மக்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கவே பண்டக சாலை தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அது முறைதவறி, அதிகாரிகள் கொள்ளையடிக்க வழிவகுத்துவருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை -வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக இருப்பவர் பாலாஜி. இவர் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்துகொண்டு இருக்கிறாராம். நேரடி பணி நியமனம் செய்தல், பணிபுரியும் நபர்களுக்கு பணி மாறுதல் வழங்குதல், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல், பலசரக்கு சாமான்களை முறைகேடாக விற்பனை செய்தல் என அனைத்திலும் அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருகிறாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rationshop_3.jpg)
வண்ணாராப்பேட்டை கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் 64 கடைகள் இயங்கிவந்தன. தற்போது 16 கடைகள் மட்டுமே இயங்கிவருகின்றன. இதற்கு பாலாஜியின் முறையற்ற நடவடிக்கையே காரணம் என்கிறார்கள். கூட்டுறவு பண்டக சாலை ஏற்கெனவே பல கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கிவரும் நிலையிலும், தனது அதிகாரத்தின் மூலம் அதில் மேலும் எப்படியெல்லாம் கொள்ளையடிப்பது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்பத் தனக்கு சாதகமான நபர்களைக் கையில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை தன் அதிகாரத்தின் மூலம் நடவடிக்கை எனும் பெயரில் அடக்கிவைப்பது அவரது பாணி. அ.தி.மு.க. நிர்வாகக் குழு மேலாளர் தனசேகரனை இவருக்கான ஏஜெண்டாக வைத்துக்கொண்டு, அவர் மூலமாக பணியாளர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பட்டியல் ஒன்றை கொடுப்பார். அந்த பட்டியலில் உள்ள நபர்கள் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டியது. அந்த பணியிட மாற்றத்தை நிறுத்த ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களிட மிருந்து வசூலித்து பாலாஜிக்கு கொடுப்பதே இவரது பணியாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல், பண்டக சாலைக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்றால், முன்பு சென்னையிலுள்ள பிரபல டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காமதேனு, நாம்கோ என அங்கெல்லாம் வாங்கி விற்பனை செய்வார்கள். தற்போது 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரத்திலிருந்து பொருட்களை வாங்குகிறார்கள். இதற்கு அந்த நிறுவனத்திடமிருந்து பாலாஜி பெரிய அமவுண்ட்டை கமிஷனாகப் பெற்றுக் கொண்டு, அந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வைப்பாராம். இதை யாராவது தெரிந்துகொண்டு தட்டிக்கேட்டால் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக பணியில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவாராம். அதற்காக அவர்களிடமும் ஒரு தொகையைப் பெற்றுக்கொள்வது என, எந்த வழியில் பணம் கிடைப்பதாக இருந்தாலும் அந்த வழியிலெல்லாம் கோல் போடுகிறாராம். அப்படி பாதிக்கப்பட்ட மாறன், சுலேதா, மலர் எனப் பலர் புகார் கொடுத்தும், இவர் மீதான புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அப்புகார்கள் அனைத்தும் புகார்தாரர் மீதே திருப்பப் பட்டுவிடுமாம்! அந்த அள விற்கு உயரதிகாரிகளைத் தன் கையில் வைத்துள்ள தால் அங்கு பணிபுரியும் நபர்கள், இவரது தவறான நடவடிக்கைகள் குறித்து சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறார்களாம்.
இதுகுறித்து பேசிய ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரியான தெய்வச்சிலை, "பணியாளர்கள் நியமனம் என்பது வேலைவாய்ப்பு அலுவலகம் வழங்கவேண்டிய ஒன்று. ஆனால் இவரே எப்படி பணியை வழங்க முடியும்? பணியாளர்களை குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகே பணியிட மாற்றம் செய்யமுடியும். ஆனால் இவர் எடுத்த எடுப்புக்கெல்லாம் பணிமாற்றம் செய்கிறார். பக்கத்தில் இருக்கும் பண்டக சாலையில் பொருட்களை வாங்காமல், 300 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று வாங்கவேண்டிய அவசியம் என்ன? ஒரு பணியாளர் காலதாமதமாக வந்தாலோ அல்லது பணி புரியாமல் இருந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். அதையெல்லாம் செய்யாமல், இவருக்கென ஒரு தனி விதியை அமைத்து, இவர் சம்பாதிப்பதற்காக பணியாளர்களைப் பந்தாடுவது எந்த விதத்தில் நியாயமாகும்? பல புகார்களைப் பணியாளர்கள் கொடுத்தாலும், இவருக்கு உடந்தையாக இருக்கும் துணைப்பதிவாளர் கனகவள்ளி எந்த நடவடிக்கையுமே எடுப்பதில்லை. இப்படி இருந்தால் நட்டத்தில் இயங்காமல் லாபத்திலா இயங்கும்? அரசுக்கு வரவேண்டிய லாபத்தை இவர்போன்ற அதிகாரிகள் அடித்துக்கொண்டு, அரசுக்கு நஷ்டக்கணக்கு காட்டுவதால் எப்போதும் இப்படியேதான் இருக்கும். உடனடியாக இவர்களின் மீது விசாரணைக்குழு அமைத்து, இவர்களின் மோசடிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
இது குறித்து பாலாஜியிடம் கேட்டதற்கு அவர் பேசமறுத்துவிட்டார். இந்த கூட்டுறவு பண்டக சாலையில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும், பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நன்மை தரும் விதத்திலும் செயல்படாமல் நிர்வாகம் சீர்கெட்டுக் கிடப்பதற்கு காரணமாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு பண்டக சாலையை மீட்க முடியும் என்பதே பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-சே
படம்: ஸ்டாலின்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-05/rationshop-t.jpg)