(41) தற்கொலை எண்ணம் தலைதூக்கியது!
"16 வயதினிலே'’படத்தைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் "பொண்ணு புடிச்சிருக்கு'’ படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி சென்றோம். "மண்வாசனை'’ படம் மூலம் எங்க டைரக்டர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியனையும், ரேவதியையும் நடிக்க வைக்கலாம் என நான் சொன்னதை ஏற்கவில்லை ராஜ்கண்ணு. இதனால் அவர் சொன்ன ஒருத்தரை ஹீரோவாக்கி, புதுமுகத்தை ஹீரோயினாக்கி படப்பிடிப்பு நடத்தினோம். அந்தப் பெண் நடிப்பதற்கு சிரமப்பட்டதால் நிறைய ரீ-டேக் ஆனது. அதனால், "நாளை அந்தப் பெண்ணிற்கு பயிற்சி கொடுத்துவிட்டு, படப்பிடிப்பு நடத்தலாம்' என ஹோட்டலுக்குத் திரும்பினோம். நானும், கேமராமேன் ரவிபாபுவும் அறையில் தூங்கிக்கொண்டிருந்தோம். காலையில் எழுந்தால்... ஹோட்டலில் தங்கியிருந்த ஒட்டுமொத்த யூனிட்டையும் காணோம்.
ஹோட்டல் ஊழியர் ஒருவர் வந்து, "தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சார் மொத்த ஆட்களையும் கூட்டிட்டுப் போய்ட்டார். உங்களை ரிஷப்ஸனிஸ்ட் வரச் சொன்னார்''’எனச் சொல்லவும் நானும், ரவிபாபுவும் போனோம்.
"உங்க ரெண்டு பேரையும் மெட்ராஸுக்குப் போகச் சொல்லிட்டார்'' ராஜ்கண்ணு.”
"ஏன்?''”
"உங்களுக்கு டைரக்ஷன் பண்ணத் தெரியலையாம்... பஸ் செலவுக்கு 600 ரூபாய் கொடுத்துட்டுப் போயிருக்கார்... இந்தாங்க''’என ரூபாயை கொடுத்தார்.
"இங்க இருந்து பழநி மலை பக்கம்தான். இவ்வளவு தொலைவு வந்துட்டோம். பக்கத்துல முருகனையும் தரிசனம் பண்ணீட்டு போயிடு வோம்''’என்றார் ரவிபாபு. நான் அவமானத்தில் உறைந்து போயிருந்தேன். நான் ரவியிடம் என்ன சொன்னேன் என்பது கூட நினைவில் இல்லை.
"வாங்க... அப்படியே படி வழியா மலையேறலாம்''’என அவர் சொன்னபோதுதான் சுதாரிப்பே வந்தது.
"இல்ல... நீங்க வேணும்னா போய்ட்டு வாங்க. என்னை அந்த ஆளு (ராஜ்கண்ணு) ரொம்ப அவமானப்படுத்திட்டான். எனக்கு டைரக்ஷன் பண்ணத் தெரியலனு அவமானப்படுத்தின அந்தாளு தன்னோட வாயாலேயே என்னை ’"டைரக்டரே'னு கூப்பிடுற வரைக்கும் நான் பழநி மலை ஏறமாட்டேன்''’எனச் சொன்னேன்.
என் எண்ணத்திற்கு மதிப்பளித்து, ரவியும் கீழே இருந்தே முருகனுக்கு கும்பிடு போட்டார். சென்னைக்கு பஸ்ஸில் கிளம்பினோம்.
சென்னையில் என்னை எதிர்பார்த்து ஒட்டுமொத்த மீடியாவும் காத்திருக்கு.
"ஷூட்டிங் கூட்டிப்போன ஒரு டைரக்டரை ‘டைரக்ஷன் தெரியலனு அம்போனு விட்டுட்டு போயிடுச்சு மொத்த யூனிட்டும்...' அப்ப டிங்கிற செய்தி எவ்வளவு பரபரப்பு நியூஸ். என்னிடம் பேட்டி கண்டு எழுதுவதற்காக மீடியா பரபரப்பாக என்னை எதிர்பார்த்திருந்தது.
