பல்லாண்டுகளுக்கு முன் காலாவதி யான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய தேதி அச்சிட்டு, விற்பனை செய்ய வைத் திருந்த 1500 பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து களை வேளாண்துறை அதிகாரிகள் கைப் பற்றியுள்ள அதிர்ச்சி சம்பவம், புதுக் கோட்டை பகுதி விவசாயிகளை கலக்கமடைய வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத் தில் ஒரு தென்னந்தோப்பு, வீடு, கடை எனப் பல்வேறு இடங்களில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கி வந்து, காலாவதி தேதியை அழித்து புதிய தேதியை அச்சிட்டு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களிலுள்ள வேளாண் பூச்சி மருத்துக்கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் கும்பல் செயல்படுவதாக கடந்த ஒரு மாதம் முன்பு வேளாண்துறை மாவட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் சொல்லியும் கண்டுகொள்ளாத நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் ரகசிய புகார் அளித்துள்ளனர்.
அதையடுத்து, கடந்த 5ஆம் தேதி செவ்வாய் கிழமை, வேளாண் உதவி இயக்குனர்கள் திருவரங்குளம் வெற்றிவேல், அறந்தாங்கி பத்மபிரியா குழுவினர், கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்திலுள்ள விவசாயி வேம்பங்குடி மாதவனின் தென்னந்தோப்பில் சோதனை செய்தபோது, 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான 300க்கும் மேற்பட்ட பூச்சி மருந்துகளையும், நுண்ணூட்ட மருந்துகளையும் கைப்பற்றி கீரமங்கலம் வேளாண்துறை அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர்.
தொடர்ந்து கீரமங்கலம் காந்திஜி சாலையில் உள்ள ஐயப்பன் என்பவரின் பூச்சி மருந்துக்கடையில் வேளாண் அலுவலர்கள் ஆய்வுக்கு செல்ல, கடை மூடப்பட்டிருந்தது. மறுநாள், கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் முருகதாஸ், கீரமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன் முன்னிலையில் கடையைத் திறந்து சோதனை செய்தபோது, 2015 முதல் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், புதிய காலாவதி தேதி அச்சிடப்பட்ட மருந்துகள் எனப் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 1,500 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களும், வேளாண்துறையில் விற்பனை செய்யும் விதை நெல், எள், உளுந்துப் பைகளும் கண்டறியப்பட்டது. மருந்துப் பாட்டில்களில் விலைப்பட்டியலை அழிக்க உதவும் தின்னர் கெமிக்கல் பாட்டில்களையும், பிரிண்டிங் கருப்பு மை பாட்டில்களையும் சோதனையில் கண்டறிந்தனர். அவற்றைக்கண்டு தரக்கட்டுப் பாடு வேளாண் உதவி இயக்குனர் மதியழகனும் அதிர்ச்சியானார். அங்கு கைப்பற்றப்பட்ட அனைத்து மருந்து பாட் டில்கள் குறித்த விவரங்களையும் பதிவுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், அவை அனைத்தையும் அட்டைப் பெட்டிகள், சாக்குப் பைகளில் அடைத்து கீரமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்திற்கு கொண்டு சென்றனர்.
வேளாண்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் பற்றிய விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாகக் கொடுத்த பிறகு, கைப்பற்றப்பட்ட மருந்து பாட்டில்களை 8ஆம் தேதி ஆலங்குடி மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர். காலாவதியான மருந்துகளையும், காலாவதி தேதி, விலை அழிக்கப்பட்டு புதிய தேதி, விலை அச்சிடப்பட்டதையும் பார்த்து நீதிமன்றமே அதிர்ந்துள்ளது. பூச்சிக்கொல்லி விஷத்திலேயே விஷம் கலந்ததுபோல் காலாவதியான மருந்துகளை விவசாயிகளின் தலையில் கட்டி லட்சக்கணக்கில் லாபமீட்ட முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துக்கடைகள் மீது விவசாயிகள் கடும் கோபத்திலிருக்கிறார்கள்.
காலாவதியான மருந்து பாட்டில்களை வைத்திருந்த அய்யப்பன் நம்மிடம், "காலாவதியான மருந்துகள் இருந்தது உண்மை தான். ஆனால் அந்த மருந்துகளை விற்பனைக்காக வைத்திருக்கவில்லை. கொரோனா காலத்திற்கு பிறகு கடை திவாலாகிவிட்டதால் அந்த மருந்துகள் காலாவதியாகிவிட்டன. நான் தவறு செய்யவில்லை. தவறு செய்திருந்தால் கீரமங்கலத்தில் உயர்ந்து நிற்கும் சிவன் என்னை தண்டிப்பார்'' என்றார். ஆனால், கொரோனா பாதிப்பு நடந்ததோ 2019 - 2020 காலகட்டத்தில்... கண்டெடுக்கப்பட்ட மருந்துகளோ 2014, 2015 காலகட்டங்களிலேயே காலாவதியானவை. மேலும், வேளாண்துறை விதைப்பைகளும் இருப்பதால் வேளாண்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எனவே இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி, உடந்தையாக இருக்கும் அதிகாரிகளின் நெட்வொர்க்கை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி விரைவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளது'' என்கிறார் சி.பி.ஐ. நகரச் செயலாளர் தமிழ்மாறன்.
இந்தத் தகவல்கள் பற்றி வேளாண்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ். கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படுமா... பொறுத்திருந்து பார்ப்போம்.