நீலவண்ண வானில் ஜெட் விமானங்கள் வெண்ணிறக் கோடு வரைந்தபடி சென்றாலே அதை அண்ணாந்து பார்த்து குதூகலிக்கும் குழந்தை மனம் நம் அனைவரிடமும் உண்டு. ஒரு விமானத்துக்கே இப்படியென்றால், எழுபதுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் விதவிதமாக வட்டமடித்தபடி, வர்ண ஜாலங்கள் காட்டியபடி மணிக்கணக்காகச் சீறிப் பாய்ந்தால் அதனைக் கண்டுகளிக்காமல் விடுவோமா?
1932-ஆம் ஆண்டு அக்.8-ம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை, 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் வகையில், சென்னை மெரீனா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி, ஞாயிறன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவாக விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் மட்டுமே நடைபெற்றுவந்தது. கடந்த 2003ஆம் ஆண்டு தமிழகத்தில் போர் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு வெளியே, கடந்த 2022ஆம் ஆண்டில் சண்டிக ரிலும், 2023ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கு முந்தைய நாட்களில் மெரீனாவில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிகளையே பல்லாயிரக்கணக் கான மக்கள் கண்டுகளித்தனர். அவற்றையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதால் சாகச நிகழ்ச்சியைக் காண சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த ஆர்வத்தோடிருந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலா மென்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் 11 மணிக்கு தொடங்கி 1 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக காலையில் 8 மணி முதலே மெரீனாவில் மக்கள் கூட்டம் குவியத்தொடங்கியது. அதற்கேற்ப தமிழக அரசின் சார்பாக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஞாயிறு விடுமுறை மட்டுமல்லாது, காலாண் டுத்தேர்வு விடுமுறையாகவும் இருந்ததால், குடும்பத்தினரோடும், உறவினர்களோடும் மெரீனாவை நோக்கி உற்சாகத்தோடு வரத்தொடங்கியதால், சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிய, மெரீனாவே குலுங்கியது! சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ.பி.சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த சாகச நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக, ஆக்ரா விமானப்படையைச் சேர்ந்த பாராசூட் வீரர்கள் 5 பேர், 8,000 அடி உயரத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தனர். அடுத்ததாக, எம்.ஐ.70 ரக ஹெலிகாப்டரிலிருந்து 28 கமாண்டோ படை வீரர்கள் மெரீனாவின் கடற்பரப்பில் குதித்து ஆச்சர்யப்படுத்தினர். அங்கே தீவிரவாதிகளால் பிடித்துவைக்கப்பட்ட பணயக்கைதிகளை மீட்கும் மயிர்க்கூச்செரியும் சாகச நிகழ்ச்சியை நிகழ்த்திக்காட்டினர். அடுத்த தாக, விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக்கரணம் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, வெகு உயரத்துக்கு சென்று, அங்கிருந்து 'ஸ்கை டைவிங்' செய்தும் சாகசம் நிகழ்த்தினர். சாரங் ஹெலிகாப்டர்கள் வானில் பல்வேறு சாகசங்களைச் செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தன.
1971ஆம் ஆண்டில் வங்கதேசப் போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா, ஹார்வர்ட் ஆகிய பழம்பெருமைவாய்ந்த விமானங்கள், பட்டாம்பூச்சி வடிவில் பறந்துவந்து தங்கள் திறமையை நிரூபித்தன. மிராஜ் போர் விமானம், பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பிக்காட்டி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்தது. மேலும் இதய வடிவில் வானில் வரைந்து காட்டி மெரீனாவில் கூடியிருந்த காதலர்களை மகிழ்வித்தது. அடுத்து, தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள் மூலமாக மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பாராசூட் வீரர்கள் கீழே குதித்து அசத்தினர். அதிவேக ரஃபேல் விமானங்கள் தீப்பிழம்பு களைக் கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
சாகசத்தில் ஈடுபட்ட விமானங்களுக்கு சேரா, சோழா, பாண்டியா, சங்கம், காவேரி, காஞ்சி, நடராஜ், நீலகிரி, மெரீனா எனத் தமிழில் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது பார்வையாளர்களை ஈர்த்தது. அவற்றின் பெயர்களை வர்ணனையாளர்கள் உச்சரித்த போது பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து கரகோஷம் செய்தனர். விமானிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டபோது பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. இப்படியாக இரண்டு மணி நேரமாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் அனைத்து சாகச நிகழ்ச்சிகளையும் குடும்பத்தோடு குதூகலமாகக் கண்டுகளித்தனர். மெரீனா கடற்கரையெங்கும் வண்ண வண்ணக் குடைகளால் நிரம்பியிருந்தது. இந்த கூட்டம், உலக சாதனையாக -ம்கா உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது.
சென்னை மெரீனா கடற்கரையில் உலக சாதனை நிகழ்வாக ஒரே நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், விமானப்படை சாகசம் நிறைவடைந்த நண்பகல் 1 மணியளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடுமையாக சுட்டெரித்ததால், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் உடனடியாக அவரவர் வீடுகளுக்கு செல்வதற்காக டூ வீலர் களிலும், கார்களிலும் ஒரே நேரத்தில் வெளி யேறியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்களுக்கு அரசின் சார்பாக செய்துதரப்பட்ட குடிநீர் வசதி போது மானதாக இல்லை. பாட்டில்களில் கொண்டு வந்த குடிநீரும் காலியானதால் பலருக்கும் நீர்ச் சத்துக்குறைபாடு ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். அவர்களை பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவ மனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மெரீனாவிலிருந்து சென்னைக்குள் செல்லக்கூடிய அனைத்து சாலைகளும் நிரம்பிவழிந்ததால் ஆம்புலன்ஸ் களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் மிகவும் சிரமப்பட்டு ஆம்புலன்ஸ் களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 36 பேர்வரை குணமாகி வீடு திரும்பினர். கூட்ட நெரிசலில் சிக்கியும், நீர்ச்சத்து குறைபாட் டாலும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், பெருங் களத்தூரை சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவை சேர்ந்த தினேஷ், மரக்காணத்தை சேர்ந்த மணி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவ மனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். 5 பேரின் உயிரிழப்புக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தமிழக அரசை குற்றம்சாட்டினர்.
மதியம் 1 மணிக்கு விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், மெரீனாவிலிருந்து சென்னைக்குள் செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் பல கிலோமீட்டர் தூரங்களுக்கு பொதுமக்களாலும் வாகனங்களாலும் நிரம்பிவழிய, சென்னை நகரம் முழுவதும் போக்குவரத்து சீராக பல மணி நேரமானது. மெரீனாவில் மட்டுமல்லாது, சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம், வேளச்சேரி ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சென்னை ஜி.எஸ்.டி. சாலை, தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் என அனைத்துப் பகுதிகளிலும், பேருந்துகளையும் ரயில்களையும் நம்பிவந்த மக்கள், அவற்றில் இடங்கிடைக்காததால் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். உலகெங்கும் நடைபெற்றுள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுகையில் சென்னை யில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியது உலக சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் 5 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் அளித்துள்ள விளக்கத்தில்,
"விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. சாகச நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் என அனைத்து அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் தான். ஆனால் அதை வைத்து யாரும் அரசியல் செய்ய நினைக் கக்கூடாது'' எனக் கேட்டுக்கொண்டார்.
இப்படியாக விமானப்படை சாகச நிகழ்ச்சி சாதனையாகவும், இறுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் சோதனையாகவும் முடிவடைந்தது.
-தெ.சு.கவுதமன்
படங்கள் : ஸ்டாலின்