ஜா புயலில் டெல்டா விவசாயிகளின் தென்னை மரங்கள் பலவும் வேரோடு சாய்ந்ததில், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவேயில்லை. நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "போர்க்கப்ப லில் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து விவசாயகளுக்கு வழங்குவோம்'' என்று சொல்லிவிட்டு போனதோடு சரி. தமிழ்நாடு அரசு கொடுத்த நிவாரணமும் போதவில்லை என்ற சூழலில், வட்டிக்கு கடன் வாங்கி புதிய தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்தனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக தேங்காய் விலை படிப்படியாகக் குறைந்து செலவுக்கேற்ற விலை கிடைக்காமல் திண்டாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15 ரூபாய் வரை விற்ற தேங்காய், தற்போது 7 ரூபாய், 8 ரூபாய்க்குத்தான் விற்பனையாகிறது.

இந்த நிலையில் "தேங்காய்க்கு உரிய விலை கொடு, உறித்த தேங்காய் கிலோ ரூ.50க்கு அரசே கொள்முதல் செய்! ரேசன் கடைகளில் சமையல் எண்ணெயாக தேங்காய் எண்ணெயை வழங்கு!' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், சாமி.நடராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை கடைவீதியில் தொடங்கி பேரணியாகச் சென்று, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

dd

போராட்டக்களத்தில் நின்ற சாமி.நடராஜன், "கஜா புயலுக்கு பிறகு தேங்காய் உற்பத்தி குறைந்துவிட்டது. தற்போது தேங்காய் விலையும் குறைந்துவிட்டதால் டெல்டா தென்னை விவசாயகளின் நிலை ரொம்ப மோசமாக உள்ளது. கிராமங்கள் தோறும் இருந்த தென்னை நார்த் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. இதுபோல் மொத்தத் தொழிலும் முடங்கிக் கிடக்கிறது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். மத்திய அரசு, தேங்காய்க்கு ஊக்கத் தொகை வழங்க முன்வர வேண்டும். ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, நேரடி தேங்காய் கொள்முதல் நிலையங்களைத் திறந்து கொள்முதல் செய்ய வேண்டும்.'' என்றார்.

Advertisment

போராட்டத்தில் இருந்த மேலும் பல விவசாயிகளோ, "தேங்காய் விலை வீழ்ச்சிக்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை வலுவாக எதிர்த்தவர்களில் தமிழ்நாடு விவசாயிகளும் அதிகம். வேளாண் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்பு வரை தென்னையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கொப்பரை, எண்ணெய், தென்னை நார்க்கயிறு, தென்னை நார்க்கழிவு கேக் ஆகியவற்றை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. ஆனால் போராட்டத்திற்கு பிறகு மொத்த ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டது. இப்படி தமிழக தென்னை விவசாயிகளைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வேண்டும்'' என்றனர். தென்னை விவசாயிகளின் துயரை நீக்குமா மத்திய அரசு?