'ஹலோ தலைவரே, தமிழக காங்கிரஸுக்கு மாநிலம் தழுவிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே?''
""ஆமாம்பா, தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் எண்ணிக்கையைவிட நிர்வாகிகள் அதிகமோ?''
""இங்கே காங்கிரஸ் எப்போதுமே சைலன்ட் ஃபோர்ஸ். தேர்தல் நேரத்தில்தான் அதன் பலம் தெரியும். சட்டமன்றத் தேர்தல் நெருங்குதே! முன்னாள் மாநிலத் தலைவர்களின் ஆதரவாளர்கள் தான் இருந்த பதவிகளில் தன் ஆதரவாளர்களை உட்கார வைக்கனும்னு, அதற்கான பட்டியலோடு தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி போராடிக்கிட்டு இருந்தார். ஒரு வழியா புதிய நிர்வாகிகளை அதிகாரப் பூர்வமாக காங்கிரசின் டெல்லித் தலைமை அறிவிச்சிருக்கு. இந்த நியமனப் பட்டியலில்
புதிதாக 32 மாநில துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 மாநிலச் செயலாளர்கள்னு ஆரம்பிச்சி, தேர்தல் நிர்வாக குழு, தேர்தல் ஒழுங்கிணைப்புக் குழு, தேர்தல் பிரச்சாரக் குழுன்னு ஏறத்தாழ 400 பேர் இடம்பெற்றிருக்காங்க. இதில் அழகிரி ஆட்களுக்கு இடம் கிடைத்திருப்பதோடு மற்ற கோஷ்டித் தலைவர்களின் சிபாரிசுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு.''
""ப.சிதம்பரம்-கார்த்தி சிதம்பரம் தரப்பு புறக்கணிக்கப் பட்டிருக்காமே?''
""தங்கள் ஆதரவாளர்களில் ஒருவருக்குக்கூட பதவி கொடுக்கப்படவில்லைன்னு கார்த்தி சிதம்பரம் கொந்தளிப்பில் இருக்கிறாராம். அதனால் அவர், மாநிலத் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், துணைச் செயலாளர்களுக்கு அதிகாரமும் இல்லை- அவர்களால் கட்சி வளர்ச்சிக்கு எந்த லாபமும் இல்லைனு கோபத்தோடு விமர்சிச்சிருக்காரு. ப.சி-கார்த்தி தரப்பினர் இடம்பெறாததை மற்ற கோஷ்டியினர் ஸ்வீட் எடு- கொண்டாடுன்னு கொண்டாடியிருக்காங்க. சோனியாவின் ஒப்புதலோடு வெளியான பட்டியலை கார்த்தி சிதம்பரம் விமர்சிச்சது பற்றியும் அதிருப்தி குரல்கள் வெளிப்படுது. டெல்லித் தலைமைக்கும் புகார்கள் அனுப்பப்படுது.''
""நியமனப் பதவிக்கான அறிவிப்புகள் வெளியானாலே இப்படிப்பட்ட அதிருப்தி குரல்களும் வருவது வழக்கம்தானே?''
""ப.சி.யின் சொந்த மாவட்டத்திலேயே நிறைய நியமனம் நடந்திருக்குன்னு எடுத்துக் காட்டி, கார்த்தியின் விமர்சனத்தை கண்டிச் சிருக்காரே கட்சியின் துணைத் தலைவரா நியமிக்கப்பட்டிருக்கும் கோபண்ணா.''’
""உண்மைதாங்க தலைவரே, ப.சி.யின் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலேயே 12 துணைத் தலைவர்கள், 16 பொதுச் செயலாளர்கள், 30 செயலாளர்கள், 25 இணைச் செயலாளர்கள் நியமனம் செய்யப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறாரு கோபண்ணா. இதற்கிடையே, தங்கபாலு, ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, மறைந்த வசந்த் அண்ட் கோ வசந்தக்குமார், ஊர்வசி செல்வராஜ் ஆகியோரின் வாரிசுகளுக்கு மெகா பட்டியலில் பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பதை, ப.சி.தரப்பு பதிலுக்கு சுட்டிக்காட்டுது. அதேபோல் தூத்துக்குடி மாவட்ட தலைவ ராக ஊர்வசி அமிர்தராஜ் நியமிக்கப்பட்டிருப்பதை அ.தி.மு.க-தி.மு.க உள்பட பல தரப்பும் கூர்ந்து கவனிக்கிது.''
