(9) சாதிக் கொடுமைக்கு எதிராக...!
குடிஅரசு’ இதழில் ‘சமதர்ம அறிக்கை’என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட்டார் பெரியார்.
அதற்காக அவர் எழுதிய முன்னுரையில்... உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவிற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் .. மேல் சாதியார் கீழ்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையான தாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது” (குடிஅரசு 4.10.1931)
முதலாளித்துவ -நிலப்பிரத்துவ பொருளாதார அமைப்பு முறையும், சாதிக்கட்டமைப்பும் பின்னிப் பிணைந்துள்ளது என தந்தை பெரியார் தனது முன்னுரையில் சரியாகவே சுட்டிக்காட்டியுள் ளார். பொருளாதார சுரண்டல், சாதிக்கொடுமை இரண்டை யும் ஒரு சேர எதிர்த்துப் போராட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைபூர்வமான நிலைப்பாடு.
ஆர்.எஸ்.எஸ். விரும்பும் ஆட்சியதிகாரம் மேலே குறிப்பிட்ட இரு வகைச் சுரண்டலை தீவிரமாக முன்னெடுக்கும் மோசமான கூட்டே ஆகும். தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் சாதிக்கொடுமையை எதிர்த்து எவ்வாறு போராடினார்கள் என்பதுதான் இக்கட்டுரை.
காந்தியடிகளின் அணுகுமுறை
மதச்சார்பின்மை, மதநல்லிணக்கத்தை உறுதியாக வலியுறுத்தி, அதற்காக உயிரையும் பணையம் வைத்துப் போராடிய காந்தியடிகளின் சமூகப் பொருளாதாரக் கருத்துகள் அனைத்தும் மதத்தைச் சார்ந்த நெறிமுறையின் அடிப்படையில் அமைந்திருந்தன. ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நெறிகளை அவர் வலியுறுத்தினார். நால்வர்ண சாதிய முறையை அவர் ஆதரித்துப் பேசியிருந்தாலும், தீண்டாமைக் கொடுமையை எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
காந்தி இந்தியா திரும்பிய பிறகு, தென்னாப்பிரிக்காவில் தன்னுடன் பீனிக்ஸ் பண்ணையில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த செல்வன் என்பவரின் (துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்) மகனை தரங்கம்பாடியில் இருந்து தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அப்போது அவரது ஆசிரமம் அகமதாபாத் நகருக்கு அருகில் இருந்தது. ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவரை தனது ஆசிரமத்தில் குடியமர்த்தினார். தனது ஆசிரம விதியில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கக்கூடாது என்ற விதியைக் கொண்டு வந்திருக்கிறார். தனது துணைவியார் கஸ்தூரிபா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, நண்பர்களாக நாம் பிரிந்துவிடலாம் என கடுமையாக வலியுறுத்தி பணிய வைத்திருக்கிறார்.
காந்தியின் உறவினர் ஒருவருக்கு தனது ஆசிரமத்தில் வர்ணாசிரமத்தைக் கடைப்பிடிக்கப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறோம் எனவும், எல்லோரும் சேர்ந்தே உணவு உண்ணுகிறோம் எனவும் 1917-ல் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த ஆசிரமத்தில் தங்கிய தலித் சமூகத்தைச் சார்ந்த தாதாபாய் என்பவருக்கு நல்ல வேலை கிடைத்தது. தனது மகளை அவர் ஆசிரமத்தில் விட்டுச்சென்றார். கஸ்தூரிபாவின் செல்லப் பெண்ணாகவே வளர்ந்த அந்தப் பெண் லட்சுமியை தலித் அல்லாத ஒருவருக்கு காந்தியடிகள் மணமுடித்து வைத்தார். ஆசிரமத்தில் ஒரே சாதியில் இனி திருமணம் நடத்தி வைக்கப் போவதில்லை என்ற முடிவையும் அவர் அறிவித்தார்.
1934-ல் “இந்து சாஸ்திரங்கள் தற்போது நிலவும் தீண்டாமைக்கு ஆதரவு நிலையை வெளிப்படுத்துவதாக அறிந்தால், நான் இந்து மதத்தை கைவிட்டு, இந்து மதத்தை எதிர்ப்பேன்” என்று அவர் எழுதினார். 1935-ல் ஹரிஜன் இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு “சாதி மறைய வேண்டும். அதில் “பொதுச் சிந்தனையில் எவ்வளவு விரைவாக சாதி ஒழிய வேண்டுமோ, அந்த அளவிற்கு நல்லது” என்றும் அவர் எழுதினார்.
வ.வே.சுப்பிரமணிய அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில், பிராமணக் குழந்தைகளுக்கு தனியாகவும், பிராமணர் அல்லாத குழந்தைகளுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டதை கடுமையாக பெரியார் எதிர்த்தார். அண்ணல் காந்திஜியின் கவனத்திற்கு இப் பிரச்சனை சென்ற பிறகும் இத்தகைய சாதிப் பாகுபாடு தடுத்து நிறுத்தப் படவில்லை என்று விமர்சனம் காந்திஜி அவர்கள் மீது உள்ளது.
