"ஹலோ தலைவரே, தைலாபுர பரபரப்புக்கு நடுவிலும் இடைத்தேர்தல் தொடர்பான விறு விறுப்பு குறைய வில்லையே.''”
"ஆமாம்பா, ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கில் யார், யார் போட்டியிடப் போறாங்க என்கிற கேள்வி பெருசா எழுந்திருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் சீனியர் நிர்வாகிகளைப் பொறுத்தவரை, பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, ஈரோட்டில் கோதாவில் இறங்கி, தங்கள் பலத்தைக் காட்டலாம்ங்கிற ஆசை இருக்கு. இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து எடப்பாடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலேயே, அவர்கள் இந்த ஆசையை வெளிப்படுத்தியிருக்காங்க. ஆனால் எடப்பாடியோ, இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அதனால், விக்கிரவாண்டியைப் புறக்கணிச்ச மாதிரி, ஈரோடு கிழக்கையும் நாம் தவிர்த்து விடலாமேன்னு சொல்லியிருக்கார். அதுக்கு சீனியர்கள் எல்லோரும், இப்படி இடைத் தேர்தலையெல்லாம் நாம் புறக்கணிச்சா... எதிர்க்கட்சிகள் எல் லாம், உங்க தலை மை பலவீனமா இருக்குன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதுக்கு இடம் கொடுக்காமல் தேர்தலில் மோதிப் பார்த் துடலாம்னு வலியுறுத்தியிருக்காங்க. எடப்பாடியோ, இடைத்தேர்தலில் நாம் களமிறங்கினால், ஆளுங்கட்சித் தரப்பு நம்மை ஊதித்தள்ளிடாதா? எதுக்கு நாமா போயி, அடிவாங்கணும்னு எரிச்சலா கேட்டிருக்கார். அவரைப் பொறுத்தவரை இடைத்தேர்தலைச் சந்திக்கப் பயப்படுறாராம்.''”
"காங்கிரஸும் இந்தமுறை ஈரோடு கிழக்கை தி.மு.க.விடமே விட்டுவிடலாம் என்று நினைக்கிறதாமே?''”
"தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், தி.மு.க. விரும்புகிறபடி, இந்தமுறை ஈரோடு கிழக்கை அதனிடமே ஒப்படைத்துவிடலாம் என்றார்களாம். அதற்குக் காரணம், மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக ஆக்கினால்தான் அங்கே வெற்றிபெற முடியும் என்றும், அப்படி நிறுத்தினாலும், முன்புபோல் தேர்தல் செலவைச் செய்ய தி.மு.க. முன்வருமா என்றும் கேள்வியெழுப்பினார்களாம். மேலும், வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் அளவுக்கு இந்த மாவட்டத்தில் நம் கட்சியில் ஆள் இல்லை என்றும் தெரிவித்தார்களாம். இப்படி காங்கிரஸ் நிர்வாகிகள் வழுக்குவதால், தொகுதியை தி.மு.க.விடமே விட்டுவிடலாமா என்கிற குழப்பத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் இருக்கிறார்களாம்.''
"பா.ஜ.க. மாநில நிர்வாகி குபீரென தன் நிலையை மாற்றிக்கொண்டு, அ.தி. மு.க.வைப் பாராட்ட ஆரம்பித்திருக்கிறாரே?''”
"அ.தி.மு.க.வையும் எடப்பாடியையும் தொடர்ந்து கடுமையாக எதிர்த்துவந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி, இப்போது அ.தி.மு.க.விடம் அடிபணிந்திருக்கிறார். அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தைக் கண்டித்து, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், ’யார் அந்த சார்’ என்கிற பதாகைகளுடன் அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தை ஆதரித்து, தனது பவ்வியத்தை வெளிப்படுத்தியிருக்கிறாராம் இந்த பா.ஜ.க. நிர்வாகி. இதன் பின்னணி பற்றி கமலாலயத் தரப்பில் விசாரித்தபோது, அந்த மாநில நிர்வாகியின் மைத்துனர் சிவகுமாருக்கும், செந்தில் என்பவருக்கும் சொந்தமான குவாரி உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை அண்மையில் ரெய்டு நடத்தியது. அப்போது, கணக்கில் வராத 240 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் ரொக்கமாக 10 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து நம் நக்கீரன் இதழில் விலாவாரியான ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது.''
"ஆமாம்பா, அது பா.ஜ.க. தரப்பை அதிரவிட்ட செய்தியாச்சே?''”
