ஒரு காவல் நிலையத்திலுள்ள ஏட்டு, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் முதல், மாவட்ட எஸ்.பி.க்கு ஒற்றறிந்து தகவல் சொல்லும் தனிப்பிரிவுக் காவலர்கள் வரை யார் யார், எந்தெந்த பணிக்கு, யார் யாரிடம் எவ்வளவு கையூட்டு வசூலிக் கின்றனர் என்பதைப் பட்டவர்த் தனமாகப் பட்டியல் போட்டு விளாசித் தள்ளியிருக்கிறார் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ். தமிழகக் காவல்துறையில் இப்போது அவர்தான் 'ஹாட் டாபிக்'!
2014-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ச் அதிகாரியான ஸ்ரீஅபிநவ், கடந்த ஜூன் 7-ம் தேதி, சேலத்தில் எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற காலத்தில், கொரோனா ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்தது. அப்போது, மாவட்டத்தில் பரவலாக கள்ளச் சாராயம் காய்ச்சுவது, பாக்கெட் சாராயம் விற்பது உள்ளிட்ட குற்றங்கள் கணிசமாக இருந்ததையடுத்து, அக்குற்றங்களை ஒடுக்குவதில் தீவிர கவனம் செலுத்தினார்.
இது ஒரு புறம் இருக்க, நீண்ட கால மாக ஒரே காவல் நிலை யத்தில் பணி யாற்றி வந்த எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்வதிலும் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குள்ளும் என்னென்ன நடக்கிறது என்பதை உளவுபார்த்துச் சொல்வதற்காக, எஸ்.பியின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிவரும் தனிப்பிரிவுக் காவலர் களையும்கூட அவர் கூண்டோடு இடமாற்றம் செய்தார். வெளிப்படை யான மற்றும் சார்பற்ற செயல்பாடு களுக்கு இந்த இடமாற்றம் அவசியமென்று அவர் கருதியதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு எஸ்.பி.யிடமிருந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவசர அவசரமாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், "கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வோர், கள்ளச்சாராயக் கும்பல், மணல் கொள்ளையர்கள், சூதாட்ட விடுதி நடத்துவோர், மசாஜ் பார்லர் என்ற பெயரில் பலான தொழிலில் ஈடுபடுவோர் போன்ற சமூக விரோதக் கும்பலிடமிருந்து மாதந்தோறும் கையூட்டு வசூலித்து வருகிறீர்கள். பொதுமக்கள் கொண்டுவரும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தக்கூட பணம் வசூ லிக்கிறீர்கள். கையூட்டு வசூலிப்பதால் சமூக விரோதச் செயல்களுக்குத் துணை போவதோடு, குற்றங் களைத் தடுப்பதிலும் விலகி விடுகிறீர்கள். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் காவல்துறை யினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்'' எனப் பகிரங்கமாக எச்சரித்திருந்தார் எஸ்.பி. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவரும் எவ்வளவு லஞ்சம் வசூலிக்கிறார் கள் என்ற பட்டியலையும் கூடுதல் இணைப்பாக அவர் வெளி யிட்டிருந்தார்.
அதன்படி, காவல்நிலையங் களில் பணியாற்றி வரும் ரைட்டர்கள், ஓட்டுநர் உரிமம் பேட்ஜ், பாஸ்போர்ட் ஆகிய வற்றுக்கு என்ஓசி சான்றிதழ் வழங்க 500 முதல் 1000 ரூபாய், நிலத்தகராறு, பணம் கொடுக்கல் -வாங்கல் பிரச்னைகளை விசாரிக்க 1000 ரூபாய், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையைக் கண்டு கொள்ளாமல் இருக்க 1000 ரூபாய், சூதாட்டத்தில் ஈடுபடுவோரிடம் தலா 1,000 ரூபாய், கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரிடம், சமூக விரோதிகளைப் பிணையில் விடுவதற்கு தலா 200 ரூபாய், எப்.ஐ.ஆர். நகல் வழங்க 100 ரூபாயும் வசூலிக்கின்றனர்.
ரைட்டர்களைக் காட்டிலும் எஸ்.ஐ.க்கள் சற்று அதிகமாக மாமூல் வசூலிக்கின்றனர். அவர்கள், சொத்துத் தகராறு வழக்கு களை விசாரிக்க 5,000 முதல் 20,000 ரூபாய், கள்ள லாட்டரி விற்பவரிடம் 3,000 முதல் 5,000 ரூபாய், சூதாட்ட கிளப் நடத்துவோரிடம் 1,000 முதல் 5,000 ரூபாய், மணல் கொள்ளையர்களிடம் 5,000 முதல் 30,000 ரூபாய், விபத்து வழக்குகளில் குற்றவாளி களைப் பிணையில் விடுவிக்க 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய், பறிமுதல் வாகனங்களை விடுவிக்க 500 முதல் 1,500 ரூபாய், குட்கா விற்பனை செய்வோரிடம் 2,000 ரூபாய், அனுமதியின்றி மதுபான பார் நடத்த 2,000 ரூபாய், தெருச்சண்டைகளை விசாரிக்க 2,000 ரூபாய், சட்டவிரோத டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்வோரிடம் 2,000 ரூபாய், மணல், கிராவல் மண் கொண்டு செல்லும் வாகனங்களை விடுவிக்க 20,000 ரூபாய், தணிக்கை செய்த வாகனங்களை விடுவிக்க 2,000 ரூபாய், சட்ட விரோதச் செங்கல் சூளை அதிபர்களிடம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை மாமூல் வசூலிக்கின்றனர்.
