(64) என்னை நீக்கியது எவரோ?
அதுக்குப் பேரு சந்தர்ப்பமோ... சூழ்நிலையோ... விதியோ... எதுவா வேணா இருக்கட்டும்.
ஆனா...
நஷ்டம் தந்த படத்தைக் கொடுத்ததால என்னை கஷ்டப்படுத்துச்சுன்னா... லாபமான படத்தைக் கொடுத்தப்பவும் லாடம் கட்டுதுன்னா... நான் என்னதான் பண்றது?!
"அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா மாதிரி ஒரு நல்ல மனுஷன பார்க்க முடியாது. நல்ல கதை ரசனை உள்ளவர். ஒரு நல்ல படம் பார்த்தாலோ, நல்ல கதை கேட்டாலோ என்னிடம் பகிர்ந்துக்குவார். நானும் அதுபோல அவரிடம் பகிர்ந்துக்குவேன்.
சிவாவோட சொந்த ஊர் கோபிச்செட்டி பாளையம். சிவாவோட அண்ணன் ஊர்ல ஸ்டில் போட்டோகிராபர். போட்டோ ஸ்டுடியோ வச்சிருந் தாங்க. சிவாவும் நல்ல ஸ்டில் போட்டோகிராபர் தான். சிவாவுக்கு சினிமாத்துறையில் ஈடுபட விருப்பம். கொஞ்சம் கொஞ்சமா சினிமாவைப் பத்தி தெரிஞ்சுக் கிட்டு வந்தார். விஜயகாந்த் ஆபீசில் வாய்ப்பு கிடைக் கவும், அதை ரொம்பக் கெட்டியா பிடிச்சுக்கிட்டார்.
ஒரு கட்டத்தில் சிவா இல்லாம இப்ராஹிம் ராவுத்தர் எதுவுமே பண்ணமாட்டார்ங்கிற அளவுக்கு சிவா அங்க செல்வாக்கானார். என்னோட நண்பன் சௌந்தரும் விஜயகாந்த் ஆபீஸ்ல தான் இருந்தான். இவங்க ரெண்டு பேரும்தான் விஜயகாந்த்துக்கும், ராவுத்தருக்கும் படம், கம்பெனி, பிசினஸ் பத்தி ஆலோசனை சொல்றதுங்கிற அளவுல இருந்தாங்க.
விஜயகாந்த்துக்கு இன்னிக்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்குதுன்னா... அதுக்கு முக்கிய காரணம் இப்ராஹிம் ராவுத்தர்தான். கொஞ்ச பணமா இருந்தாலும், அதை விஜயகாந்த் பேரில் சொத்தில் முதலீடு செய்வார் ராவுத்தர். நிலங்கள், பெட்ரோல் பங்குகள்னு வாங்கிப் போட்டு.... விஜயகாந்த்தை பெரிய பணக்காரரா ஆக்குவதையே லட்சியமா வச்சிருந்தார் ராவுத்தர். ஆனா தனக்காக எதையும் செஞ்சுக்கமாட்டார். அவருக்கு விஜயகாந்த்தான் முக்கியம். சினிமாவில் விஜயகாந்த் என்னைக்கும் நீடிச்சு இருக்கணும்னு உழைச்சார் ராவுத்தர். ராவுத்த ரோட மிகப்பெரிய மைனஸ் என்னன்னா... ஜோஸியம். அதிலயும் நியுமராலஜியில அதீத நம்பிக்கை. கூட்டுத்தொகை இந்த நம்பர்ல வரணும்... குறிப்பா கூட்டுத்தொகை ஐந்தாம் நம்பரா இருந்தாத்தான் படம் ஓடும் என்றெல்லாம் தீவிரமா நம்பினார். படம் பண்ண வாய்ப்புக் கேட்டு வர்ற டைரக்டர்களோட ஜாதகத்தை ஜோஸியர் கிட்ட குடுத்து, ஜோஸியர் கருத்தைக் கேட்டுத்தான் வாய்ப்பு தர்றதும், தராததும்.
