மதவாத ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழ் நாட்டில் கருத்தியல்ரீதியாக முற்போக்கு மற்றும் திராவிட இயக்க சித்தாந்தங்களை அழித்தொழிப்பதை அஜென்டாவாக வைத் திருக்கிறது. அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேத நூல்களை, மனுதர்ம கோட்பாட்டு நூல்களை ஊடுருவ வைக்க வேண்டுமென்பதே அவர்களின் திட்டம். ஆனால், ஆர்எஸ்எஸ் பண்பாட்டுத் திரிபு வாதங்கள் மனித குலத்துக்கே எதிரானவை என்பதை பல்வேறு ஆய்வுகளின் மூலம் தமிழ்ச் சான்றோர்கள், வரலாற்று ஆய்வாளர் கள் நிரூபித்ததோடு, அதுகுறித்து பல்வேறு நூல்களை வெளியிட்டுவருகிறார்கள். தந்தை பெரியார் தொடங்கி இன்றுவரை பல முற் போக்காளர்களும் இப்பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இப்படியான நூல்கள் தங்கள் வளர்ச்சியைத் தடுப்பதாக உள்ளதால் இவற்றை தடைசெய்ய வேண்டுமென்று ஆர். எஸ்.எஸ். கும்பல் திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில்தான், ஈரோடு புத்தகக் காட்சியில் அந்த அசம்பா விதம் நடந்துள்ளது.
"மக்கள் சிந்தனை பேரவை' என்ற அமைப்பின் மூலம் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்து பவர் தோழர் ஸ்டாலின் குணசேகரன். 19வது ஆண்டு புத்தகத் திருவிழா, சென்ற 4ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை ஈரோடு சி.என்.சி. கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் தங்களது பதிப்புச் செல்வங்களை இங்கு கொண்டுவந்து விற்பனைக்காக அழகுற அடுக்கி வைத்துள்ளார்கள். இந்த அரங்கத்தில் நக்கீரன் பதிப்பகமும் இரண்டு அரங்கங்களில் தனது பதிப்பு நூல்களை வைத்துள்ளது.
இக்கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில், "ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பாசிசம் -வேர்களும், விழுதுகளும்' என்ற தலைப்பில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில பொருளாளர் செந்திலதிபன் எழுதிய நூல் விற்பனைக்கு உள்ளது. அந்த அரங்கில் விற்பனையாளராக புகழேந்தி என்பவர் இருக்கிறார். நடந்த சம்பவத்தை அவரே நம்மிடம் கூறினார்.
"சென்ற 6ஆம் தேதி அந்த அரங்கிற்கு வந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். நபர்கள், அந்த நூலை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று கூறினார், நான் அவர்களிடம், "இது எங்களது வெளியீடு. உங்களுக்கு எதிர்மறை கருத்திருந்தால் புத்தகம் பற்றி வழக்கு தொடர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் விற்பனைக்கு வைத்திருப்போம்'' எனக் கூறினேன். உடனே கோபமானவர்கள், "நாளை உனக்கு என்ன நடக்கிறது பார்'' என மிரட்டிவிட்டுச் சென்றனர்.
மறுநாள் காலை 11 மணியளவில், அந்த நபர்களோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர், ஒரு கான்ஸ்டபிள் வந்தனர். என்னிடம் வந்த போலீ சார் "ஆர்.எஸ்.எஸ். பற்றி புத்தகம் போட்டு விற் பனை செய்கிறீர்களா? முதலில் இந்த புத்தகத்தை எடு. போஸ்டரை கிழி'' என்றதோடு, போஸ்டரைக் கிழிக்குமாறு மிரட்டினார்கள்'' என்றார். இதேபோல், மஞ்சை வசந்தன் எழுதிய "அர்த்தமற்ற இந்துமதம்' நூலையும் எதிர்த்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். செந்திலதிபன் நூலை விற்பனைக்கு வைத்திருந்த "எதிர்' பதிப்பகத்திலும் அதனை அகற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய திராவிடர் கழக மண்டல செயலாளர் சண்முகம் "இந்தத் தகவலை எங்களது ஆசிரியர் ஐயாவுக்கு தெரியப் படுத்தினோம். பின்னர் இத்தகவல், "நிமிர்' பதிப்பகத்தின் நிர்வாகியான "மே 17 இயக்கம்' தோழர் திருமுருகனுக்கும், கோவை ராமகிருஷ்ணன், சுப வீரபாண்டி யன் ஆகியோருக்கும் தெரியவந்து, உட னடியாக முதல்வரின் பார்வைக்குச் செல்ல, அவர் உளவுத்துறை அதிகாரிகள் மூலம் விசாரிக்க, ஆர்.எஸ்.எஸ். நபர்களுக்கு ஆதரவாக போலீசார் அத்துமீறியது உண்மை என்பதைத் தெரிந்துகொண்டார். உடனடியாக அந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் சண்முகம் உட்பட இரண்டு பேரையும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்'' என்றார்.,
இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் காவல்துறையினருக்கும் ஆசிரியர் வீரமணி, வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
_________________
வடசென்னை புத்தகத் திருவிழா!
நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பாக வடசென்னையில், சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே தங்கம் மாளிகையில், வடசென்னை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் பி.டி.பாண்டிசெல்வம் கூறுகையில், "இந்த புத்தகத் திருவிழாவை கடந்த 8 ஆண்டுகளாக நடத்திவருகிறோம். இந்த ஆண்டு, ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதிவரை நடத்துகிறோம். இதில் மொத்தம் 40 புத்தக அரங்குகள் உள்ளன. நக்கீரன் பதிப்பக மும் இங்கே தனது பதிப்பக நூல்களை விற்பனை செய்துவருகிறது. இங்கே சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நூல்கள் விற்பனைக்கு உள்ளன'' என கூறினார்.
வடசென்னை புத்தகத் திருவிழாவில் "வாசிப்போம் நேசிப்போம்' விழிப்புணர்வு ஊர்தியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பாண்டிசெல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தி.மு.க. மா.செ. இளைய அருணா, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், தொழிலதிபர் வரதராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-கீரன்