கிராமத்து திருவிழாவில் பவனிவந்த சப்பரத்தில் திடீரென தாக்கிய மின்சாரத்தால் 11 பேருக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் களிமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண் டாடப்படுவது வழக்கம்.
ஏப்ரல் 26, செவ்வாய்க்கிழமை தொடங்கிய, 94-ஆம் ஆண்டு சதய விழாவில், அன்றிரவில் மின் அலங்காரச் சப்பரத்தில் அப்பர் படம் வைக்கப்பட்டு வீதி உலாவாக இழுத்து வரப்பட்டது. களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளையும் சுற்றிவந்த சப்பரம், மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4:00 மணியளவில், கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த உயரமான இரும்புக்குழாய், மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது. ஏற்கெனவே சப்பரத்திலுள்ள மின் விளக்குகளுக்காக ஜெனரேட்டர் இயங்கிய நிலையில், அந்த மின்சாரமும் பாய, சப்பரம் தீப்பற்றியதோடு, சப்பரத்தை இழுந்து வந்தவர்கள், அவர்களுக்கு அருகில் உரசியபடி நின்றவர்கள் என பலர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அனைவரும் தூக்கியெறியப்பட்டனர்.
என்ன நடந்தது என அறியும் முன்பே நடந்து முடிந்த துயர சம்பவத்தால், அந்த இடமே களேபரமாக... களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மோகன், முன்னாள் ராணுவ வீரர் கே.பிரபாத், ஏ.அன்பழகன், அவரது மகன் ராகவன், எஸ்.நாகராஜ், ஆர்.சந்தோஷ், டி.செல்வம், எம்.ராஜ்குமார், ஆர்.சாமிநாதன், ஏ.கோவிந்தராஜ் ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தவர்கள், உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரணி என்பவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் 15 பேர் தொடர் சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். வீதிகளைச் சுற்றிவந்த சப்பரம், இன்னும் 15 நிமிடங்களில் நிலைக்கு வரும் என்றிருந்த நிலையில், இந்த பெருந்துயரச் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், மருத்துவ மனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, களிமேடு கிராமத்திற்குச் சென்று விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டார். சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறுகையில், “"இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்''”என்றார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர், தஞ்சை மருத்துவமனைக்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தின ரைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். பின்னர், விபத்தில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், விபத்து குறித்து முழுமையாகக் கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு நன்முறையில் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டனர்.
களிமேடு கிராமத்தில் நடந்த துயர சமப்வத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும்' என்றும், "தஞ்சாவூருக்கு நேரடியாகச் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன்' என்றும் குறிப்பிட்டார். அதன்பின்னர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர் களும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, தஞ்சை களிமேடு கிராமத்துக்குச் சென்ற முதல்வர், உயிரிழந்தவர் களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு, ஆறுதல் கூறி நிவாரணத் தொகையையும் வழங்கினார். பல ஆண்டுகளாக நன்முறையில் நடைபெற்ற அப்பர் சதய விழா தேரோட்டம், இந்த ஆண்டு பலரையும் பலி கொண்டதில் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.