(32) கார்த்திக்-ராதா காம்பினேஷன்!
"அலைகள் ஓய்வ தில்லை'’எனும் இளமை பொங்கும் காதல் கதைக்கு கதாநாயகியா ஒரு கல்யாண போட்டோவில் பார்த்த மாநிறமான இளம்பெண்ணை.... அம்பிகாவின் தங்கையை என் மனசுக்குள் தீர்மானித்து டைரக்டர் பாரதிராஜாவிடம் சொன்னேன்.
"அலைகள் ஓய்வதில்லை'’டிஸ்கஷனுக்காக எங்களுக்கு போட்டுத் தரப்பட்டிருந்த ரஞ்சித் ஹோட்டலின் மூன்றாம் மாடியில் தாயார் சரசம்மாவுடன் தங்கியிருப்பதையும் சொன்னேன்.
டைரக்டர் சொன்னதன் பேரில், நான் மூன்றாம் மாடிக்குச் சென்று, அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் போனேன். சரசம்மாவைப் பார்த்து, “"நான் பாரதிராஜா சாரோட அஸோஸியேட்''’என்றேன்.
பாரதிராஜா’ என்றதுமே பிரமிப்பு விலகாமல் என்னைப் பார்த்தார் சரசம்மா.
"டைரக்டர் உங்க பொண்ணைப் பார்க்கணும்கிறார்... கீழ் ஃபுளோர்லதான் ரூம்'' என்றேன்.
பாவாடை சட்டை அணிந்து ஒற்றை ஜடை போட்டு, மிக இயல்பான, எளிமையான தோற்றத்தில் இருந்த அந்தப் பெண்னை அழைத்துக்கொண்டு வந்து டைரக்டரிடம் அறிமுகப்படுத்தி, அவர் முன் அமரவைத்தேன்.
அந்தப் பெண்ணின் கண்களை சிறிது நேரம் பார்த்த டைரக்டர், "உனக்கு தமிழ் பேச வருமா?''’எனக் கேட்டார்.
"எந்தா?''’எனக் கேட்டார் அந்தப் பெண்.
"இவ்விடச் சூடி... அவ்விட நோக்கு''’என தெலுங்கும், மலையாளமும் கலந்து சொன்னார் டைரக்டர்.
அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.
"சார் நீங்க தமிழ்லயே பேசுங்க. அந்தப் பொண்ணுக்கு ஓரளவு புரிஞ்சுக்கிற கெப்பாஸிட்டி இருக்கும்''’என்றேன்.
மீண்டும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார் டைரக்டர். அந்தப் பெண் கொஞ்சம் வெட்கம் கலந்து சிரித்தது.
"ஒன்னோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு''’என டைரக்டர் சொல்ல... அந்தப் பெண்ணும் இன்னும் கூடுதல் அழகோடு சிரித்தது.
"உனக்கு அழத் தெரியுமா? கரையுமோ?''’எனக் கேட்டார் டைரக்டர்.
அடுத்த நிமிஷமே கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீரை உகுத்தது அந்தப் பெண்.
"இந்தப் பொண்ணு செலக்ட் ஆயிட்டாடா''’என நினைத்தோம்.
டைரக்டர் செலக்ட் பண்ணிவிட்டார் கதாநாயகியாக.
எப்பவுமே ஹீரோயின் சீக்கிரமே கிடைச்சிடுவாங்க. ஹீரோ கிடைக்கிறதுதான் கஷ் டம். ஏற்கனவே டான்பாஸ்கோ ஸ்கூல் பசங்க நான்கு பேர்களை கதைக்கு நண்பர்களாகத் தேர்வு செய்து, அதில் தீபக் என்கிற பையனை ஹீரோவாக்க ஐடியா வைத்திருந்தார் டைரக்டர்.
ஆனால் இப்போது கதாநாயகியின் உயரம், உடலமைப்பு, தோற்றத்திற்கு ஏற்றபடி ஹீரோவைத் தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
"பாலா... வாயேன்... ஒரு காஃபி சாப்பிட்டுட்டு வரலாம்''’என காரில் என்னை அழைத்துக் கொண்டார்.
டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குப் போனோம். காஃபி சாப்பிட்டோம். ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி காரில் அமர்ந்தார் டைரக்டர்.
"அப்படியே... போயஸ் கார்டன் வழியா போ''’என டிரைவரிடம் சொன்னார்.
"எதுக்கு இப்படி சுத்திக்கிட்டு போகச் சொல்றாரு? கார்ல போகும்போது சிந்திப்பாரோ...''’ என நினைத்துக்கொண்டே அவருடன் கிளம்பினேன்.
போயஸ் கார்டனில் ஒரு இடத்தில் வந்து கொண்டிருந்தபோது கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. காரைவிட்டு இறங்கினோம்.
"ஏம்ப்பா பங்ச்சர் போட்டுட்டு வர எவ்வளவு நேரம் ஆகும்?''”
"அந்த முனையில ஒரு கடை இருக்கு சார். பதினைஞ்சு -இருபது நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். போய் கூப்பிட்டு வந்தா லேட் ஆகும். டயரை நான் உருட்டிக்கிட்டே போய் பஞ்சர் போட்டுட்டு வந்துடுறேன்''’என டைரக்டரிடம் சொல்லிவிட்டு, டயரை கழற்றி உருட்டிக் கொண்டு போனார் டிரைவர்.
காரில் சாய்ந்துகொண்டு மீண்டும் ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தவர் எதிர்த்த வீட்டு கார்டனையே பார்த்தார்.
"அது யாரு வீடுய்யா?''”
