""ஹலோ தலைவரே, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பணி நீட்டிப்புக்கு டெல்லி க்ரீன் சிக்னல் கொடுத்திடிச்சே.''
""சண்முகத்தின் பணிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 6 மாத கால பணி நீட்டிப்பில்தானே அவர் இப்போதும் இருக்கிறார்.''
""உண்மைதாங்க தலைவரே, அவருக்கு மேலும் 6 மாத காலம் பணி நீட்டிப்பு கொடுக்கனும்னு ஆசைப்பட்ட எடப்பாடி, அதுக்கு அனுமதி கோரி 2 மாசத்துக்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இருந்தும் அதுக்கு எந்தவிதமான பதிலையும் டெல்லி தரலையாம். ஆனாலும் அவரை விட மனசில்லாத எடப்பாடி, சண்முகத்தை ஆலோசகராக நியமித்துக் கொள்ளலாமாங்கிற யோசனையில் இருந்தார். ஆனா, அக்டோபர் 14ந் தேதி, சண்முகத்தின் பதவியை 3 மாத காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 31ந் தேதி வரை பதவியில் இருப்பாரு.''
""ஜெ முதல்வரா இருந்தப்ப இப்படித்தான் ரிட்டையர்டு அதிகாரிகளுக்கு எக்ஸ்டென்ஷன்- அரசு ஆலோசகர் பதவின்னு கொடுக்கப்பட்டது. அதனால, அடுத்த நிலையில் இருக்கிறவங்களோட சர்வீஸ் சரியா பயன்படுத்தப்படலை. எடப்பாடி அடிக்கடி அம்மா ஆட்சிங்கிறது இதைத்தானோ?''
""ஆமாங்க தலைவரே, அவரைப் பொறுத்தவரைக்கும் தன்னை இத்தனை காலம் முதல்வரா இருக்க அனுமதிச்ச பா.ஜ.க. மேலிடம், இந்தத் தேர்தலிலும் தன்னை முதல்வர் வேட்பாளர்னு மனப்பூர்வமா ஏத்துக்கிட்டாலே போதும்னு எதிர்பார்க்குறாரு. டெல்லியிடம் தன் இணக்கத்தைக் காட்டும் விதமாக, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன்கள் முழுதும் ரத்துன்னு அறிவிக்கவேண்டும். அப்படி அறிவிப்பதால் நம் கூட்டணி அமோக வெற்றி பெறும்னு ஒரு பரிந்துரைக் கோப்பினை பா.ஜ.க. தலைமையின் பார்வைக்கு அனுப்பிவைத்திருக்கிறாராம் எடப்பாடி. இந்தக் கடன் சுமையை மாநில அரசும் மத்திய அரசும் பாதிப்பாதி பகிர்ந்துக்கலாம் என்றும் கூடவே அவர் ஆலோசனையும் சொல்லியிருக்கிறாராம். தேர்தல் அறிக்கையை பா.ஜ.க.வே வெளியிட்டாலும் சரின்னு நினைக் கிறாராம்.''
""எடப்பாடியின் அமைச்சர்கள் இப்பவும் சசிகலா டீமுடன் சகஜமா இருக்காங்களாமே?''
""அதுக்கு ஒரு உதாரணம் சொல்றேங்க தலைவரே... டெல்டா பகுதியில் இருக்கும் எடமேலையூர் கண்டியர் தெரு ஊராட்சி மன்றத்தின் தலைவராக சித்ரா ராமச்சந்திரன் என்பவரை, உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தி, அவரை வெற்றி பெறச்செய்தவர், திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த். இப்பவும் அவர் மேற்பார்வையில் இருக்கும் இந்தப் பகுதிக்கு அமைச்சர் காமராஜ் நிறைய உதவிகளைச் செய்வதன் மூலம், மன்னார்குடித் தரப்புக்கு தன் விசுவாசத்தைக் காட்டிக்கிட்டு இருக்கிறாராம். சமீபத்தில் அந்த சித்ரா ராமச்சந்திரன் கேட்டுக்கிட்டபடி, நடமாடும் நியாய விலைக் கடையையும் ஏற்பாடு செய்துகொடுத்து, மன்னார்குடித் தரப்பை மனம் குளிர வச்சிருக்கார் காமராஜ்.''’
""ஆனா, சசிகலா ரிலீசாவதை எடப்பாடி மனப்பூர்வமா விரும்பலையே?''
""தன் அதிகாரத்தை தக்க வச்சிக்கணும்னா சசிகலா உடனடியா ரிலீஸ் ஆகிவிடக்கூடாதுன்னு எடப்பாடி நினைக்கிறாராம். தேர்தலுக்குள் சசி வெளியே வந்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்னு அவர் பயப்படறாராம். அதனால், சிறைத் தண்டனையோடு, சசிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 10 கோடி ரூபாயை, அவர் கட்டிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி ரொம்பவே கவனமாக இருக்கிறாராம். சசியுடன் சிறையில் இருக்கும் இளவரசியும் சுதாகரனும் அபராதத் தொகையை ஒரு வழியா கட்டிட்டாங்க. எனினும் சசிகலாவோ, அபராதத்தை எந்தக் கணக்கில் காட்டி, கட்டுவதுன்னு தவித்து வருகிறாராம். அதனால் அவர் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதுன்னு அ.தி.மு.க. சீனியர்கள் சொல்றாங்க.''
""பா.ம.க. ராமதாஸை மாநில உளவுத்துறை கூர்ந்து கவனிக்குதாமே?''