இப்படியெல்லாம் பார்த்து எடுத்தாலும் சில படங்கள் ஓடலை. ஆக கதை நல்லா இருந்தாத்தானே படம் ஓடும்.
நான் எட்டாம் நம்பர் ராசிக்காரன். ஆனால் இது ராவுத்தருக்கு தெரியாது. எஸ்டாபிளிஷ்டு டைரக்டர் என்பதால் தங்களோட சொந்தப் படமான ‘"மூன்றெ ழுத்தில் என் மூச்சிருக்கும்'’ படத்தை இயக்கும் பொறுப் பைத் தந்தார் ராவுத்தர். இந்தப் படம் ஒரு ரூபாய்க்கு மூன்று ரூபாய் வசூலித்துக் கொடுத்தும்கூட... லாபமான படத்தை நான் தந்தும்கூட போராட்டமே வாழ்க்கை என்கிற என் விதி மாறவில்லை.
சிவாவுக்கு, பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி.யுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் ஒரு நல்ல வாய்ப்பு அமைந் தது. அதை வைத்து ராவுத்தருடன் இணைந்தே இரண்டு படங்களைத் தயாரித்தார்.
பிறகு "அம்மா கிரியேஷன்ஸ்'’என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, கார்த்திக்-ரேவதி நடிப்பில் இளையராஜா இசையில் பெரிய அளவில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார்.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'’பட வேலைகளை நான் முடிக்கப் போகிற சமயத்தில் தான் கார்த்தி-ரேவதி படத்தை சிவா தயாரிக்கும் வேலைகள் தொடங்கியது. என் நண்பனும், ரூம் மேட்டுமான எம்.எஸ்.மதுதான் கதை.
ராவுத்தர் ஆபீஸில் நானும் சிவாவும், ராவுத்தருடன் படம் பற்றி பேசிக்கொண்டி ருந்தோம்.
"டைரக்டர் வெளிய நிக்கிறாரு கூப்பிடு'’என ராவுத்தர் சொல்ல... ‘"நாமதான டைரக்டர். பின்ன யாரைக் கூப்பிடச் சொல்றார்? ஒரு வேளை... ஒரே நேரத்துல இன்னொரு படமும் தொடங்குறாங்களா?'’ என நான் குழப்பமாகப் பார்க்க.... கதாசிரியர் எம்.எஸ்.மது உள்ளே வந்தார்.
கார்த்திக்-ரேவதி நடிக்கும் "தெய்வ வாக்கு'’ படத்தை அதன் கதாசிரியர் எம்.எஸ்.மதுவே திரைக்கதை-வசனம் எழுதி, இயக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
விஷயத்தை அறிந்தபின் நான் அங்கே இருப்பது மரியாதை இல்லையே. நடையைக் கட்டினேன் கதாசிரியர் கலைமணி ஆபீஸுக்கு.
"சிவா நல்ல நண்பராச்சே... சிவாவோட விருப்பத்தின் பேர்லதான் எம்.எஸ்.மது டைரக்டர் ஆனாரா? இல்ல... ராவுத்தர் சொன்னாரா? எம்.எஸ்.மதுவும், நடிகர் கார்த்திக்கும் ரொம்ப நெருக்கமான நண்பர்கள். அதனால் கார்த்திக் சொன்னதுனால மதுவை டைரக்ட ராக்கினாங்களா? ரேவதிக்கும் மது நல்ல பழக்கம். அதனால் ரேவதி சொன்னதால் மதுவை டைரக்டர் ஆக்கினாங்களா?'’இப்படி என்னை கேள்விகள் குடைந்தாலும் கூட, "நம்ம நண்பன் மது டைரக்டர் ஆகிறானே'’என மனதார மகிழ்ந்தேன்.
(சிவா எனக்கு இந்த நிமிஷம்வரை நண்பனாகத்தான் இருக்கிறார். ஆனால் ஒரு போதும் அவரிடம், "ஏன் என்னை விட்டுட்டு, மதுவை டைரக்டர் ஆக்கினீங்க? காரணம் மட்டும் தெரிஞ்சுக்கிறலாமா?'’என நான் கேட்டதே இல்லை... இனியும் கேட்க மாட்டேன். ஆனால் நாங்கள் என்றும் நல்ல நண்பர்களாகவே இருப்போம்.)