"இந்த ரெய்டு தொடர்பான ஆவணங்களில் சிவகுமார் உள்ளிட்டவர்களிடம், கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்கள் பற்றி வழக்கம்போல் ஒப்புதல் கையெழுத்தையும் அதிகாரிகள் வாங்கியிருக்கிறார்கள். ஒருவேளை லண்டனில் இருந்தபோது அந்த மாநிலப் பிரமுகர் திட்டமிட்டபடி, தனிக்கட்சி ஆரம்பிக்க முனைந்தால், சிவகுமார் உள்ளிட்ட அவர் தரப்பினர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையும் கடுமையாகப் பாயுமாம். அவரை எல்லா வகையிலும் சமாளிக்க பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் தயாராகிவிட்டதாம். இதை சம்மந்தப்பட்ட நபருக்கு இந்த ரெய்டின் மூலம் டெல்லி உணர்த்தியிருக்கிறதாம். இதனால் மிரண்டு போன அந்த பா.ஜ.க. நிர்வாகி, இனியும் அ.தி.மு.க. வுக்கு எதிராகத் துள்ளிக் குதித்தால், நம் பதவியும் பறிபோகும். நம் ஏடாகூட சொத்துக்களையும் இழக்க வேண்டிவரும். தன் நெருங்கிய உறவுகளும் சட்டச் சிக்கலில் சிக்கி வதைபட வேண்டியிருக்கும் என்பதை யெல்லாம் புரிந்துகொண்டாராம். அதனால்தான் அந்த நபர், டெல்லியின் ஆசைப்படி அ.தி.மு.க.வை ஆத ரித்து, நான் எப்போதும் உங்கள் எடுபிடிதான்’என்று, டெல்லிக்கு இதன்மூலம் காட்டியிருக்கிறார் என்கிறார்கள் நமட்டுச் சிரிப்போடு.''”
"சரிப்பா, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எஃப்..ஐ.ஆர். லீக்கான விவகாரம் காவல்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதே?''”
’"உண்மைதாங்க தலைவரே, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்கு களை காவல்துறை மிகமிக கவனமாக கையாளுவதுதான் வழக்கம். அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத் தில், முதலில் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். லீக் ஆனது எப்படி? என்று நீதிமன்றம் கேள்விக் கணை தொடுத்திருக்கிறது. இதுகுறித்து விசா ரித்தபோது, விப்ரோ என்கிற நிறுவனம்தான் காவல்துறையின் தகவல்களையெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு டெண்டர் எடுத்து, டிஜிட்டலில் நிர்வகித்து வருகிற தாம். கடந்த ஆண்டு ஒன்றிய அரசு இந்திய குற்றவியல் சட்டமான ஐ.பி.சி.க்கு பதிலாக நியாய் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன் அடிப்படையில், பெண்களுக்கும் குழந்தை களுக்கும் எதிரான வழக்குகளில் எ.ஃப்.ஐ. ஆரைப் பதிவு செய்தால், அதை யாரும் படிக்க முடியாது. ஆனால் இந்த சட்டப்படி விப்ரோ நிறுவனம், அண்ணா பல்கலைக் கழக மாணவி தொடர்பான எ.ஃப்.ஐ.ஆரை பதிவு செய்யும்போது காட்டிய அலட்சியத் தால், அந்த எ.ஃப்.ஐ.ஆரை 14 பேர் பார்த் திருக்கிறார்களாம். அதில் 7 பேர் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களாம். அதிலும் இவர்களில் பெரும்பாலோர் காட்சி ஊடகத் தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறது காவல்துறை.''”
“"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ரேசன் அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. இந்த முறை பச்சரிசி, வெல்லம், கரும்பு ஆகிய 3 பொருட்களைத் தவிர தொகுப்பில் வேறு எதுவும் இல்லை. குறிப்பாக, கார்டுதாரர் களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏழை எளிய மக்களிடம் இருந்தது. ஆனால், மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை, நான் முதல்வன், மகளிருக்கு இலவசப் பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை என, சலு கைத் திட்டங்களுக்காக செலவுகள் அதிகமான தாலும், பேரிடர் நிவாரண நிதிகள் வழங்கப்பட்ட தாலும் அரசுக்கு நிதி நெருக்கடி அதிகம் இருப்பதைக் காரணம் காட்டி, இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத்தைத் தவிர்த்திருக்கிறார்கள். எனினும் இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி பரவிவருவது குறித்து உளவுத்துறை முதல் வருக்கு ரிப்போர்ட் கொடுத் திருக்கிறதாம்.''”
_____________
இறுதிச் சுற்று!
அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தன் கைப்பட எழுதிய கடிதத்தை திங்கள்கிழமை வெளியிட்டார் த.வெ.க. தலைவர் விஜய். அதில், "கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது. பாலியல் குற்றங் கள் உள்ளிட்ட வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மனஅழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன். பாதுகாப்பான தமிழகத் தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத் தை நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் சாத்தியப் படுத்துவோம்! அண்ணனாக, அரணாக உங்களுக்குத் துணை நிற்பேன்' என்று குறிப்பிட்டுள்ள விஜய், பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை (30-12-24) மதியம் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து, தி.மு.க. அரசுக்கு எதிராக மனு அளித்தார்.
-இளையர்