(4) கட்சி ஆபீஸில் கனவு!
என் அப்பா என்னைப் பார்ப்பதற்காக பெங்களூருக்கு பயணித்துக் கொண்டிருக்க...
நான் என் எதிர்காலத்தைத் தேடி சென்னைக்கு ரயிலில் பயணித்தேன்.
சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தாச்சு. சென்னையில் எனக்கு எதுவும் தெரியாது, யாரையும் தெரியாது. என்னோட அக்காள்ல ஒண்ணு மைலாப்பூர்ல இருக்குன்னு தெரியும். ஆனா அட்ரஸ் தெரியாது. அப்படியே பொடிநடையா நடந்து அண்ணா சாலை வழியா... சாந்தி தியேட்டர்கிட்ட வந்து சேர்ந்தேன்.
தியேட்டரப் பார்த்ததும் மனசு குஷியாயிருச்சு. அதுவும் சிவாஜி சாரோட சொந்த தியேட்டராச்சே. படம் பார்க்கலாம்னு போனேன். "சவாலே சமாளி'’ படம் போட்டிருந்தாங்க. கூடவே ‘"ஹவுஸ்ஃபுல்' போர்டும் போட்டிருந்தது. அடுத்த ஷோ பார்க்க லாம்னு காத்திருந்தேன். அலுப்பா இருந்தது. தியேட்டரோட மூலையில் போய் உட்கார்ந்தேன். தியேட்டர் சுவர் முழுக்க சிவாஜி நடிச்ச படங்கள், வெளியான தேதி, படத்தை டைரக்ஷன் பண்ணின வங்க பெயர்கள்... இப்படி எல்லா விபரமும் போட்டிருந்தது.
"இந்த சுவத்துல நம்மளோட பெயரும் இடம் பிடிக்கணும்'னு மனசு முழுக்க ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கிட்டேன்.
"ஆசை மட்டுமல்ல, தூக்கமும் வெட்கம் அறியாது'னு சொல்வாங்க. அத மாதிரித்தான்... தூக்கம் கண்ணைச் சொருக... மூலையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவன்... அசந்து தூங்கிவிட்டேன். யாரோ என்னை தொட்டு எழுப்புவது மாதிரி இருக்கவும், திடுக்கிட்டு முழித்தேன்.
"ஊரவிட்டு ஓடி வந்துட்டியா?''’என கேட்டார் அவர்.
"ஆமாம்''’ என்பதாக தலையை ஆட்டினேன்.
"எந்த ஊரு? ஏன் ஓடி வந்த?''”
சொந்த ஊரையும், பெங்களூர் அக்காவின் வீட்டிலிருந்து ஓடி வந்ததையும் சொன் னேன்.
"இங்கயெல்லாம் படுக்கக்கூடாது''”
"சரிங்க'’என்பது போல தலையாட்டி விட்டு... கிளம்பி னேன்.
"நில்லு... எங்க போற? ரொம்பச் சின்னப்பயலா வேற இருக்கியே'' என பரிதாபப் பட்டவர்... “"நான் இன்னைக்கி ராத்திரி நீ தங்குறதுக்கு ஒரு இடத்துல அனுமதி வாங்கித் தர்றேன். காலைல நான் வர்ற வரைக்கும் நீ அங்கதான் இருக்கணும். கைல வச்சிருக்க காசை வச்சு சாப்பிட்டுக்க. நான் மத்தியானம் அங்க வரும்போது உனக்கு பணம் தர்றேன். அதை வச்சு... பெங்களூருக்காவது... இல்லேன்னா உன் சொந்த ஊருக்காவது போயிடணும்... சரியா?''’எனக் கேட்டார்.
"சரிங்க''’என்றேன்.
நான் இரவு தங்கிக்கொள்வதற்காக அவர் என்னைக் கூட்டிப்போய் விட்டுச் சென்ற இடம்.... தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரியக் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். எனக்கு அங்கே தங்குவதற்கு உதவி செய்த அந்த நல்ல மனிதரை யார் என்று அப்போது எனக்குத் தெரியாது. அதன்பிறகு தெரிந்துகொண்டேன். அவர்... அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் ராஜசேகர்.
