தி.மு.க.வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தல் இரண்டாவது கட்டமாக மாநகரம், நகரம், பேரூர் வார்டுகளுக்கு நடந்து வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலமாக மாவட்டச் செயலாளர்கள் உட்பட மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதனால் தங்கள் ஆதரவாளர்களை வெற்றிபெற வைக்க மா.செ.க்கள், தங்களது அதிகாரத்தையும், பலத்தையும் பயன்படுத்திவருகின்றனர்.
அதேபோல் மாவட்டத்தில் பலம் பொருந்திய நிர்வாகிகள் மீண்டும் பதவிக்கு வந்தால், அவர்களால் தங்களது பதவிக்கு ஆபத்து என, அவர்களைக் கட்சி பதவியில் இருந்து காலி செய்யும் முயற்சியில் அமைச்சர்களாக உள்ள மா.செ.க்களும் அங்கங்கே களமிறங்குகிறார்கள்.
இப்படி மா.செ.க்கள் அரங்கேற்றும் அத்து மீறல்களால், பல இடங்களில் அடிதடி, மோதல், பதட்டம் என நிலவரம், கலவரத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது.
உதாரணத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சி, உதயேந்திரம், நாட்றாம்பள்ளி, மாதனூர் பேரூராட்சி வார்டுகளுக்கான தேர்தல் ஆணையர்களாக திருவண்ணாமலை எக்ஸ். சேர்மன் ஸ்ரீதரன், வழக்கறிஞர் சந்துரு ஆகியோரை நியமித்தது கட்சித் தலைமை.
ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு ஜோலார்பேட்டையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில், மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி போன்றோர் முன்னிலையில் திருப் பத்தூர் நகரத்திலுள்ள வார்டுகளுக்குப் போட்டியிடுபவர்கள் மனுக் களைத் தாக்கல் செய்தனர். திருப்பத்தூர் சிட்டிங் ந.செ.வான எஸ்.ராஜேந்திரன், மாணவரணி அமைப்பாளர் ஜிம்.மோகன், எம்.எல்.ஏ நல்லதம்பி ஆதரவாளரான மாவட்டப் பிரதிநிதி சந்திரசேகர் ஆகிய மூவரும் தங்களது ஆதரவாளர்களை வார்டு செயலாளர்களாக்க மனு கொடுத்தனர். அப்போது ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும், நல்ல தம்பி ஆதரவாளர்களுக்கும் இடையே பலமான அடிதடி ஏற்பட்டது. இதில் நகரப் பொருளாளர் ஸ்ரீதர் மண்டை உடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கே பதட்டம் ஏற்பட்டது.
உட்கட்சி பிரச்சினை என்பதால் போலீஸில் புகார் எதுவும் கொடுக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார் தேர்தல் ஆணை யாளரான ஸ்ரீதர். எனினும் சமாதானப் படலம் நடக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய கட்சியினர், "2011 தேர்தலில் எம்.எல்.ஏ.வுக்கு நின்ற தன்னை, கந்திலி ஒ.செ நல்லதம்பிதான் தோற்கடித் தார் என்கிற கோபம் ராஜேந் திரனுக்கு இருக்கிறது. அப் போது முதலே இருவரும் எதிரியாகிவிட்டார்கள். 2016-ல் நல்லதம்பி சீட் வாங்கி எம்.எல்.ஏ.வாக ஆகிவிட்டார். 2011-ல் மீண்டும் நல்லதம்பி சீட் வாங்கியதால் அவரது ஆட்கள், ராஜேந்திரனை கிண்டல் செய்தனர். அதனால் சண்டை மூண்டது. அப்போது நல்லதம்பியின் அலுவலகத்தை ராஜேந்திரன் ஆதர வாளர்கள் அடித்து உடைத்தனர். பிரச்சாரத்துக்கு வந்த உதயநிதிதான் இருதரப்பையும் சமாதானம் செய்தார். மா.செ. பதவிக்கு தேவராஜுடன் முன்பு போட்டியிட்டார் ராஜேந்திரன். இப்போது தி.மு.க. ஆளும்கட்சி என்பதால் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் ஆதரவில், எம்.எல்.ஏ. நல்லதம்பி, ந.செ. இராஜேந்திரனை அரசியலில் இருந்து ஓரம்கட்ட காய் நகர்த்துகிறார்''’என்கிறார்கள்.
