ல்லூரி விழாவில் திடீரென்று நுழைக்கப்பட்ட சமஸ்கிருதம், மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்களான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

mm

விழா வழக்கம் போல் உற்சாகமாகத் தொடங்கியது.

அப்போது முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆரம்பித்தது. இதற்காக ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை மாணவர் சங்கத் தலைவர் ஜோதீஷ் வாசித்தார். அதை அமைச்சர்கள் உட்பட அனைவரும் எழுந்து திருப்பி வாசிக்க ஆரம்பித்தனர். அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழி உறுதிமொழி என்பதை உணர்ந்த அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், தனது வாசிப்பை நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ரத்தின வேலிடம், அமைச்சர் தியாகராஜன், “"சார், இங்கே என்ன நடக்குது? எந்த அடிப்படையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க வைக்கிறீர்கள்?''’என்று கேட்க... ரத்தினவேலோ "அது வந்து... அது வந்து...'ன்னு விளக்கம் தரமுடியாம இழுத்தார். இதனால் கோபமான அமைச்சர், "ஏன் இப்படி நடந்தது என்பதற்கான விளக்கத்தை நீங்கள் அரசுக்குக் கொடுக்கவேண்டும்'' ’என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

mm

இது குறித்து முதல்வர் ரத்தினவேலிடம் நாம் கேட்ட போது... ”"எப்படி சமஸ் கிருத மொழி படிவம் வந்தது? என்று தெரியவில்லை. சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்போகிறோம் என்று என்னிடம் எவரும் அனுமதி வாங்கவில்லை. நான் ஏதோ ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுக் கிறார்கள் என்று நினைத்தேன். இதுகுறித்து விசாரணை நடத்தி, அதற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' ’என்றார் அமைதியாக. அடுத்த நாளே, ரத்தினவேலு மாற்றப்பட்டு விட்டார்.

இந்த விவகாரம் குறித்து, மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் நம்மிடம், "சரக ஷபாத்தில் உள்ளவற்றை அப்படியே சமஸ்கிருதத்தில் நாங்கள் வாசிக்கவில்லை. எங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தே நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். நாங்கள் வாசித்தது ஆங்கில மொழியாக்கம் தானே தவிர, நேரடி சமஸ்கிருத மொழி அல்ல. கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தேசிய மருத்துவக் கழகம் அளித்துள்ள பரிந்துரையைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். புதிதாக மருத்துவக்கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கான உறுதிமொழி என்று சரக ஷபாத்தைத்தான் தேசிய மருத்துவக் கழகம் பரிந் துரைத்திருக்கிறது. இதை அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை. இது எதார்த்தமாக நடந்தது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை''’என்றார் நிதானமாக.

Advertisment

mm

பா.ஜ.க. பிரமுகரான முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனோ, "இதைத் தேவையில்லாமல் தி.மு.க. அரசியலாக்குகிறது. ஏற்கனவே இருந்த ஹிப்போகிராப்ட் முறை என்பது கிரேக்க மொழியில் உள்ள உறுதிமொழி. அதை மாற்றி நம்ம மகரிஷி சரக் ஷபாத் முறைப்படி உறுதிமொழி எடுப்பதில் என்ன தவறு? சமஸ்கிருதம் இந்திய மொழி இல்லையா? இடைநீக்கம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர் ரத்தினவேலுவை மீண்டும் அங்கேயே பணி அமர்த்தவேண்டும்''’என்றார் அழுத்தமாக.

mm

இந்த சமஸ்கிருத சரக ஷபாத் உறுதிமொழி குறித்து டாக்டர் தேவானந்த்தோ, "நாங்கள் படித்த காலத்தில் இப்படிப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழி எல்லாம் கிடையாது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகுதான் புதுசு புதுசாக வடமொழியைப் புகுத்துகிறார்கள். தற்போது மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினர் அதிக அளவில் உள்ளனர். மேலும் மருத்துவர்களில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உள்ள மருத்துவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதெல்லாம் திட்டமிட்டே நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது'' என்றார் கவலையாய்.

ஒன்றிய அரசு, அனைத்துத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்க முயல்வதற்கு இதுவும் ஒரு உதாரணம். டெல்லியின் இந்த மொழித் திணிப்பு, தமிழகத்தைத் தணல்காடாக்கி வருகிறது.