"நடிகர் முத்துராமன் சாரோட வீடு. வீட்டு கார்டன்ல விளையாடிக்கிட்டிருக்க பையன் முரளி. முத்துராமன் சாரோட ரெண்டாவது மகன். முதல் பையன் கணேசன்''’என தகவல் சொன்னேன்.
"அந்தப் பையன் நடிப்பானா?''”
"அதான்... மனசுல அவனை ஹீரோவா ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களே...''”
"இல்லய்யா... இன்னும் அந்தப் பையன் என் மனசில ஒட்டல. ஆனா பார்க்க துறுதுறுன்னு இருக்கான். வாய்யா... போய் பேசலாம்''’எனச் சொல்லிவிட்டு, சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு நடக்க... நானும் அவருடன் எதிர் வீட்டுக்கு நடந்தேன்.
ஹாலில் உட்கார்ந்திருந்தார் முத்துராமன்.
டைரக்டரைப் பார்த்ததும் "வா... பாரதி...'' என உற்சாகமாக வரவேற்றார்.
எனக்கு ஷாக்!
"ஏற்கனவே ரெண்டு பேருக்கும் பழக்கமா?'’என யோசித்தபடி நான் அவர்களையே பார்க்க...
"என்ன பார்க்கிற? நான் நடிச்ச படம் ஒண்ணுல பாரதி அஸோஸியேட் டைரக் டரா வொர்க் பண்ணீருக் காப்ல''’-என்னோட ரியாக்ஷனுக்கு விளக்கம் கொடுத்தார் முத்துராமன்.
"காஃபி கொண்டு வரச் சொல்லவா பாரதி''”
"அதெல்லாம் வேணாண்ணே... காஃபி சாப்டுட்டுத்தான் வந்தோம். வெளிய விளையாடுறானே... அந்தப் பையன்...''”
"என் மகன்தான். முரளி. பெரியவன் கணேஷ் வெளிய போயிருக்கான்''”
"இந்தப் பையன் நடிப்பானா?''”
டைரக்டர் இப்படிக் கேட்டதும் சின்ன தயக்கம் மின்னி மறைந்தது முத்துராமன் முகத்தில். “"கேளேன்''’என்றவர்... "முரளி இங்க வா...''’என ஜன்னல் வழியாகவே கூப்பிட்டார்.
அந்தப் பையன் ஓடி வந்தான்.
"நீயே அவன் கிட்ட கேட்டுக்க''’என்றார் முத்துராமன்.
"ஏம்ப்பா... நீ நடிக்கிறியா?''’என டைரக்டர் கேட்க...
ஒரு நிமிடம் தன் அப்பாவையும், டைரக்ட ரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு... "வொய் நாட்?'’என்றான்.
அந்தப் பையன்தான் "நவரச நாயகன்'’என பேர் வாங்கின, பல சூப்பர்ஹிட் படங்கள்ல நடிச்ச, நமக்கெல்லாம் ரொம்பப் பிடிச்ச ஹீரோ கார்த்திக்.
முட்டம் கடற்கரை கிராமம் போய்ச் சேர்ந்தாச்சு! அம்பிகாவின் தங்கையை ஹீரோயி னாக தேர்வு செஞ்சிட்டோமே, அவரின் சொந்தப் பெயர் உதயசந்திரிகா.
"இந்தப் பெயர் ஏதோ ரொம்ப நீளமா இருக்கிற மாதிரி இருக்கேய்யா''” என்ற டைரக்டர் “"ராதிகா மாதிரி ஒரு பேர் வைக்கணும். "ராதா'ங்கிற பேர் எப்படிய்யா இருக்கு?''’என என்னிடம் கேட்டார்.
"நல்லா இருக்கு சார், இதையே வச்சிடலாம்'' என்றேன்.
உதயசந்திரிகாவை அருகே அழைத்த டைரக்டர், "உன் பேரு உதயசந்திரிகா இல்லோ... இல்லல்லோ... இனிமே ராதா உன் பேரு''’என டைரக்டர் சொல்லச் சொல்ல... டைரக்டரின் மலையாளப் பேச்சால் ராதாவுக்கு சிரிப்புதான் வந்திருக்கும். ஆனாலும் சிரிக்க வில்லை. டைரக்டர் தொடர்ந்து “"இனிமே யான் உன்னை ராதான்னு தான் விளிக்கும். உதயசந்திரிகானு லெந்த்தி பேர் விளிக்கில்லா... ஓ.கே.யா?''’எனக் கேட்க...
ராதா மெல்ல தலையசைத்து திருப்தி தெரிவித்தார்.
"மனோபாலா.... நாளைக்கி சினிமா இண்டஸ்ட்ரியில பெரிய ஹீரோயினா வரப்போற பொண்ணுக்கு பேர் வச்சிருக்கோம். ஏதாவது ஸ்வீட் ஏற்பாடு பண்ணுய்யா''’என்றார்.
நான், செட் அஸிஸ்டெண்ட்டை அழைத்து ஏதாவது ஸ்வீட் வாங்கிவரச் சொன்னேன்.
முட்டம் கடற்கரையில் இருந்த ஒரே ஒரு பெட்டிக் கடையில் கமர்கட் மிட்டாய்தான் இருந்தது. 20 கமர்கட் வாங்கிக்கொண்டு வந்து ஆளுக்கொன்றாய் சாப்பிட்டோம்.
தமிழ் சினிமா உச்சத்துக்குப் போன ஹீரோயின்களில் ஒருவரான ராதாவுக்கு இப்படித்தான் கமர்கட் கொடுத்து பெயர் சூட்டு விழா நடத்தினோம்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களை’ பூக்க வைக்க நானும், மணிவண்ணனும் பட்டபாடிருக்கே...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்