ஜூலை 17 ஞாயிறன்று, ஓய்விலிருந்த தமிழக மக்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரமும், கொழுந்துவிட்டு எரிந்த பேருந்துகளும் திடுக்கிடச் செய்தன. மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டுக் குவிந்திருந்த கும்பலால் அந்த வன்முறை தொடங்கியிருந்தது.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி தெறித்த பொறியில் எழுந்த நெருப்பு அது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி செல்விக்கு, பிளஸ் டூ படிக்கும் அவரது மகள் ஸ்ரீமதியின் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து காலையில் செல்போன் அழைப்பு வந்தது. "உங்கள் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். உடனடியாகப் புறப்பட்டு பள்ளிக்கு வரவும்''’என்று பள்ளி நிர்வாகி தகவல் கூறியுள்ளார். செல்வியும் அவரது உறவினர்களும் பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/school_25.jpg)
பள்ளி ஊழியர்கள், மாணவியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அவர்கள் விரைய, "உங்கள் மகள் இறந்துபோனார்' என்று கூறியுள்ளனர். மருத்துவமனை பணியிலிருந்த மருத்துவர்களை விசாரித்தபோது, மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம், "உங்கள் மகளை இங்கு கொண்டுவரும்போதே இறந்த நிலையில்தான் கொண்டுவந்தார்கள்' என்று தகவலைக் கூறியுள்ளனர்.
மாணவியின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகக் கருதிய மாணவியின் தாய் செல்வி மற்றும் அவரது உறவுப் பெண்கள் மாணவியின் உடையைக் கழட்டிப் பார்த்துள்ளனர். மாணவியின் மார்பகங்களில் நகக்கீறல்கள், கைகளில் காயங்கள் என உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. மாணவி பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் வார்த்தைகளில் நம்பிக்கையில்லாது, மாணவியின் உறவினர்களும் ஊர் மக்களும் இந்த மரணத்தில் உண்மையை வெளியே கொண்டுவரவேண்டும் என்று கூறி பள்ளியெதிரே சாலை மறியலிலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/school1_15.jpg)
இதையடுத்து மாணவியின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. போஸ்ட்மார்ட்ட அறிக்கையில், மாணவியின் உடலில், குறிப்பாக மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்த தாகவும் எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவரின் மேலாடை, கால்சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்தக் கறை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் காயங்களனைத்தும் மாணவியின் மரணத்துக்கு முன்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடது தலைப்பகுதி உடைந்திருந்ததாகவும் அதிகளவு ரத்தப்போக்கு, அதிர்ச்சியால் மாணவி இறந்ததாகவும் அறிக்கையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவி மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு 38 மணி முதல் 45 மணி நேரத்துக்கு முன்பே இறந்துபோயுள்ளார். எனினும் உள்ளுறுப்புகளின் ரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னர்தான், மாணவி மரணம் குறித்து முழுமையாகத் தெரியவரும்.
மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் நாம் கேட்டபோது, “"எனது கணவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். மகள் ஸ்ரீமதி நன்றாக படிக்கக்கூடியவர். இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக, ஊருக்குவந்த அவளை பள்ளியில் கொண்டுசென்று விட்டுவந்தேன். அவள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு கோழை கிடையாது. வீட்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை. பள்ளி நிர்வாகம் கூறுவது சுத்தப் பொய். மகள் உயிருக்கு பள்ளியில் இருந்தவர்களால் ஊறுநேர்ந்துள்ளது. அவள் இறந்துகிடந்ததாகக் கூறப்படும் இடத்தில் ரத்தக்கறை எதுவும் இல்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/school2_7.jpg)
எங்களது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாள் என்று எங்களை வரவழைத்துவிட்டு, இறந்துபோன மகளை மருத்துவமனைக்கு கொண்டுசென்று உயிரிருப்பதாக நாடகமாடியுள்ளனர். பள்ளியில் கொலை செய்துவிட்டு உண்மையை மறைக்கப்பார்க்கிறார் கள். இந்தப் பள்ளியில், இதுவரை ஏழு பிள்ளைகள் இறந்துபோனதாகக் கூறுகிறார்கள். என் பிள்ளைக்கு நேர்ந்தது போன்று இனி இங்குள்ள பிள்ளைகள் யாருக்கும் நேரக்கூடாது''” என்கிறார்
மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த 13-ஆம் தேதியிலிருந்து தினசரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின்பு கலைந்துசென்றனர். இந்நிலையில் ஜூலை 16-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு மறியல் செய்தனர். அவர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, தவறுசெய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஜூலை 17-ஆம் தேதி காலை மாணவியின் ஊரான பெரியநெசலூர், அதைச் சுற்றியுள்ள ரெட்டகுறிச்சி, அடரி, மாங்குளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சிக்குத் திரண்டுசென்றனர். "மாணவியின் இறப்பு தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை. இதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைத்த தோடு, கள்ளக்குறிச்சி சேலம் தேசிய நெடுஞ் சாலையில் சின்ன சேலம் அருகே கனியாமூர் அருகில் சக்தி பள்ளிக்கு எதிரே மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப் பட்டிருந்தும் அதை மீறி பெருங்கூட்டம் திரண்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/school3_0.jpg)
போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்று மாணவர்களை அழைத்துவருவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பள்ளிக்குச் சொந்தமான பஸ்களை அடித்து நொறுக்கத் தொடங்கினர். சிலர் பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்த விவசாய டிராக்டரால் பஸ்களை இடித்துநொறுக்கி, பஸ்ஸுக்கு தீ வைத்து எரித்தனர். ஆரம்பம் முதலே அத்துமீறும் நோக்கத்துடனே அவர்கள் திரண்டிருந்ததுபோல் தோன்றியது.