எதிரே... "மிட்லண்ட்' தியேட் டரில் பிரமாண்டமாக "அடிமைப் பெண்'’எம்.ஜி.ஆர் நின்றிருந்தார். ’அட நம்ம தலைவர் படம்... பார்க்கணுமே...’ என மனசு பரபரத்தது. நைட் ஷோ பார்த்து விட்டு... அதிகாலை இரண்டு மணி வாக்கில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து படுத்துக்கொண்டேன்.
சினிமாவில் நான் பெரிய டைரக்டர் ஆகிவிட்ட மாதிரி கனவு வந்தபடியே இருந்தது.
விடிகாலையிலேயே எழுந்து கொண்டேன். "அம்மாவுக்கு உடம்பு முடியாம இங்க கூட்டி வந்து, அம்மா இறந்தப்போ... மைலாப்பூர்ல அக்கா வீட்டுக்கு கூட்டிப் போனாங்களே...'’என ஞாபகம் வந்தது.
"ராஜசேகர் சார் மத்தியானம் வந்து பணம் தர்றதா சொல்லீருக்கார். அவரு பணம் கொடுத்த பிறகு என்ன பண்ணலாம்னு அப்புறம் யோசிக்கலாம். இப்போ அக்கா வீட்டுக்குப் போய்... காலை சாப்பாட்ட முடிச்சிட்டு வந்திடலாம்'னு ஒரு யோசனை வந்தது.
பதினாலு வருஷத்துக்கு முன், அக்கா என்னை மைலாப்பூர் கூட்டிப் போனபோது... சில கட்டிடங்கள் என்னைக் கவர்ந்தது. அந்த அடையாளங்களை நினைவுக்குக் கொண்டுவந்தே... இப்போது அக்கா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
என்னைப் பார்த்ததும் அக்காவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. "பாலு... வாடா.... வாடா.... எப்டிடா இருக்க? இப்பத்தானே காலேஜ்ல சேர்ந்திருக் கன்னு சொன்னாங்க. காலேஜ்லருந்து டூர் வந்தீங்களா?...''” என வீட்ல எல்லாருமே அன்பா விசாரிச்சாங்க. நல்லா அலுப்புத் தீர குளிச்சேன். வயிறு முட்ட சாப்பிட்டேன்.
நான் வீட்டுக்குள்ள வந்தபோது அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம் இப்போது பதிலைச் சொன்னேன்....
"ஒண்ணுமில்லக்கா.... நான் வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன்''’என்றேன்.
அவ்வளவுதான்... அக்கா மயக்கம் போட்டு விழுந்துருச்சு.
எங்க அக்கா வீட்டுக்காரர் அதட்டினார்.... "அப்போ நீ வீட்டை விட்டு ஓடி வந்தது யாருக்கும் தெரியாதா?''’எனக் கேட்டார்.
"ஓடி வர்றவன் வீட்ல எல்லாருட்டயும் சொல்லிட்டா வரமுடியும், சொன்னாத்தான் விடுவாங்களா?'’என மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.
"மெட்ராஸ் வர்றதுக்கு ஏதுடா பணம்?''”
"உண்டியலை உடைச்சேன்''”
அப்படி நான் சொன்னதும்... ஏதோ கொலை செய்துவிட்டதைப் போல.... என்னைப் பார்த்தார்கள்.
"ஒரு ஓரமா போய் உட்காரு''’என்றார்.
ஒரு மூலையில் சாய்வதற்கு வசதியாக உட்கார்ந்துகொண்டேன்.
என்னைப் பார்க்க பெங்களூரூக்கு அப்பா வருகிறார் என்று தெரிந்துதானே... நான் காலேஜை கட் அடித்துவிட்டு அடிக்கடி சினிமாவுக்குப் போவதைச் சொல்வார்கள், அப்பா கடுமையாக திட்டுவார் என்று தெரிந்துதானே நான் சென்னைக்கு ஓடிவந்தேன்.