மீடியாவை இந்த அவமானத்தோடு சந்திக்க வேண்டாம் என நண்பர் சிவாவின் வீட்டிலேயே முடங்கினேன்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்... தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
"தற்கொலை பண்ணிக்கலாமா?' என்றுகூட நினைத்தேன்.
என் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருந்தது. இந்தக் கேள்விக் குறியை ஆச்சர்யக் குறியாக மாற்றும் சம்பவம் ஒன்று நடந்தது.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்... கதாசிரியர் எம்.எஸ்.மதுவை தற்செயலாக சந்தித்தேன். அவரை என் அறையில் தங்கவைத்தேன். அவர்தான் "பொண்ணு புடிச்சிருக்கு'’படத்தோட கதை-வசனகர்த்தா. அவர்தான் ராஜ்கண்ணுவிடம் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தவர்.
ராஜ்கண்ணு என்னை அவமானப்படுத்தியதை அறிந்து வேதனைப்பட்ட மது, “"உங்க சங்கடமெல்லாம் தீர ஒரே வழி... திருச்சி வெக்காளி அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வாங்க. அங்க பிரார்த்தனை சீட்டுனு ஒண்ணு விற்பாங்க. அந்த சீட்டு ஒண்ணு வாங்கி உங்க கோரிக்கையை எழுதி, கட்டிவிட்டுடுட்டு வாங்க. ஏழே நாள்ல உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்''’என்றார்.
கோயிலுக்கு போய்ட்டு வர்றதுக்கு கைல காசு வேணுமே...
அப்போது மக்கள் தொடர்பாளராக இருந்த சித்ரா லட்சுமணன், பாரதிராஜாவின் படங்களில் பணிபுரிந்த வகையில் எனக்கும் நல்ல பழக்கம். அந்தச் சமயம் அவர் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். அவருடைய ஆபீஸுக்கு அடிக்கடி போவேன்.
அந்தச் சமயத்தில் பஞ்சு அருணாசலம் தொடர்ச்சியாக படம் தயாரிச்சுக்கிட்டிருந்தார். தொடர்ச்சியா படம் ரிலீஸாகிக்கிட்டே இருந்தது. மணிவண்ணன் டைரக்ஷனில் வாரம் ரெண்டு படம் வெளியாகிக்கொண்டிருந்தது. சித்ரா லட்சுமணனிடம்... "பஞ்சு சார்கிட்ட நீங்க பேசி எனக்கு ஒரு பட வாய்ப்பு வாங்கிக் கொடுங்க சித்ரா சார். நீங்க சொன்னா பஞ்சு கேட்பார்''’ எனச் சொன்னேன்.
ஆனால்... ராஜ்கண்ணு என்னை அவமதித்து அனுப்பியதால்... எனக்கு டைரக்ஷன் பண்ணத் தெரியலை எனச் சொல்லிவிட்டதால்... சினிமாக்காரர்கள் மனசில் அது பதிந்து விட்டது. என்னை திறமை இல்லாதவனாக, டைரக்ஷன் பண்ணத் தெரியாதவனாகவே நினைத்து, எனக்கு வாய்ப்புத் தராமல் மறுத்துக்கொண்டே வந்தார்கள். மனசுக்குள் வேதனை வேதனை. அதைத் தவிர வேறு இல்லை. கதாசிரிய ராக ராஜ்கண்ணு ஆபீஸிற்கு போய்வரும் மது கொண்டு வரும் இருபது, முப்பது ரூபாய்களை வைத்து ஓட்டிக் கொண்டிருந் தோம் நாட்களை. மது சொன்ன மாதிரி வெக்காளியம்மன் கோவிலுக்கு போய்ட்டு வரலாம் எனத் தோணியது. தெரிந்தவர் களிடம் பணம் கேட்கலாமென்றால்... என்னைப் பார்த்தாலே தெரிந்தவர்களெல்லாம் தெறித்து ஓட ஆரம்பித்தார்கள்.