""ம்...''
""காங்கிரஸின் டெல்லித் தலைமையால், கட்சியின் புதிய பொருளாளராக பில்டிங் காண்ட்ராக்டரான ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டிருப்பது, கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே ஆச்சரியம் கலந்த அதிருப்தியை உருவாக்கியிருக்கு. பல்வேறு நியமனங்களின் பின்னணியில் கரன்ஸி விளை யாட்டு இருக்குன்னு, சத்தியமூர்த்தி பவனிலேயே ஹாட் டாக் அடிபடுது.''
""ரஜினியின் அரசியல் துறவற முடிவுக்குப் பிறகு அவரது ‘மக்கள் மன்ற நிர்வாகிகள், என்ன செய்யறாங்க?''
""ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோர், இது தெரிஞ்சதுதான்னு சொல்றாங்க. அவர் அரசியலுக்கு வந்திருந்தால் ஆதரிச்சிருப்போம். இல்லைங்கிறதால, எங்க வழி தனி வழின்னு பார்த்துக்குவோம்ங்கிறாங்க. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை வைத்து அதிகாரத்தை குறி வைக்கலாம்னு ரொம்ப காலமா கணக்கு போட்டு செலவழிச்ச சில மன்ற நிர்வாகிகள் செம அப்செட். அவங்கவங்களும் இதுநாள்வரை தொடர்பில் இருந்த அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகி வருகிறார்கள். சமீபத்தில்கூட முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் காஞ்சி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் பலரும் தி.மு.க.வில் ஐக்கியமானாங்க. இதேபோல் பலரும் பல்வேறு கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் ஆன்மிக அரசியலை எதிர்பார்த்திருந்த நிர்வாகிகளை ஆர்.எஸ்.எஸ். தரப்பு அணுகிவருவ தால், அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதி ரஜினி மக்கள் மன்றத்தினரும் பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கிறார்கள்.''
""ரஜினி எப்படியும் வாய்ஸ் கொடுப்பாருன்னு இப்பவும் பா.ஜ.க பலமா நம்புதே?''
""ரஜினியைப் பொறுத்தவரை அவருக்கு உடல்நிலைதான் முக்கியம். ஏற்கனவே சிங்கப்பூரில் கிட்னி மாற்று சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால் டாக்டர்கள் அவர் உடல் நலத்தில் தீவிர கவனம் செலுத்தறாங்க. மேல் சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கும் ரஜினி, அங்கு ஒரு மாதம் காலம் இருப்பாருன்னு சொல்லப்படுது. இந்த நிலையில் தங்கள் கட்சியை ஆதரித்து அறிக்கை வெளியிடும்படி பா.ஜ.க. மேலிடம் ரஜினியிடம் கேட்க, விரைவில் தருகிறேன்னு ரஜினி சொன்னதா சொல்லும் பா.ஜ.க தரப்பு, ஆன்மிக அரசியல் பற்றி விளக்கி, தங்கள் தரப்பை ஆதரிக்கும் வகையில் ரஜினியோட அறிக்கை வரும்னு நம்பிக்கையோடு சொல்லுது.''
""தலைமைச் செயலாளர் சண்முகம் இந்த மாதம் ஓய்வு பெற இருக்கிறாரே?''
""ஆமாங்க தலைவரே, அவர் ஏற்கனவே இரண்டுமுறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டவர். சட்டமன்றத் தேர்தல் வரை, அவரே நீடிச்சா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்ட எடப்பாடி, அதுக்கு டெல்லியிடம் அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினார். அதே சமயம் சண்முகத்தின் மீது புகார்களும், அவர் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகளை பழி வாங்குவதாக வந்த தகவல்களும் டெல்லியை யோசிக்க வைத்ததால், அவருக்கு பதில், மத்திய அரசுப் பணியில் இருக்கும் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்.சை தலைமைச் செயலாளராக்கும் திட்டத்தில் இருக்குதாம். அதனால் எடப்பாடி அப்செட். இருந்தும் முயற்சியை தொடர்கிறாராம்.''