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுமை நிலவிய வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டார். அப்போது பத்து நாட்கள் அண்ணல் காந்திஜி கேரளாவில் தங்கி மன்னர் குடும்பம் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்தகைய கொடுமைகளை அகற்றுவதற்கு உதவியாக இருந்தார். நாட்டில் பல மாநிலங்களில் ஆலய பிரவேசம் நடத்துமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு காந்திஜி அறைகூவல் விடுத்தார். இவ்வாறு தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்த காந்திஜியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார்
தமிழ்நாட்டில், தந்தை பெரியார் சாதி அமைப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தை நடத்தி னார். வைக்கத்தில் நடைபெற்ற ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கெடுத் தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார். பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்.
சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்த பெரியார், மூட நம்பிக்கை களையும், கடவுள் நம்பிக்கையையும், சாதிக் கொடுமைகளையும் எதிர்த்து தொடர்ந்து இயங்கியும், பேசியும் வந்தார். கருத்தியல் ரீதியிலும், களப் போராட்டங்கள் நடத்தியும் சாதிக் கொடுமைக்கு எதிராக பெரியார் முன் னெடுத்த சமூகச் சீர்திருத்த இயக்கம் மகத்தானது. மனுநீதியை மனுஅதர்மம் என்று பெரியார் சாடியதைப்போல் வேறு யாரும் கண்டித்திருக்க முடி யாது. தான் மேற்கொண்ட சமூக சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுப்ப தற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.
“பார்ப்பனர்கள் நமக்குச் செய்யும் கொடுமையை விட சூத்திரர்களாகிய நாம் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்யும் கொடுமை பன்மடங்கு அதிகம் என்று சொல்வேன்” என தலித் மக்கள் மீது பிற்படுத்தப்பட்ட மக்கள் நிகழ்த்தும் சாதிக் கொடுமையையும் பெரியார் கண்டிக்கத் தவறவில்லை.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை துவக்கியவர்களுள் ஒருவரான தோழர் பி.இராமமூர்த்தியின் சாதி மறுப்புத் திருமணத்தைப் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
1936ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமிழகத்திற்கு வந்த பொழுது அவரும், தமிழக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தியும் பெரியாரைச் சந்தித்தார்கள்.
இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு பெரியார் ராமமூர்த்தியிடம் தனியாகப் பேசினார். ராமமூர்த்தியின் குடும்பம், படிப்பு, அவர் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனார், உண்மையில் அவருக்கு அதில் நம்பிக்கை உண்டா போன்ற கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டார். பதில்களால் திருப்தியடைந்த பெரியார், இறுதியாக ஒரு கேள்வி கேட்டார், "ஏன் தம்பி, கல்யாணம் ஆயிற்றா?''’
"இல்லை''’என ராமமூர்த்தி பதில் சொன்னார்.
ஆனால் பெரியார் விடவில்லை. ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை விளக்கமாகக் கேட்டார்.
ராமமூர்த்தி கூறினார். ‘"நான் சாதி, மத நம்பிக்கை இல்லாதவன். வேறு சாதிப் பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டால் என் தாயாருக்கு மனம் நொந்து போகும். அவர் படிக்காதவர். பழைய வைதீகக் குடும்பத்திலேயே வளர்ந்தவர். நான் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்ததைக் கண்டு பெரிய உத்தியோகத்திற்கு வருவேன் என்று கனவு கண்டுகொண்டிருந்தார். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனாலும், இப்போது என் பொதுவாழ்வில் என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார்.
என் தோழர்களிடம் அவருக்கு மதிப்பு உண்டு. அவர் மனதை நான் புண்படுத்த விரும்பவில்லை. என் தாயார் மறைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளேன்.''’
இதைக் கேட்டு மகிழ்வுற்ற பெரியார், "நீ எப்பொழுதாவது கல்யாணம் செய்துகொண்டால், அப்போது நானிருந்தால் கட்டாயம் அதற்கு வருவேன்''’ என்று கூறினார்.
இந்த உரையாடல் நடைபெற்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று ராமமூர்த்திக்கும் அம்பாளுக்கும் சென்னையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது. இதில் ஒரு சிலரே கலந்துகொண்ட னர். ஆனால், சிறிது நேரத்தில் இந்தச் செய்தி பரவியதும், கட்சித் தோழர்கள் அன்று மாலையே திருமண வரவேற்பு நடத்த முடிவு செய்து சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு மண்டபத்தையும் ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே பெரியார் கூறிய வார்த்தைகள் தோழர் பி.ஆர். நினைவிற்கு வந்தன. உடனே தொலைபேசி மூலம் பெரியாருக்கு தகவல் கூறி தனது திருமண வரவேற்பிற்கு அவர் தலைமை தாங்க வேண்டுமென ராமமூர்த்தி கேட்டுக்கொண்டார். பெரியாரும், இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததுடன், வரவேற்பிற்கு அவசியம் வருவதாகக் கூறினார். அதன்படி பெரியார் உரிய நேரத்தில் மண்டபத்திற்கு வந்து வரவேற்பு விழாவிற்கு தலைமை தாங்கி புதுமணத் தம்பதியை மனதார வாழ்த்திப் பேசினார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதிப் படிநிலை எதிர்ப்பும் தேச விடுதலையோடு பின்னிப் பிணைந்த முழக்கங்கள் ஆகும். அவற்றைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் அவசியத்தை இப்போதைய நடப்புகளும் உணர்த்துகின்றன.
(தொடரும்...)