(87) கேடிகள் விழுங்கிய கோடிகள்!
அந்த சமயம் வடிவேலு ரொம்ப பிஸியா நடிச்சிக்கிட்டிருந்தாப்ல. அருவி மாதிரி வடிவேலு வீட்ல பணம் கொட்டிக் கிட்டிருந்தது. எதுல எவ்வளவு முதலீடுன்னு நின்னு நிதானிச்சு கவனிக்கக்கூட வடிவேலுவுக்கு நேரமில்ல. எங்கங்க இடம் வாங்கிப் போடப் பட்டிருக்குன்னுகூட அப்பிராணி வடிவேலுவுக்கு தெரியல. வடிவேலு மேனேஜர் வேலுச்சாமி திடீர்னு தூக்கு மாட்டி செத்துப் போய்ட்டாரு.
என்ன பண்றதுன்னு தெரியாம வடிவேலு அழுது புலம்பினாப்ல.
அழுகாத வடிவேலு... மொதல்ல சொத்துப் பத்திரத்தையெல்லாம் எடுத்து செக் பண்ணுன்னு சொன்னேன்.
சொத்துப்பத்திரங்கள எடுத்துப் பார்த்தா, எல்லா பத்திரத்துலயுமே, "என் சார்பில யார் வேண்டுமானாலும் இந்த சொத்தை விற்கலாம்'னு என்.ஓ.சி. சர்டிபிகேட்டை வடிவேலுவை ஏமாத்தி வாங்கி வச்சிருக் காங்க'ன்னு வக்கீல் கண்டுபிடிச்சுச் சொன்னாரு.
இந்தச் சமயத்துலதான் வடிவேலுவுக்கு, அவரோட நண்பரும் நடிகருமான சிங்கமுத்து மேல சந்தேகம் வந்தது.
சிங்கமுத்து மேல பரபரப்பா வடிவேலு குத்தம் சொல்ல... பதிலுக்கு வடிவேலு மேல சிங்கமுத்து குறை சொல்ல... இப்படி அந்த நேரம் ரொம்பப் பரபரப்பா இருந்துச்சு.
வடிவேலு ரொம்ப மனசு ஒடிஞ்சிட் டாப்ல.
கொஞ்சநஞ்சமா? பதினாறு கோடி ரூபாய்க்கான சொத்து என்னாச்சுனு தெரியலேன்னா... எம்புட்டு வேதனை இருக்கும்.
ஊரையே சிரிக்க வைக்கிற அந்த கலைஞன்... மக்களோட மன உளைச்சலுக்கு மருந்தா இருக்கிற நகைச்சுவையைத் தர்ற அந்த நடிகனுக்குள்ள எம்புட்டு வலியை உண்டாக்கியிருப்பாங்க.
ஒரு கதைதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு அப்போ. வடிவேலு கூட இந்தக் கதையை அந்தச் சமயத்துல பேட்டியில சொன்னதா ஞாபகம்.
அந்தக் கதை என்னன்னா...
ஒருத்தன் மிகுந்த மன உளைச்சலோட இருக்கான். அந்த ஊர்லயே யாரு பெரிய டாக்டர்னு விசாரிச்சு அவர்கிட்ட வந்து பிரச்சினையைச் சொல்றான்...
மன உளைச்சல் யாருக்குத் தான் இல்ல? எல்லாருக்குமே மன உளைச்சல் இருக்கத் தான் செய்யுது. அதிலிருந்து மீளணும்னா மனசை சந்தோஷமா வச்சுக்கணும்”
மனசுல இம்புட்டு பிரச்சினை இருக்கும் போது எப்படி டாக்டர் சந்தோஷமா இருக்க முடியும்?”
ஏன் முடியாது? இந்த ஊர்ல புதுசா ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்து ஷோ நடத்துறாங்க. அதுல ஒரு பபூன் பண்ற சேஷ்டை ரொம்ப சிரிப்பா இருக்கும். அதைப் பார்த்து, மனம் விட்டு சிரிச்சு சிரிச்சு, என்னோட மன உளைச்சலே சரியாயிருச்சு. நீங்க இன்னிக்கே அந்த சர்க்கஸுக்கு போய், பபூன் சேஷ்டையை ரசிங்க.”
அந்த பபூனே நான்தான் டாக்டர்.”
அந்தச் சமயம் உதயநிதி ஸடாலின் தயாரிச்சிக்கிட்டிருந்த "ஆதவன்'’படப்பிடிப்பில் இருந்தோம்.
உதயநிதி கிட்ட நான் விஷயத்தைச் சொன்னேன்.
அப்போ மு.க.ஸ்டாலின் பி.ஏ.வா ராஜா இருந்தார்.
