(13) குடிசை கட்டிய கதை!
ஹீரோவாக சிவகுமார், வில்லனாக கமல், ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, ஜெயசுதா, எஸ்.வி.சுப்பையா உள் ளிட்டவர்கள் நடிப்பில் கே.பாலசந்தரின் தனித் துவமான இயக்கத்தில் வந்த படம் "சொல்லத் தான் நினைக்கிறேன்.'
ஆனந்த விகடனில் மணியன் ‘"இலவு காத்த கிளியோ'’என்ற பெயரில் எழுதிய கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கினார் பாலசந்தர். மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் தயாரித் திருந்தார்கள்.
இந்தப் படத்தில், ஒரு இளைஞன் மீது மூன்று பெண்கள் காதல் வயப் படுவதாக கதை போகும். பொதுவாகவே பாலசந்தர் தனது படங்களுக்கான கேரக்டர்களின் குணாதிசயங்களை தனித்துவமாக அமைப்பார். இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும், சிறு கேரக்டர்களும் கூட உள்ளங்களை கொள்ளையடிப்பதாக இருக்கும். சொல்ல நினைப்பதை மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு சொல்லாமல் விடுவதால் உண்டாகும் விளைவுகள், அதையொட்டிய நிகழ்வுகள் என ரசிகர்களைக் கவர்ந்ததால் இந்தப் படமும் செம ஹிட்டடித்தது. படத்தில் எஸ்.வி.சுப்பையா அண்ணன் பேசும் ஒரு டயலாக் வெகு சாதாரண மானதுதான். ஆனால் பேச வேண்டிய இடத்தில் அந்த வசனம் இடம் பெற்றதால் ‘"வெளிய போங்கடா முண்டங்களா' என்கிற அந்த வசனத்தின் போது தியேட்டரில் கைத் தட்டல் பிச்சுக்கிச்சு.
இப்படி பாலசந்தரின் படங் களைப் பார்த்தே அவரை குருவாகக் கொண்டேன். அவரை ஒரு காதலியைப் போல நேசித்தேன்.
ஓவியக் கல்லூரியில் ஐந்தாண்டு பெயிண்டிங் பயிற்சிப் படிப்பு முடிந்தது. கல்லூரிப் படிப்பின் கடைசி நாள்...
நான், முரளி, கருப்பு முரளி, ரங்கராஜு, கிருஷ்ணமணி, கலை, ட்ராட்ஸ்கி மருது, பாண்டியன்... எத்தனை பேரு.... எல்லா நண்பர்களும் காலேஜ் வாசலில் வந்து நின் றோம். எங்களோட கண்களெல்லாம் கலங்கியிருந்தது.
"அடுத்ததா என்ன செய்யப்போறோம்?' என்கிற கேள்வி எல்லாரிடமும் இருந்தது.
"டேய் பாலு... நானும் அஞ்சு வருஷம் பெயிண்டிங் படிச்சவன்தான். ஆனா அந்தப் படிப்பா எனக்கு சோறு போடுது? ஏண்டா அஞ்சு வருஷம் படிக்கிற?''’என ஏற்கனவே நடிகர் சிவக்குமார் சொல்லியிருந்தார். அந்தப் படிப்பு எனக்கு பின்னாளில் உதவியாக இருந்ததை மறுப்பதற் கில்லை. ஆனாலும் நடைமுறை நிஜத் தைச் சொன்னார் சிவக்குமார். எனக்கு அவ்வப்போது ஆலோசனைகளும் வழங்குவது அவர் தான்.
"என் எதிர்காலம் என்ன?'' என்கிற கேள்வி என்னை குட்ட ஆரம்பித்தது. திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. மழையில் நனைந்துகொண்டே நடக்க ஆரம்பித்தேன்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே எனக்கு நடந்த நல்ல விஷயங்களுள் ஒன்று... நான் தயாரிப்பாளராக ஆனதுதான்.
