லி விட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறீர்களே? உங்க ளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக் கிறது. நீட்டை ரத்து செய்தால் தான் உங்க ளுடன் கூட்டணி எனச் சொல்லத்தயாரா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?'' என்று பதிலடி தந்தார் ஸ்டாலின்.
-இளையர்