அவர்கிட்ட சொல்லச் சொன்னதால், நான்தான் ராஜாகிட்ட பேசினேன்.
"அண்ணே... உழைச்சு சம்பாதிச்ச பணம்ணே. பதினாறு கோடிக்கான சொத்துன்னா... வடிவேலு தாங்கமாட்டான். ஏதாவது கொஞ்சமாவது ரெகவரி ஆகிறதுக்கு வாய்ப்பிருக்கானு பாருங்கண்ணே''’என்றேன்.
"பத்திரப்பதிவுத் துறையிலயே விசாரிச் சிட்டு சொல்றேண்ணே. அந்த சர்வே நம்பர்லாம் கொடுங்க''’என்றார் ராஜா.
அவர் கேட்ட விபரம் கொடுக்கப்பட்டது.
அடுத்த கொஞ்ச நேரத்தில் ராஜா லைனுக்கு வந்தார்.
"அண்ணே... நீங்க சொன்ன இடமெல் லாம் வேற வேற ஆட்களுக்கு வித்துட்டாங்க. வாங்கினவங்க அங்க கட்டடமே கட்டிட்டாங்கண்ணே... இனிமே ஒண்ணும் பண்ண முடியாது''’என்றார்.
விஷயத்தைக் கேட்டதும் வடிவேலு இடிஞ்சு போய் உக்காந்துட்டாப்ல.
டே அண்ட் நைட் உழைச்சு சம்பாதிச்ச பணம். அதை யார், யாரோ ஆட்டயப் போட்டுட்டு போறதுன்னா எப்படி இருக்கும்.
எனக்கே மனசு கேட்கல. இருந்தலும் ஆறுதல் ஓரளவுக்கு தேறுதலா இருக்குமே.
"விட்றா... அதையே நினைச்சு ஃபீல் பண்ணாத. ஊர்லருந்து வரும்போது என்ன கொண்டு வந்தோம்? நல்ல வேளையா இருக்கிற வீடு, வாசல் பத்திரமாவது பத்திரமா இருக்கே. அதை நினைச்சு ஆறுதல் பட்டுக்கோ. ஆண்டவன் உனக்கு நிறைய கொடுத்தான்... அதை இப்போ திரும்ப வாங்கிக்கிட்டான்னு நினைச்சுக்கோ''’என்றேன்.
கைமீறிப் போன காரியங்களுக்கு ஆறுதலைத் தவிர வேறென்ன தீர்வு இருக்கு?
இந்த சம்பவத்துக்குப் பின்னால வடிவேலு சென்னையிலயோ, சென்னையைச் சுத்தியோ எந்தச் சொத்தும் வாங்கல. நம்பிக்கையே போச்சு. ‘சென்னைல சொத்து வாங்கினா அதை எவனோ தான் அனுபவிப்பான்’ என நினைச்சாப்ல. சொந்த ஊரான மதுரைப் பக்கம் தான் சொத்து வாங்கினாப்ல.
சென்னையைப் பொறுத்தவரைக்கும் ஒரு சொத்துக்கு எது தாய் பத்திரம்? எது உண்மையான பத்திரம்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமமாத்தான் இருக்கு. ஒரே பத்திரம் மாதிரி, பத்து பத்திரம் பத்துப் பேரு வச்சிருக்காங்க. இதுல எது அசல்னு கண்டுபிடிப்பீங்க? அதுதான் மெட்ராஸ்ல ரொம்ப மோசமான விஷயமா இருக்கு.
இதுல என்ன ஆச்சர்யம்னா?
கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, ஆசை ஆசையா வாங்கின சொத்துக்களையெல்லாம் ஏமாத்தி எவனெவனோ சொந்தமாக்கிக்கிட்டான். இப்படி இதனால வடிவேலுவுக்கு எம்புட்டு மன உளைச்சல். ஆனாலும் அதை கழட்டிப் போட்டுட்டு, "ஆதவன்'’படப்பிடிப்பில கேமரா முன்னாடி அப்படியே... கேரக்டரா மாறினாப்ல.
நகைச்சுவைக்கு நகைச்சுவை, டான்ஸுக்கு டான்ஸ்னு அசத்தினாப்ல. இப்பக்கூட ‘ஆதவன்’ படம் பாருங்க. அந்தக் காட்சியில நடிக்கும்போது வடிவேலு இம்புட்டு சோகத்துல இருந்தாப்லயா?னு ஆச்சர்யம் வரும்.
அதுதான் வடிவேலு.
அவர் ஒரு மண் சார்ந்த கலைஞன்.
(பறவை விரிக்கும் சிறகை)