"தெய்வ வாக்கு'’படத்தில் எம்.எஸ்.மதுவை டைரக்ட ராக்கியது தவறில்லை. ஆனால் அதற்கு முன் சில விஷயங்களை சிவா கவனித்திருக்க வேண்டும். அதை கவனிக்காதது சிவாவின் தவறு. அப்போது மதுவுக்கு மதுப்பழக்கம் அதிகமாக இருந்தது. பகல்லயும் மது அருந்துவார், இரவிலும் அருந்துவார். இறந்துபோனவங்களைப் பத்தி குறை சொல்லி பேசக்கூடாது என்பது மரபு. இருந்தாலும் சில உண்மை நிலவரங்களைச் சொல்லணும்கிறதுக்காகச் சொல்றேன்...
நல்லா கதை எழுதுறதோ... நல்லா திறமையோட இருக் கிறதோ முக்கியமில்லை. நம்மளோட நல்ல பிஹேவியர்தான் இண்டஸ்ட்ரியில நம்மளை லாங் ஸ்டாண்டிங்கா இருக்க வைக்கும். மதுவால் வேகமாக படத்தை முடிக்க முடியாம, கேப் விட்டு, கேப் விட்டு ஷூட்டிங் பண்ணி லேட்டாதான் "தெய்வ வாக்கு'’படம் வெளியாச்சு. டைரக்டர் ஒரு புறம், ஹீரோ ஒரு புறம்னு மாத்தி மாத்தி தாமதப்படுத்துனதால... முதன்முதலா முழுக்க சொந்தமா தயாரிச்ச இந்தப் படம் மூலம் ரொம்ப பதமான ஆளா ஆகிட்டார் சிவா.
சிவா, சிவாவோட அம்மா, அண்ணன், அவங்களோட கோபிச்செட்டிப்பாளையம் வீடு... இதெல்லாம் சினிமா பிரபலங்களுக்கு, குறிப்பா விஜயகாந்த் சர்க்கிள்ல சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இன்னொரு தாய்வீடு மாதிரிதான்.
சிவாவோட திருமணத்துக்கு விஜயகாந்த், இளையராஜா உட்பட இண்டஸ்ட்ரியே திரண்டு போனது கோபிக்கு.
சிவாவோட குட் அப்ரோச்தான் அவரை பெரிய தயாரிப்பாளராக்கியது. கிட்டத்தட்ட ஐம்பது படங்கள்கிட்ட அவரோட "அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிச்சிருக்கு.
ராவுத்தர் ஆபீஸிலிருந்து மனக்கஷ்டத்துடன் கிளம்பி னாலும், ராவுத்தர் மூலம் எனக்கு கிடைத்த ஒரு நல்ல நண்பன் லியாகத் அலிகான். வசனம் எப்படி எழுதுறது என்பதை கலைமணி சார்கிட்ட கத்துக்கிட்டேன். வசனத்தாலேயே ஒரு படத்தை எப்படி தூக்கி நிறுத்துறதுங்கிறது என்பதை லியாகத் அலிகான் கிட்ட தெரிஞ்சுக்கிட்டேன்.
விஜயகாந்த்தோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சு, அதுக்கு தகுந்த மாதிரி வசனம் எழுதுவார்.
உதாரணத்துக்குச் சொல்லணும்னா... "கேப்டன் பிரபா கரன்'’படம் க்ளைமாக்ஸ் முடிஞ்ச பின்னாடியும், சுமார் 800 அடிக்கு விஜயகாந்த் பேசுற வசனம் பிரமாதமா இருக்கும். லியாகத் அலிகானோட பேனாவுக்கு இருக்க காரம், மணம் வேற யார்கிட்டவும் கிடையாது. இதை மறைக்காம சொல்லியே ஆகணும்.
-இப்படி பலவித நினைவுகளோட கலைமணி சார் ஆபீஸுக்குப் போனேன்.
மாறினேன்... மாற்றப்பட்டேன்....
(பறவை விரிக்கும் சிறகை)