இந்த நிலையில், காவல்துறை டி.ஜி.பி.. சென்னையிலிருந்து புறப்பட்டு கலவரப் பகுதிக்கு விரைந்துவந்துள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு போராட்டக்காரர்கள் கல், கண்ணாடி போன்றவற்றை காவல்துறை மீது வீசினர்.
கலவரத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கள்ளக்குறிச்சி கலால் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு ராமச்சந்திரன் உட்பட பலர் போலீஸ் தரப்பில் படுகாயம் அடைந்தனர். பள்ளிக்குச் சொந்தமான 19 பஸ்கள், இரண்டு பொக்லைன்கள், 70 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. போலீஸ் ஜீப்பும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நில்லாமல் பள்ளிக்குள் புகுந்து கண்ணாடிகள், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவைகளை அடித்து நொறுக்கிய துடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பள்ளி ஆவணங்களையும் தீவைத்தனர். கலவரத்துக்கு நடுவே பல்வேறு பொருட்களையும் அள்ளிச் சென்றனர். கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 329 பேரை போலீசார் கைதுசெய்துள்ள னர். பள்ளித் தரப்பில் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் ஆயத்தநிலை, உளவுத்துறை குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்ப காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி, "மாணவி ஸ்ரீமதி மரணத்தில் அனைத்துச் சந்தேகங்களும் களையப்படவேண்டு மென்பதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பி அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது''’எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார், “"மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடக்கிறது. மாணவியால் எழுதப்பட்ட கடிதம் அவர் எழுதியதல்ல என அவரது தாய் சொன்னதையும் கருத்தில்கொண்டு விசாரிக்கிறோம். மாணவியின் பாட நோட்டுகளைக் கொண்டு அவரது கையெழுத்து ஒப்பிடப்படும்''’என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள், "இந்தப் பள்ளி நிர்வாகம் மிகவும் கறாராக இருப்பார்கள். பள்ளியில் இடம்கேட்கும் வி.ஐ.பி.கள் சிபாரிசுகளைப் புறந்தள்ளுவதோடு அரசியல் கட்சிகளுக்கு அன்பளிப்பு எதுவும் தருவதில்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது பலருக்கும் மிகுந்த கோபம். இப்பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மற்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் மறைமுகத் தூண்டுதலும் இந்த கலவரத்திற்கு காரணமாக இருக்கலாம்'' என்று கூறுகின்றனர்.
இரண்டு மூன்று நாட்கள் போராட்டம் நடந்துவந்த நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களை சமூக ஊடகங்களான வாட்ஸ்அப் உள்ளிட்டவை மூலம் திரட்டியுள்ளனர். கருப்புச் சீருடை அணிந்தவர்கள்தான் பள்ளிக்கு உள்ளே சென்று பஸ்ஸை அடிப்பது, தீவைப்பது, பள்ளி வளாகத்திலிருந்த டிராக்டரைக் கொண்டு பஸ்களை இடித்து நாசமாக்கியது, பள்ளியிலிருந்த பொருட்களை சேதமாக்கியது போன்றவற்றில் ஈடுபட்டனர். இவர்கள் யார்? கருப்புச் சட்டை யுடன் கலவரத்தில் கலந்து கொண்டதன் பின்னணி என்ன? என்ற கேள்வியெழுகிறது.
மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்களை, தமிழக அரசு சட்டத்திற்கு முன்பு கொண்டுவந்து நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதேபோன்று, "கலவரத்தைத் தூண்டி குளிர்காய நினைத்தவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தமிழக மெட்ரிகுலேஷன் சங்க நிர்வாகி கள் தரப்பில் கூறுகின்றனர்.
பள்ளியின் நிர்வாகி ரவிக்குமாரை தொடர்புகொள்ள பல வழியில் முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இறந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரதேப் பரி சோதனை செய்ய உத்தரவிட்டுள் ளார். "இத்தனை பெரிய கலவரம் நடந்திருக்கிறது, வன்முறையை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்திருக்க வேண்டாமா?' என கேள்வி யெழுப்பியதுடன், "இதற்குக் காரணமான வாட்ஸ் குரூப் அட்மினைக் கைது செய்யுமாறும்' உத்தரவிட்டுள்ளார்.
கலவரத் தீயால் சட்டம் ஒழுங்குக்கு சவால் விட்டவர் களையும், மாணவியின் மர்ம மரணத்துக் காரணமானவர்களையும் தமிழக காவல்துறை சட்டத்துக்கு முன் நிறுத்தி தங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்தெறிய வேண்டும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/school-t.jpg)