(47) அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... மனைவிக்கு மயக்கம்!
நானும், என் சினிமா நண்பர்கள் சிலரும் என் திருமணத்திற்காக அந்த டூரிஸ்ட் பஸ்ஸிலேயே மதுரை போய்ச் சேர்ந்தோம். நானும், என் உடன் வந்தவர்களும் தமிழ்நாடு கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்.
மதுரை ஏரியா சினிமா விநியோகஸ்தரான பாண்டியன் வந்தார். பெண்ணின் கழுத்தில் நான் கட்டப் போகும் தங்கத் தாலியை ஹோட்டல் அறையில் வைக்க எனக்கு பயமாக இருந்தது. காரணம்... ஏற்கனவே நடந்த பல தடங்கல்கள்தான். அதனால் தாலியை பாண்டியனிடம் கொடுத்து, "இதை நீங்களே பத்திரமா எடுத்திட்டுப்போய் காலைல ஒரு மாலையும் வாங்கிக்கிட்டு, பத்திரமா கொண்டு வந்துடுங்க. முகூர்த்த நேரத்துக்கு கரெக்ட்டா வராம... முன்னாடியே வாங்க. அப்பத்தான் தாலியை கயித்துல கோர்த்து, அய்யர் ரெடி பண்ண முடியும்''’என்றேன்.
"அதுக்கென்ன டைரக்டரே, சீக்கிரமே கொண்டு வந்துடுறேன்'' எனச் சொல்லி, தாலி இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டு கிளம்பினார்.
கவுண்டமணி வந்துட்டார், செந்தில் வந்துட்டார், சாருஹாசன் வந்துட்டார். தொடர்ச்சியா சினிமாக்காரர் கள் வந்துட்டாங்க. அவங்களுக்கெல்லாம் ரூம் ஏற்பாடு செய்து கொடுத்திட்டேன்.
"பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்களா இல்லையா?'னு எனக்கு உறுதியா தெரியல.
பத்திரிகை காரங்கள்லாம் வந்துட்டாங்க.
"சார் பொண்ணு- மாப்பிள்ளையை சேர்த்து வச்சு ஒரு போட்டோ எடுத்திடுறோம்'' என்றார்கள்.
"பொண்ணு வீட்டுக்காரங்க... வந்துக் கிட்டிருக்காங்க. அதனால் இப்ப சேர்த்து போட்டோ எடுக்க வாய்ப்பில்லை. நாளைக்கி கல்யாண போட்டோவையே போட்டுக்கங்க'' எனச் சொல்லி அனுப்பினேன்.
நான் பதட்டமாக சிகரெட் ஊதித் தள்ளிக்கொண்டிருக்க, கவுண்டமணி என்னிடம்...
"ஏப்பா புதுமாப்ள... ஏன் டென்ஷன்? பொண்ணு வீட்டுக் காரங்க வந்துட்டாங்களா? இல்லையா?னு தெரியணும். அம்புட்டுதானே. இதுக்கு ஏம்ப்பா டென்ஷன். பொண்ணு வீட்டுக்காரங்க தங்குறதுக்கு எங்கயோ தனி வீடு ஏற்பாடு செஞ்சிருக்கிறதா சொன்னியே, அங்க போய் பார்த்திட்டு வந்துடலாமே''’என்றார்.
"அவங்க மதுரைக்கி வந்துட்டாங்கன்னா என்னை வந்து இந்நேரம் பார்த்திருப்பாங்களே!''
"அய்யோடா... மாப்பிள்ள பிகு பண்றார்டா. வந்த அசதியில கூட இருக்கலாம்... அது அவங்களுக்கு மதுரை புதுசா இருக்கலாம்... போய்ய்யாங்கிறேன்''”
கவுண்டரின் பேச்சைத் தட்ட முடியாமல் பெண் வீட்டார் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்குப் போனேன்.
எங்க வீட்டாரும், பெண் வீட்டாரும் தங்குவதற்கு மதுரை ஆரிய பவன் ஹோட்டல் முதலாளி ஏற்பாடு செய்திருந்த வீடுகளில் இரு வீட்டாருமே ஆரிய பவன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும், தூக்கத்திலிருந்து விழித்த பெண் வீட்டார் ஓரிருவர், “"பொண்ணோட அப்பா-அம்மாவை எழுப்பவா? பொண்ண வரச் சொல்லவா?''’எனக் கேட்டார்கள்.
அவர்களின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்பதால், "பரவால்ல தூங்கட்டும்... மதுரைக்கு வந்தாச்சான்னு தெரிஞ்சுக்கத்தான் பார்க்க வந்தேன்''’எனச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
இப்போதும் நான் பெண்ணை பார்க்க வில்லை. பேசவில்லை.
காலையில் வரும் சினிமாக்காரர்களை வரவேற்பதற்கும், அவர்களின் மதிய உணவிற்கும் ஏற்பாடுகளைச் சொல்லிவிட்டு, மாப்பிள்ளைக் கோலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேன்.
என்னுடைய அஸிஸ்டெண்ட்டு களெல்லாம் நின்று கொண்டிருந்தார் கள். முகூர்த்த நேரம் தொடங்கிவிட்டது.
ஆனால்... தாலியையும், மாலையையும் கொண்டு வர வேண்டிய விநியோகஸ்தர் பாண்டியன் இன்னும் வரவில்லை. எனக்குன்னா திக்குனு ஆயிடுச்சு.
ஆனாலும் "ஷூட்டிங் ஸ்பாட்டில் சினிமாக்காரர்கள் சமாளிக்கும் உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்' என எண்ணிப் பொறுத்திருந்தேன்.
"இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்காம்... தாலி கட்ட உங்களைக் கூப்பிடுறாங்க'’என எங்கள் உறவினர் வந்து சொல்லிவிட்டுப் போக... என் உதவியாளரை அழைத்து, "நீ போய் எதிர்க்கடைல ஒரு தாலிக் கயிறு வாங்கிக்கிட்டு வா... முதல்ல இதைக் கட்டிடுறேன். அப்புறமா... பாண்டியன் அந்த தாலிய கொண்டாந்ததும், ஏதாவது ஒரு கோயில்ல வச்சு கட்டுறேன்''’என்றேன்.
என் உதவியாளர் ரோட்டைத் தாண்டி தாலி வாங்க ஓடினார்.
ஒரு ஆட்டோவில் பாண்டியன் வந்து இறங்கினார்.
"என்ன பாண்டியன்... இப்படி லேட் பண்ணீட்டீங்க?''”
"ஸாரி டைரக்டரே... வயித்து வலி பிரச்சினை.... ராத்திரி முழுக்க தூங்கல...''”
"ஒங்களுக்கு வயித்துப் பிரச்சினை. ஆனா எனக்கு வாழ்க்கைப் பிரச்சினையாச்சே''’என தாலியையும், மாலையையும் அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு உள்ளே ஓடினேன்.
அந்த ஓட்டத்திலேயே பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அம்மனை நோக்கி ஓடினேன். அம்மனின் பாதத்தில் வைத்து பூஜித்து தந்தார்கள்.
நம்பினால் நம்புங்கள்... மூன்றே நிமிஷத்தில் இந்த வேலை முடிந்து தாலியும் கட்டிவிட்டேன்.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத் திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதை எல்லா மக்களும் பயபக்தியோடு கண்டுகளித்தார்கள்.
திருமணம் முடிந்ததும் ஆரிய பவன் முதலாளி ஏற்பாடு செய்து தந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆரியபவனிலிருந்து கல்யாண விருந்துச் சாப்பாட்டை எல்லாருக்கும் நிறைவாக அனுப்பியிருந்தார் ஹோட்டல் முதலாளி. இதற்காக நான் விஜயகாந்த்திற்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும்தான் நன்றி சொல்லணும். அவர்கள்தான் ஆரிய பவன் முதலாளியிடம் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்துதரச் சொல்லியிருந்தார்கள்.
எல்லோரும் மனநிறைவோடு சாப்பிட உட்கார்ந்தபோது... தடார்... என ஒரு சத்தம்.
"என்னாச்சு?''”
"உங்க அப்பா மயக்கம் போட்டு கீழே விழுந்திட் டார்''’என்றார்கள்.
ஓடிவந்து, அப்பா முகத்தில் தண்ணீரும், சோடாவும் தெளித்தும், விழிப்பு இல்லை. பக்கத்தில் ஒரு டாக்டர் இருந்தார். அவரை அழைத்து வந்து காட்டினோம்.
"மைல்ட் அட்டாக் வந்துருக்கு. உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிப் போங்க''” என்றார்.
டாக்ஸி பிடித்து வந்து அப்பாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வதற்குள்...
எங்க தரப்பு பெருசுகளெல்லாம்... "ம்ஹூம்... மாட்டுப் பொண்ணு வந்து காலை வச்சா... மாமனாரை சாய்ச்சிட்டா'” எனச் சொல்ல... அந்தப் பக்கம் "டம்'னு ஒரு சத்தம்.
"என்னாச்சு?''”
"உன் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்திட்டாப்பா...''
இன்னொரு டாக்ஸி பிடித்து அவளையும் ஹாஸ் பிடலுக்கு அனுப்பிச்சிட்டு, அப்பாவைப் பார்த்தேன்.
சீக்கிரமே அழைச்சிட்டு வந்ததால் காப்பாத்த முடிஞ்சதாக’ மருத்துவமனையில் தெரிவித்தார்கள்.
மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து உட்கார்ந்திருந்தாள் என் மனைவி.
இப்போதும் நான் அவளிடம் எதுவும் பேசவில்லை.
ஒரு வேன் பிடித்து, சின்ன அக்காவுடன் அப்பாவை அனுப்பிவிட்டு "நானும், அவளும் நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போய்ட்டு, என் மாமனார் வீட்டு சார்பில் ராஜமன்னார்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க ரிஷப்சனை முடிச்சிட்டு ஊருக்கு வந்திடுறேன்''’என்றேன்.
"சீக்கிரம் வந்துரு. நம்ம ஊர்லயும் சொந்தக்காரங்கள்லாம் வரவேற்க தயாரா இருக்காங்க''” எனச் சொன்னார் சின்ன அக்கா.
அவர்களை அனுப்பி வைத்தேன்.
ஒரு காரில் நானும், என் மனைவியும் கிளம்பத் தயாரானோம். அவளிடம் இப்போதாவது பேசிவிட வேண்டும்.... என எண்ணிக் கொண்டிருக்கையில் எங்கள் இருவருக்கும் நடுவில் எனது பெரிய அக்கா வந்து உட்கார்ந்துகொண்டு, "காரை எடுங்க... நல்ல நேரத்துல கிளம்பணும்ல''” என்றார்.
என் மனைவியுடன் ஒவ்வொரு முறையும் பேச முடியவில்லை.
பேச வாய்ப்பு கிடைத்தபோது...
(பறவை விரிக்கும் சிறகை)