"இந்நேரம் அங்க என்ன களேபரம் நடக்குமோ?'’ என எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள் இங்கே.
அப்பா போய் இறங்கியதும்... “
"அப்பா... பாலுவக் காணோம்... எங்க போனான்னு தெரியல. நாங்களும் பல இடங்கள்ல தேடிட்டோம்....''’என அக்கா அழ... அப்பா அதிர்ச்சியாகியிருக்கிறார்.
அதைவிட அதிர்ச்சி... போலீஸ் ஸ்டேஷனி லிருந்து. என்னை மாதிரியே உடல் வாகோட... "யாரு பெத்த புள்ளயோ... ஆக்ஸிடண்ட்ல சிக்கி இறந்துருக்கான். அந்த பாடியை எங்க வீட்டுல இருந்து பக்கமா இருக்க போலீஸ் ஸ்டேஷன் வராந்தாவுல வச்சிருக்காங்க. மார்ச்சுவரிக்கு கொண்டுபோக வண்டிக்காக பாடி வெயிட்டிங். அதனால்.... அழுகையும், அதிர்ச்சியுமா அங்க போய் பார்த்துட்டு... ‘பாலு... நம்மளயெல்லாம் விட்டுட்டு போய்ட்டான்...'’என முடிவே பண்ணிய நேரத்தில்...
ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சு... "கையெழுத்து போட்டு பாடிய வாங்கிக்கங்க... ஜி.ஹெச்.சுக்கு வந்துருங்க'’என ஒரு போலீஸ்காரர் சொல்ல... அதற்காக தயாராகிக் கொண்டிருக்க...
எங்க அக்கா மகன் ஓடி வந்து... "அம்மா மெட்ராஸ்லருந்து போன். பாலு மாமா அங்கதான் இருக்காராம்'னு சொல்ல... வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறார்கள்.
எங்க சென்னை அக்காவும், மாமாவும் பெங்களூரு அக்கா வீட்டுக்கு போன்பண்ணி... விஷயங்களை பரிமாறிக்கொண்டதன் மூலம் இந்த விஷயங்களை கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந் தேன்.
"அவனை வெளிய விடாதீங்க. அங்கயே பிடிச்சு வச்சிருங்க...'’என அப்பா சொல்லியிருப்பார் போல. என்னை அங்கிட்டு, இங்கிட்டு, எங்கிட்டும் நகர விடாமல் கைதியை கண்காணிப்பது போல கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு... பெங்ளூருவிலிருந்து ரயிலேறி, காலையில் மைலாப்பூர் வந்துவிட்டார் அப்பா.
காச் மூச்னு கத்தினார். அக்கா, மாமாவும் சேர்ந்து கத்தினார்கள். நான் எம்பாட்டுக்கு கல்லுளிமங்கன் மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
அவர்களாகவே ஆத்திரப்பட்டு... கோபப்பட்டு.... பிறகு அவர்களாகவே நிதானத்துக்கு வந்தாங்க.
அப்பா கேட்டார்....
"உன் மனசுல என்னதான் நினைச்சிருக்க?''”
"படிக்கப் பிடிக்கல... சினிமாவுல நுழையணும்''
"அதென்ன கேட்டுப் போட்டா மூடீருக்கு... திறந்து விடுறதுக்கு?''’என கேட்டவர்... சுதாரித்துக் கொண்டு.... "சிவாஜி கிட்ட பி.ஏ.வா நம்ம தூரத்து ரிலேஷன் குருமூர்த்தி இருக்கார்... உனக்கு மாமா முறை வரும். இன்னொரு சொந்தக்காரர் ராமமூர்த்தி, விஜயா ஸ்டுடியோவுல ரெக்கார்டிஸ்ட்டா இருக்கார். அவங்ககிட்ட பேசி... உன்னை சினிமாவுல சேர்த்துவிடச் சொல்றேன், என்கூட வா...''”என்றார் அப்பா.
எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.
ஆனா... அப்பாவோட ப்ளானே வேறயாச்சே!
(அக்ரஹாரத்தில் அல்லா)
(பறவை விரிக்கும் சிறகை)