பாரதிராஜாவின் கம்பெனியில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்த வடுகநாதனின் தம்பி தியாகராஜன் ஒரு ஆபீஸ் போட்டிருந்தார். மணிவண்ணன் இயக்கத்தில் படம் பண்ணுவதற்காக. நான் ரொம்ப கஷ்டப்படுவதை அறிந்து, “"நீ வேணும்னா என்னோட ஆபீஸ் வந்து தங்கிக்கய்யா'’என்றார்.
அடிக்கடி அங்கேயும் சென்று தங்கினேன்.
சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் அந்த ஆபீஸ் ஜெகஜோதியா இருக்கும், சினிமாவில் பிஸியா இருக்கிற சிலர் வருவாங்க. மணிவண்ணனைப் பத்திதான் பேச்சா இருக்கும். மணிவண்ணனோட புகழ் கொடிகட்டிப் பறந்த நேரம் அது.
"நமக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குதே'னு எனக்கோ சோகம். என்னைக் கொஞ்சம் ரிலீஃப் பண்ணிக்கிறதுக் காக அந்த ஆபீஸ் பக்கத்துல இருந்த ஒரு வீணை மாஸ்டர்கிட்ட வீணை கத்துக்க ஆரம்பிச்சேன். தெரு கார்னர்ல வைஜெயந்தி மாலா வீடு. அவங்க அந்தக் காலத்து கனவுக்கன்னியாச்சே.
"எப்பயாவது வெளில வரமாட்டாங்களா?'னு ஏக்கத்தோட அடிக்கடி அந்த வீட்டுப் பக்கம் போறது. அப்படியே நடந்து கவிதா ஹோட்டல் வாசலுக்கு வர்றது. இப்படியே ஒவ்வொரு நாளும் கஷ்டமா நகர்ந்தது. "இவ்வளவு பிரச்சினைக்கும் ஒரே தீர்வு... உயிரை மாய்ச்சுக்கிறதுதான்'’என்கிற எண்ணம் மேலோங்கியது. அப்போ... எம்.ஜி.ஆர்-தேவிகா நடிப்பில் வந்த "ஆனந்தஜோதி ’படத்தில் இடம்பெற்ற ஒரு கண்ணதாசன் பாடல் ரேடியோவில் பி.சுசீலா குரலில் காதுகளின் வழியே மனதைத் தழுவியது.
காலமகள் கண்திறப்பாள் சின்னைய்யா -நீ
கவலைப்பட்டு கண்ணீர் விட்டு என்னய்யா’
பாடலைக் கேட்டதும் ஒரு தெளிவு. உத்வேகம்.
"இனி தற்கொலை பற்றியே சிந்திக்கக்கூடாது'’ என முடி வெடுத்தேன். மனதில் நேர் சிந்தனை இருந்தால், அது சார்ந்தே சிந்திக்கத் தூண்டும். அப்படியேதான்... நண்பர் மது சொன்னது ஞாபகத்திற்கு வர... அங்கும், இங்குமாய் காசு புரட்டிக்கொண்டு, திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்குச் சென்றேன்.
பிரார்த்தனைச் சீட்டு கட்டிவிட்டு, மறுபடி சென்னை திரும்பினேன். கையில் ஒரு ரூபாய். ஆனால் வயிறு முழுக்க பசி. ஒரு ரவா தோசை ஒரு ரூபாய். ஒரு தோசை இந்தப் பசிக்கு போதாது. இருந்தாலும் ஒரு தோசையை சாப்பிட்டு சமாளிக்க லாம்... என பாண்டிபஜாரில் கவிதா ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு ரவா தோசை வாங்கி, நிறைய சாம்பாரை ஊற்றி, சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்.... "டைரக்டரே'’என்று ஒரு குரல்.
திரும்பிப் பார்த்தேன்.....
(பறவை விரிக்கும் சிறகை)