"ஹலோ தலைவரே... புயல், மழை, வெள்ளமென தொடர்ச்சியாய் படை யெடுத்த பேரிடர்கள் ஓய்ந்திருக்கும் நேரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது.''”
"ஆமாம்பா, அதுவும் ரெண்டே ரெண்டுநாள் மட்டும்தான் கூடுதாம்.''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாடு சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மட்டும் 2 நாள் கூட்ட மாக நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசிக்க, அலுவல் ஆய்வுக்குழு கூடியபோது, அதில் கலந்துகொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வி. உதயகுமார், சட்டமன்றக் கூட்டத்தை 10 நாளாவது நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இதனை ஏற்காத சபாநாயகர் அப்பாவு, 2 நாள் மட்டும்தான் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்துவிட்டார். இதில் எரிச்சலான எதிர்க்கட்சிகள், மழை வெள்ளம் உட்பட இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்க நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, வெறும் ரெண்டேநாளில் கூட்டத்தை முடிப் போம் என்பது ஜனநாயகத்திற்கான அடையாளம் இல்லை என குற்றம்சாட்டு கின்றன. இந்தக் கூட்டத்தில் அரசு சார்பில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட விருக்கின்றன.''”
"அது சரிப்பா, தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பாக ஆலோசனை நடத்தி யிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்தின் உறுப்பினர்களை கடந்த 4 ஆம் தேதி ராஜ்பவனுக்கு அழைத்திருந்தார் கவர்னர். இந்தக் கூட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அப்போது, தேசிய பாதுகாப்பு பற்றியே அவர்கள் விவாதித்தார்களாம். மேலும் தமிழகத்தில் அண்மைக் காலங்களில் நடந்த சட்டம் ஒழுங்கு தொடர்பான சம்பவங்கள் பற்றியும் டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார்கள். அப்போது, தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியிருந்த பல ரகசியத் தகவல்கள் குறித்தும் அவர்களுடன் கவர்னர் தீவிரமாக ஆலோசித்தார் என்று ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து திரும்பியிருக்கும் அந்த பா.ஜ.க. நிர்வாகி, ஒரு சீக்ரெட் ரிப்போர்ட்டோடு 3ஆம் தேதி இரவு டெல்லி சென்றார். மறுநாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அந்த ரிப்போர்ட்டை அவர் கொடுத்திருக்கிறார்.''”
"மாஜி அ.தி.மு.க. மந்திரி விஜயபாஸ்கரும் எடப்பாடிக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார் என்கிறார்களே?''”
"அ.தி.மு.க. கூட்டங்களில் கலவரம், கோஷ்டி மோதல் என வெடித்துவரும் நிலையில், அ.தி.மு.க. மாஜி மந்திரியான விஜய பாஸ்கர், அண்மையில் தனது புதுக்கோட்டை மாவட்டத்தில், எடப்பாடியை எதிர்க்கும் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக முன்னிறுத்தி, தனக்கு வேண்டிய கட்சியினரை மட்டும் அழைத்து, ஒரு கூட்டத்தை சைலண்டாக நடத்தியிருக்கிறார். இதன்மூலம், எடப்பாடியை விடவும் தனது மாவட்டத்தில் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர் காட்டிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். விஜயபாஸ்கரின் இந்த தனி ஆவர்த்தனம், எடப்பாடியை திகைக்க வைத்திருக்கிறதாம்.''”
"விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளரான அர்ஜுன் ரெட்டி பற்றி அதிரடித் தகவல்கள் பரவுகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தான் தொகுத்த அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவிற்கு த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்யை அழைத்த அர்ஜுன் ரெட்டி, அதற்கான அழைப்பித ழில், தனது சிறுத்தைகள் கட்சி தொடர்பான பதவியைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எரிச்சல் உண்டாக்கும் விதமாக, அவரைத் தவிர்த்துவிட்டு, 97-ல் நடந்த மேலவளவு கலவரத்தில் பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினரை அழைத்து வந்து, அவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக சுயமாய் அறிவித்ததோடு, அவர்களை நடிகர் விஜய்யிடம் மட்டும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதையறிந்து அவருக்கு திருமா டோஸ் விட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.யான ரவிக்குமாரின் விழுப்புரம் தொகுதியில், சிறுத்தைகள் கொடியுடன் போராட்டம் நடந்ததை ஆதரிக்கும்விதமாக அர்ஜுன் ரெட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில், ’தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத் தினை அழித்திடுவோம்’ என்று பதிவிட்டதும், அவ ரது உட்கட்சிக் கலகமாகப் பார்க்கப்படுகிறது. சிறுத்தை கள் கட்சியினரே, அர்ஜுன் ரெட்டி தற்போது விஜய் கட்சியை நோக்கிய தன் நகர்வை ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"தமிழக அதிகாரிகள் கொடுத்த பரிசைப் பார்த்த டெல்லி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கோபமாகி யிருக்கிறாரே?''’
"தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அண்மையில் டெல்லிக்கு சென்றார். அவரோடு, சுற்றுலாத்துறை யின் செயலாளர் சந்திரமோகன், நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சென்றிருந்தனர். அங்கு ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந் திரசிங் செகாவத்தை சந்தித்து தமிழக சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கான நிதிக் கோரிக் கைகளை இவர்கள் முன்வைத்தனர். செகாவத்தோ 16 ஆவது நிதிக்குழு வின் கவனத்துக்கு இதைக்கொண்டு சென்று, நிதி ஒதுக்கீடு செய்ய ஆவன செய்யப்படும் என்று உறுதி தந்திருக்கிறார். அதேபோல், மத்திய சுற்றுலாத்துறைச் செயலாளர் வித்யாவதியை தமிழக அதிகாரிகளான சந்திரமோகனும் ஷில்பாவும் சந்தித் துள்ளனர். அப்போது வித்யாவதிக்கு காஸ்ட்லியான ஒரு பட்டுப் புடவையை ஷில்பாவும் சந்திரமோகனும் பரிசளித்தனர். ஆனால் வித்யாவதியோ, "இந்த கிஃப்ட் தருகிற பழக்கத்தை எல்லாம் தமிழ்நாட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்'’என்று கோபமாகச் சொல்லி, அதை வாங்க மறுத்துவிட்டாராம். கர்நாடக கேடர் அதிகாரியான அந்த வித்யாவதி, தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது உபரித் தகவல்.''”
"வடமாவட்டங்களில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு நீர்வளத் துறையின் மெத்தனம்தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, சாத்தனூர் டேமிலிருந்து பெருமளவு தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திடீரென்று திறக்கப்பட்டதால்தான் திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தன என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இந்த சாத்தனூர் டேம் தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்த நிலையில், அது அணையின் கொள்ளளவான 119 அடியை எட்டும் வரையில் துறை அமைச்சரான துரைமுருகன், அது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பா.ம.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டு கின்றன. கடைசியில் அதிகாரிகளே முடிவெடுத்து, திடீரென நள்ளிரவு நேரத்தில் அணையைத் திறந்துவிட்டதால்தான், இவ்வளவு மோசமான பாதிப்பை அது ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் விசாரித்த போது, அவர்களில் சிலரும் இதையே வழிமொழிய, அமைச்சர் துரைமுருகனோ, இது பொய்யான குற்றச்சாட்டு. முன்கூட்டியே கணித்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு 5 முறை எச்சரிக்கை விடப்பட்டது என்று அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.''
"நக்கீரனுக்கு ஏன் பேட்டி கொடுக்க றீங்கன்னு மதுரை ஆதீனத்தை, இந்து மக்கள் கட்சி மிரட்டியதா தகவல் வருதே?''”
"ஈஷாவின் தியான லிங்கம் குறித்தும், தகன மேடை குறித்தும் ஆன்மிகப் பெரியவர்கள், ஆதீனங்கள் என பலரிடமும் கருத்துக் கேட்டு நக்கீரனில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருந்தோம். இதில் மதுரை ஆதீனமும் ஈஷாவின் தியான லிங்கம், சிவராத்திரி நள்ளிரவு நடனம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். அதோடு அதன் பின்னிருப்பது வியாபார நோக்கம் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து மதுரை ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்தே போன்செய்து "அவங் களுக்கெல்லாம் ஏன் நீங்க பேட்டி கொடுக் கறீங்க?' என மிரட்ட லாகக் கேட்டிருக்கிறா ராம். தவிரவும், பா.ஜ.க. தரப்பிலிருந்து நக்கீரனுக்கெல்லாம் பேட்டியைத் தவிர்க்கும்படி ஜென்டிலாக அட்வைஸ் தரப்பட்டிருக்கிறதாம்.''
"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வட தமிழகத்தில் பெரும் மின்தடை ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் மின் இணைப்புகளுக்கான மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனையறிந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 900 களப்பணியாளர்களை நேரில் சென்று முடுக்கிவிட்டதில் 24 மணி நேரத்தில் அனைத்து இணைப்புகளும் சரி செய்யப்பட்டு மின்சாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மின்சாரம் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களிலும் அமைச்சரின் அதிரடியால் நிலைமை விரைந்து சரிசெய்யப்பட்டு இருக்கிறது. அமைச்சரின் இந்த அதிரடிவேகத்தை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரைப் பாராட்டி இருக்கிறார்.''’