ரைட்டர், எஸ்.ஐ.க்களின் மாமூல் நிலவரம் இப்படியென்றால், இன்ஸ்பெக் டர்கள் காட்டில் பண மழைதான். சிவில் வழக்குகளை விசாரிக்க 10 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டுகின்றனர். வெடிமருந்துக் கிடங்கு உரிமையாளர்களிடம் 50,000 முதல் 1 லட்சம் ரூபாய், தனியார் தங்கும் விடுதிகளிடம் 2,000 ரூபாய், மசாஜ் சென்டர்கள் பெயரில் பாலியல் தொழில் நடத்துவோரிடம் 5,000 ரூபாய், தாபா உரிமை யாளர்களிடம் 3,000 முதல் 7,000 வரை, கிரானைட் குவாரி உரிமையாளர்களிடம் 10,000 ரூபாய், மணல் கடத்தல்காரர்களிடம் 20,000 ரூபாய், சட்டவிரோத மதுபானக் கூடம் நடத்துவோரிடம் 2,000 ரூபாய், சந்துக்கடைகளில் மது பானங்கள் விற்பனை செய்வோரிடம் 10,000 முதல் 60,000 ரூபாய் வரை, கள்ள லாட்டரி விற்போரிடம் 1 லட்சம் ரூபாய், காணாமல் போன ஆவணங்களுக்கு என்.டி.சி. சான்றிதழ் தர 25,000 ரூபாய், விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்க 7,000 முதல் 10,000 ரூபாய் வரை, எப்.ஐ.ஆர். பதிவிலிருந்து குற்றவாளியின் பெயரை நீக்க 2,000 ரூபாய், கஞ்சா கும்பலிடம் 5,000 ரூபாய், செங்கல் சூளை அதிபர்களிடம் 10,000 ரூபாயும் வசூலிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி, எஸ்.பி.யிடம் விசுவாசமாக இருக்க வேண்டிய உளவாளிகளான தனிப்பிரிவுக் காவலர்களும், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் அனைவரிடமும் மாமூல் வசூலிப்பதாகச் சொல்லியிருக்கிறார் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ். ரோந்து வாகனங்களில் செல்லும் போலீசாரும் கணிசமான வசூலைக் கறந்து விடுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள எஸ்.பி., சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வசூல் வேட்டை தொடர்பாகப் புகார்கள் வந்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்குமென்று மைக் மூலமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையில் சிலரிடம் கேட்டோம். ''சேலம் மாவட்டம், பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த வளம்கொழிக்கும் மாவட்டம். இந்த மாவட்டத்தில் பணியாற்ற, வருவாய்த்துறை மட்டுமின்றி, காவல்துறையில் ஆய்வாளர்கள், டிஎஸ்பி முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்வரை ஆர்வத்தோடிருப்பார்கள்.
இம்மாவட்டத்தில் சில ஆண்டுகள் ஆய்வாளராகப் பணியாற்றிய பலர், பல கோடி ரூபாய் மதிப்பில் நீச்சல் குளத்துடன் சொகுசு பங்களா கட்டியுள்ளனர். இதற்கு முன்பு சேலம் மாவட்டத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய நடராஜன், கண்ணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் சோதனையும் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், ரியல் எஸ்டேட் தொழிலிலும் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுபற்றி எஸ்.பி.யின் கவனத்துக்குச் செல்லவில்லை போலும்.
இப்போதுள்ள எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாகத்தான் செயல்பட்டு வருகிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சில ரவுடிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறார். அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்கள் கேட்டும், அதை அவர் நிராகரித்து விட்டார். மேலிடம் சில உத்தரவுகளை போட்டாலும் கூட அங்கே சரியென்று தலையசைத்து விட்டு, தனக்குச் சரியெனப் பட்டதைத்தான் செய்து வருகிறார்.
மேலும், கொலை, கொள்ளை என பெரிய அளவிலான குற்றங்கள் நடந்தால், உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்துவிடுவார். இதேபோன்ற வெளிப்படையான நடவடிக் கையை எல்லா காலத்திலும் தொடருவாரா, அவரைத் தொடரவிடுவார்களா என்பது தெரியவில்லை'' என்கிறார்கள் சேலம் மாவட்ட காவல்துறையினர்.
ஆண்டுதோறும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களை, சொத்துக்கணக்கை வெளிப்படையாக வெளியிடச் சொல்லலாம். அதற்கு முன்னோடியாக எஸ்.பி.யும் தனது சொத்து விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடலாம் என்ற யோசனையையும் சிலர் தெரிவித்தனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் கூட, "சேவை செய்வோம்; மக்களைக் காப்போம்' என்ற முழக்கத்தை முதன்மையாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ். நேர்மைத் திறமும் நெஞ்சில் உரமும் கொண்டோர், எங்கும் யாருக்கும் அடிபணிந்து போகவேண்டியதில்லை. அதை, சேலம் மாவட்ட எஸ்.பி.யும் செய்வார் என நம்புவோமாக.