தற்போது நடை பெற்று வரும் ஆட்சியில் அதிகாரிகள் சிலரின் சதியால், தவறான நபர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் செயல்பாடுகள், முதல்வரின் பார்வைக்கே செல்லாதபடி நடந்துவருகின்றன. இதுகுறித்து நமது நக்கீரனில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறோம்.
நக்கீரன் ஏப்ரல் 12-14 இதழில், "கலைஞர் ஆட்சியை கலைக்க நினைத்தவருக்கு பதவி உயர்வு' என்ற தலைப்பில் மிக விரிவான செய்தியை வெளியிட்டி ருந்தோம்.
தமிழ்நாடு அதிரடிப் படையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்த மோகன்நிவாஸ் என்கிற அந்த காவல் அதிகாரி, அப்பாவி மலைமக்களை சித்ரவதை செய்ததையும், ஜெயலலிதாவின் விசுவாசியாக செயல்பட்டதை யும், ஜெயலலிதா போலீசான தேவாரத்தின் சிஷ்யராக செயல்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
வீரப்பன் நிகழ்த்திய ஒன்பது பேர் கடத்தல், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் என இரண்டு சம்பவங்களின்போதும், கலைஞர் தலைமையில் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது கலைஞர் ஆட்சியின் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய இடையூறுகளை இந்த மோகன்நிவாஸ் செய்ததோடு, கலைஞரின் ஆட்சியைக் கலைக்கவும் சதி செய்ததை நாம் நக்கீரனில் பதிவிட்டிருந்தோம். தற்போதைய தி.மு.க. ஆட்சியில், அந்த மோகன்நிவாசுக்கு பணி நிறைவுக்கு ஒரு நாளுக்கு முன்பு எஸ்.பி.யாக பதவி உயர்வு கொடுத்து, சகல மரியாதையோடு அனுப்பி வைத்ததை நக்கீரனில் வேதனையோடு நாம் பதிவு செய்திருந்தோம். இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, முதல்வர் ஸ்டாலினின் பார்வைக்கே செல்லாதபடி அதிகாரிகளால் மறைக்கப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தியிருந்தோம்.
அடுத்து, நக்கீரன் ஏப்ரல் 26-28 இதழில், 'முதல்வருக்கே அல்வா! மாற்றுத்திறனாளி வீரரின் கைவரிசை! உறங்கிய உளவுத்துறை!' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், மாற்றுத்திறனாளிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை வென்றதாகக் கூறி, மாற்றுத்திறனாளி நபரான வினோத்பாபு என்பவர், அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர், அமைச்சர் உதயநிதி, இறுதியாக முதல்வர் வரை சென்று பார்த்து, நடிகர் வடிவேலு பாணியில் கடையில் வாங்கிய அந்த கோப்பையை காட்டி வாழ்த்து பெற்றதுதான் அச்செய்தி! ஒரு மோசடிப் பேர்வழி அனைத்து அதிகாரிகளையும் ஏமாற்றி, முதல்வரையும் ஏமாற்ற முடியும் என்பது, தமிழக உளவுத்துறை எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதற்கு உதாரணமென்று ஆதாரத்தோடு சுட்டிக்காட்டியிருந்தோம்.
மூன்றாவதாக, தற்போது ஒரு டுபாக்கூர் பேர்வழி, அரசு அமைத்துள்ள ஒரு வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த தி.மு.க.வினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தூய்மைப் பணியாளர் நல வாரியம் சென்ற வாரத்தில் திருத்தி அமைக்கப்பட்டு அதில் பொறுப்பாளர்களாக சிலர் அறிவிக்கப்பட்டனர். இந்த வாரியத்தின் தலைவராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ், துணைத்தலைவராக கோவை யைச் சேர்ந்த கனிமொழி என்பவரும், மற்றும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்ட சில உறுப்பினர்கள், அலுவல்சாரா 14 உறுப்பினர்கள் என அறி விக்கப்பட்டனர். இந்த அலுவல் சாரா 14 பேரில் ஒருவராக ஈரோட்டைச் சேர்ந்த மோகன் என்பவர் இருக்கிறார்.
யார் இந்த மோகன்? என்று விசாரித்ததில், பல அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வந்தன. சில பத்திரிகை நிறுவனங்களில் விளம்பர ஏஜெண்டாக செயல் பட்டு, அந்த பத்திரிகைகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதோடு, பண மோசடி காரணமாக விரட்டப்பட்டி ருக்கிறார்.
மேலும், ஆட்சியாளர்கள், அதிகாரிகளை மட்டுமின்றி, ஈரோடு பகுதியிலுள்ள சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள், மதுபானக் கடைகள், ரேஷன் கடைகள், தனியார் வணிக நிறுவனங்கள் எனத் தொழில் செய்பவர்கள் அனைவரையும் மிரட்டி, உங்களைப் பற்றி செய்தி போட்டு அசிங்கப்படுத்துவேன் என பயமுறுத்தி, முறைகேடாகப் பண வசூலில் ஈடுபட்டிருக்கிறார். இவர், கொள்கை ரீதியாகவும் திராவிட எதிர்ப்பு நிலையிலும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவாளராகவும் இருப்பவர். இப்படி நேரெதிர் முகாமில் இருக்கும் மோசடி நபர், எந்தவகையில் இந்த நல வாரியக் குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார் என்பது, இவரையறிந்த ஈரோட்டுக்காரர்களுக்கு பேரதிர்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மோகனுக்கு பதவி கிடைத்ததுமே ஈரோடு தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சு.முத்துசாமியை சந்தித்து ஆசிவாங்கியிருக்கிறார். அதே கையோடு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்ட கழகச் செயலாளருமான கே.வி.ராமலிங்கத்திடம் ரோஜா மாலை போட்டு ஆசி வாங்கியவர், "அண்ணே, தி.மு.க. ஆட்சியிலும் பதவி வாங்கிட்டேண்ணே'' என்று குஷியோடு சொன்னதுதான் ஹைலைட்டே!
இதுபற்றி அமைச்சர் சு.முத்துசாமியிடம் பேசியபோது, "அந்த நபருக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை விசாரிக்கிறோம். உறுதியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்'' என கூறினார்.
"தூய்மைப் பணியாளர் நல வாரியத்திற்கான பதவியை, தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களில் எவருக்கேனும் கொடுத்தால் அவருக்கும் மதிப்பாக இருக்கும். ஆட்சிக்கும் மதிப்பாக இருக்கும். அதைவிடுத்து இப்படியான மோசடிப் பேர்வழிகளுக்கு... கட்சிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரிகளை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும். இதுபோன்ற ஆபத்தான செயல்பாடுகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்'' என்றார் தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர்.