ஜெயபாரதி என்கிற நண்பர் தன்னோட அப்பா து.ராமமூர்த்தி எழுதிய "குடிசை'’என்கிற கதையை படமாக்கலாம் எனச் சொன்னார். நான், ஜெயபாரதி, ராபர்ட்-ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து படத்தைத் தயாரித்தோம். என்னுடன் ஓவியக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நண்பர் கலையை, "குடிசை'’படத்திற்கு ஆர்ட் டைரக்டராக ஆக்கினேன். தண்டபாணி என்கிற நாடக நடிகர் ஹீரோவாக நடித்தார். நடிகை ராஜி கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தில்தான் நடிகை கமலா காமேஷ் அறிமுகமானார். (ராபர்ட்-)ராஜசேகர் ஒளிப்பதிவு செய்தார். நண்பர்களிடம் கொஞ்ச கொஞ்சம் பணம் வாங்கி, பணம் கிடைக்கிறபோது படப்பிடிப்பு நடத்துவோம். இப்படி நீண்டநாள் தயாரிப்பில் இருந்தது. 60 ஆயிரம் ரூபாய் செலவில் அந்தப் படத்தை எடுத்தோம். ராஜசேகரோட சகோதரர் ஜெயச்சந்திரன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டிருந்தார். அவரும் இந்தப் படத்தில் டெக்னிகல் ஸைடில் ஒர்க் பண்ணினார். ஜெயபாரதி இயக்கினார். கருப்பு-வெள்ளையில் தயாரானது படம்.
அந்த காலகட்டத்தில் சினிமாவில் பலருக்கும் தேசிய விருது வாங்கவேண்டும் என்கிற எண்ணக் கனவு இருந்தது. ஜெயபாரதிக்கும் அந்த வண்ணக் கனவு இருந்தது.
சென்னையில் எமரால்ட் தியேட்டரோ அல்லது பைலட் தியேட்டரோ... சரியா ஞாபகத்தில் இல்லை... அந்த ஒரு தியேட்டரில் மட்டும்தான் "குடிசை'’படம் வெளியானது.
இன்னைக்கு பாம்பேவில் ஆர்க்யூவில் இருக்கு "குடிசை'’பட பிரிண்ட். “"படத்தை டிஜிட்டல் வடிவத்திற்கு மாத்தணும்'’என ஜெயபாரதி என்னிடம் கொஞ்சநாட்கள் முன்பு சொன்னார். ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியால் என்னால் ஜெயபாரதியோட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஜெயபாரதி இலக்கியச் சிந்தனை உள்ளவர். அவர் மூலம்தான் எனக்கு சுப்ரமண்ய ராஜு உள் ளிட்ட இலக்கியவாதிகள் பழக்கமானார்கள். "குடிசை'’படம்தான் கமல்ஹாசனின் நட்பு வட்டத்திற்குள் ஜெய பாரதியை கொண்டு வந்தது.
நடிகை லட்சுமி அவர்களையும், கமல் ஹாசனையும் வைத்து தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள்'’ கதையை ஜெயபாரதி இயக்கத்தில் பட மாக தயாரிக்கலாம் எனத் திட்டமிட் டோம். அதே வேளை... இந்தச் சமயத்தில், "இப்படி ஒரு ரிஸ்க் தேவையா?' என்கிற கேள்வியும் எங்களுக்குள் இருந்தது.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எழுத்தாளர் சுஜாதாவை கமல் வீட்டில் சந்தித்துத்தான் அறிமுகமானேன். அப்போது 12 எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூலை சுஜாதா வெளியிட்டார். அந்த 12 கதைகளுக்கும் ஓவியக் கல்லூரி மாணவனாக இருந்த நான் தான் ஓவியம் வரைந்திருந்தேன். மவுண்ட் ரோடு லைப்ரரியில் நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் எல்லோரும் என்னைப் பாராட்டிப் பேசியது இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.
அந்த விழாவில் பாலசந்தரின் அஸோஸியேட் அனந்து சாரை அழைத்து கௌரவப்படுத்தினேன். அதனால் பாலசந்தர் சார், எனக்கு "அவர்கள்'’படத் தின் ஒரே ஒரு போஸ்டரையும், ஒரே ஒரு பத்திரிகை விளம் பரத்தையும் வரையும் பொறுப்பைத் தந்தார். பாலசந்தரின் ஆஸ்தான டிஸைனர் பரணி என்கிற போதும் எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தார் பாலசந்தர்.
"அவர்கள்'’படத்தில் இடம்பெற்ற பேசும் பொம்மையை வைத்து, "கே.பாலசந்தரின் அவர் கள்'’என கருப்பு நிறத்தில் நான் செய்திருந்த டிஸைனை ரொம்ப வும் பாராட்டினார் பாலசந்தர்.
எங்கு பார்த் தாலும் ‘மயிலு’.... பிரமிக்க வைத்த பாரதிராஜா...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்