""அ.தி.மு.க.வில் இன்னும் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையில் பவர் யுத்தம் தொடருதே?''
""அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்னு ஓ.பி.எஸ்ஸே. முன்மொழிந்தாலும் பவர் பாலிடிக்ஸ் ஓயலை. பிரச்சாரத்தில் எடப்பாடி தன்னை ஜெ. போல முன்னிறுத்துவதை பார்த்து ஓ.பி.எஸ் தரப்பு எரிச்சலாகுது. திருச்சியில் எடப்பாடி பிரச்சாரம் செய்தப்ப, அவரைப் பற்றி பக்கம் பக்கமா ஒரு பத்திரிகையில் விளம்பர பாணி செய்தி வந்தது. அதனால, அதே பத்திரிகையில், ஓ.பி.எஸ். புகழ்பாடி-அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்னு பட்டம் சூட்டி அதே அளவில் விளம்பர பாணியில் செய்தி வெளியிடப்பட்டது. அடக்கம், அமைதி, செயலாற்றல் என்றும் ஓ.பி.எஸ்ஸை அதில் புகழ்ந்திருந்தாங்க. அ.தி.மு.கவுக்குள் சின்ன புகைச்சல் இருந்தாலும் அதை பா.ஜ.க தரப்பு நல்லா விசிறிவிட்டு, நெருப்பாக்கப் பார்க்குதுன்னு இந்த விளம்பர செய்தியை கவனித்த அ.தி.மு.க.காரங்களே சொல்றாங்க.''
""இந்த பவர் ஃபைட்டுக்கு நடுவே, அ.தி.மு.க. மா.செ. ஒருவர், கட்சிக்கு சொந்தமான இடத்தை விற்று ஏப்பம் விட்டுட்டார்ன்னு செய்தி வருதே?''
""உண்மைதாங்க தலைவரே, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.வுக்கு, கட்சி அலுவலகம் கட்ட ஜெயலலிதா இருக்கும் போதே முடிவு செய்யப்பட்டு, அதற்காக ஒரு இடத்தில் நிலமும் வாங்கப்பட்டிருக்கு. அந்த நிலத்தை இப்போதைய மா.செ. முனியசாமி விற்று விட்டதாக கட்சியின் தலைமைக்குப் புகார்கள் போயிருக்கு. இதனால் ஷாக்கான கட்சித் தலைமை, இதை விசாரிக்குமாறு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் ஒரு குழுவினை அமைக்க, விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உண்மைதான்னும் மா.செ. முனியசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கனும்ன்னும் கட்சித் தலைமைக்குப் பரிந்துரை பண்ணியிருக்குதாம் அந்தக் குழு.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். நான் எம்.ஜி. ஆரின் மடியில் தவழ்ந்தவன் என்றும், தான் அவரது ஆட்சியைத் தரப்போவ தாகவும் வாரிசு என்றும் கமல் சொல்லிவந்த நிலையில், கமலுக்கும் எம்.ஜி. ஆருக்கும் என்ன தொடர்பு என்று பலரும் அவரை அட்டாக் பண்ணி வந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நோக்கில் ஒரு வீடியோ பதிவைத் தயாரித்திருக்கும் பத்திரிகையாளரான சுந்தர்ராஜன், அந்த வீடி யோவை சமீபத்தில் கமலிடம் நேரில் கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் எம்.ஜி.ஆருக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு குறித்த தகவல்கள் இருப்பதோடு, எம்.ஜி. ஆருக்கு சிகிச்சையளித்த ஜப்பான் டாக்டர் காணுவைப் பற்றி அப்போது கமல் பாராட்டிப் பேசியதும் இருக்குதாம்.''