இதேபோல், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி நகரத்தில் வார்டு தேர்தலுக்கு மனுக்கள் தரப்பட்டன. நகர தேர்தல் பொறுப்பாளர் வெங்கடேசன், யாருக்கு என்ன பதவி, யார் மனு தரவேண்டும் என முடிவு செய்துகொண்டிருந்தார். 30-ஆவது வட்ட செயலாளர் பதவிக்கு, முன்னால் கவுன்சிலர் கண்மணி பணம் கட்டினார். அதே பதவிக்கு 30-ஆவது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கும் மனு தந்தார். அப்போது “"எங்கப்பாவையே எதிர்த்து மனு போடறியா?'’ என்று கோபமான கண்மணி மகன் அன்புமணி, பெட்ரோல் கேனை எடுத்து கவுன்சிலர் கார்த்திக் மீது ஊத்திவிட்டு, "இங்கே யிருந்து ஓடிப்போயிடு... இல்லன்னா தீ வச்சிடு வேன்''’என்று மிரட்ட, அதைப் பார்த்துக் கட்சி நிர்வாகிகள் அரண்டுபோய், கார்த்தியை அங்கி ருந்து வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது ஆரணியில் அரங்கேறிய கூத்து.
புதுப்பாளையம் பேரூராட்சியிலும், தேர்தல் பொறுப்பாளர் பொன்முத்து இல்லாமலே கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன், மண்டபத்தில் கூட்டம் போட்டு, யாருக்கு என்ன பதவி என்பதை முடிவு செய்யத் தொடங்கினார். ’"இது எப்படி நேர்மையான தேர்தலாக இருக்கும்? எல்லோரையும் கூப்பிட்டு வச்சிப் பேசுங்க. உங்களுக்கு வேண்டப் பட்ட ஆட்களுக்கு மட்டும் பதவி தர முடிவு செய்தால், என்ன அர்த்தம்?''’என சிலர் கேள்வி எழுப்பியதால், அங்கும் சண்டை உருவானது. பெரிய அடிதடி அரங்கேற... கூட்டம் கலைந்து ஓடியது. இதுபற்றி, மா.செ.வும், அமைச்சருமான எ.வ.வேலுவிடம் புகார் சென்றுள்ளது.
இப்படி பல இடங்களில் அடிதடி களே பரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
தி.மு.க.வைப் பொறுத்தவரை கட்சிப் பதவியில் இருப்பது என்பது பிற கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்காகப் பார்க்கப்படுகிறது. தி.மு.க. இப்போது ஆளும்கட்சியாக உள்ள நிலையில் பதவிகளுக்கான போட்டி, அதிகமாகி இருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. உட்பட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவிகள் கொடுக்கப்படுவதும் கட்சி யினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பல புகார்கள் தலைமைக்குச் சென்ற தன் அடிப்படையில், "கழகத்திற்கு வந்து 10 ஆண்டு கள் ஆனவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த விதிகளை தலைமையே மீறியுள்ளது. அதனால் "நாங்க சொல்றதை செய்யுங்க' என தேர்தல் ஆணையர்களுக்கு மா.செ.க்கள் அழுத் தம் தருவதால் கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் களும், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தி.மு.க.வுக்கு வந்தவர்களும் கூட கட்சிப் பதவிக்கு போட்டியிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஜனநாயகத்தின் கருவியான தேர்தலே, அடி தடிக் கருவியாக மாற்றப்படுவது ஆரோக்கியத்திற்கு அடையாளம் அல்ல.