""பா.ம.க தயவு அ.தி. மு.க.வுக்குத் தேவைப்படுது. அதேநேரத்தில், அ.தி.மு.க அரசின் சில நடவடிக்கைகள் பா.ம.க.வை கோபப்படுத்துது. தமிழகத்தில் இருக்கும் சீர் மரபினரைக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க இருக்குது எடப்பாடி அரசு. இதை டிசம்பர் 31-க்குள் முடிக்கவேண்டும் என்பது டெல்லி விதித்திருக்கும் கெடு. கணக் கெடுப்புக்குப் பின், சீர் மரபினருக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறதாம். இதையறிந்த பா.ம.க, நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடிக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதி, அதை ஏ.கே.மூர்த்தி, பு.த.அருள் மொழி ஆகியோர் மூலம் கொடுத் திருக்கிறார். அந்தக் கடிதத்தில், சீர் மரபினரை மட்டும் கணக்கெடுத்து அவர்களுக்கு சலுகைகளைக் கொடுத்தால், அது மிக பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டைப் பாதிப்பதாக அமையும். அதனால் அவர்கள் கடுமையாகப் போராட்டத்தில் குதிக்க நேரும். அப்படிப்பட்ட போராட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்களே அறிவீர்கள். எனவே, அனைத்து சமுதாயத்தையும் கணக்கெடுக்க வேண்டும் என்ற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறாராம். போராட்டம் குறித்து ராமதாஸ் சொன்ன குறிப்பை, சீரியசாகவே கவனிக்கிறதாம் தமிழக உளவுத்துறை.''
""பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், களத்தில் அனல் பறக்குதேப்பா?''’
""அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடக்க இருக்குது. இங்கே தி.மு.க.வுக்கான அரசியல் ஆலோசனைகளைச் சொல்லிவரும் ’ஐபேக்’ நிறுவனத்தின் மாஸ்டரான பிரசாந்த் கிஷோரின் சொந்த மாநிலம் அது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து, கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டிருக்கின்றன. பாஸ்வான் கட்சி தனியா நிற்பதால, நிதிஷுக்கு நெருக்கடி அவருக்கு தேர்தல் வியூகங்களை வகுப்பது, தமிழகத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் கிரீஸ் தோக்கே தலைமையிலான "ஜேபிஜி-பேக்' என்ற நிறுவனம். இந்த டீம் ஐக்கிய ஜனதா தளம் களமிறங்கும் 121 தொகுதிகளிலும், மைக்ரோ லெவலில் தேர்தல் பணிகளைத் துல்லியமா நகர்த்தத் துவங்கியிருக்கு.''
""பாலிவுட் நடிகர் சுசாந்த்சிங் தற் கொலை விவகாரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சி.பி.ஐ,. விசாரிக்க இருக்குதாமே?''
""சுசாந்த்சிங்கின் மரணம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் மூழ்கடிச்சிருக்கு. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., சுசாந்தின் மரணத்துக்குக் காரணம், அவர் காதலி ரியா சக்கரவர்த்திதான்னு வழக்கைப் பதிவு செய்திருக்கு. இதை மகாராஷ்டிராவின் மூத்த தலைவரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார், கடுமையாகக் கண்டித்ததோடு, நடிகை ரியாவுக்கு ஆதரவாக நிறையப் பேசினார். இந்த நிலையில் நடிகை ரியா போதைப் பொருள் விவகாரத்தில் சிக்க, அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதையும், அவர் மூலம் பல நடிகைகளும் போதை நெட் ஒர்க்கில் இருப் பதையும் அறிந்து சி.பி.ஐ. வலைவிரிச்சுது. இந்த சூழலில்தான் ரியாவுக்கு ஆதரவாகப் பேசிய சரத்பவாரை சி.பி.ஐ.யும் போதைப் பொருள் தடுப்புத்துறையும் விசாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கு, இது மகாராஷ்ட்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு.''
""காங்கிரஸின் தகவல் தொடர்புப் பிரிவின் தலைவர் பதவிக்கு ப.சி. உள்ளிட்ட சீனியர்களின் பெயர்கள் அடிபடுதே?''
""அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக இருந்த ரன்தீப் சுர்ஜேவாலாவை, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிச்சிருக்கிறார் சோனியா. இதனால் தகவல் தொடர்பு பிரிவின் பணிகள் திணறின. அதனால் அந்தப் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம்ன்னு சோனியாவிடமும் மன்மோகன் சிங்கிடமும் ராகுல்காந்தி ஆலோசிச்சிருக்க்கார். அப்போது, பா.ஜ.க. தரப்புக்கு பலமாக பதிலடி கொடுக்கும் ஒருத்தர்தான் இந்தப் பதவிக்கு லாயக்கானவர்னு சொல்லியிருக்கிறார் சோனியா. அதனால் அந்தப் பதவிக்கு ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், பவன் கரே ஆகியோரின் பெயர்களை காங்கிரஸ் தலைலை பரிசீலிக்கிறது. இவர்களில், மோடி அரசை ட்வீட்டரில் செமத்தியா கலாய்க்கும் ப.சி.க்கு வாய்ப்பு அதிகம்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். திமு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன், வட மாவட்ட தட்பவெப்ப நிலையைக் கருதி, தி.முக. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் பலமாக இருக்கும்னு நினைக்கிறாராம். அதனால் அவர் பா.ம.க.வினருடன் தொடர்பிலும் இருக்கிறார். ஆனால் இது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை யோசிக்க வைத்திருக்கிறது. இப்பவே கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் நெருக்கடி இருக்கிறது. பா.ம.க.வும் வந்தால் அந்த நெருக்கடி மேலும் அதிகமாகாதா? விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படி கூட்டணியில் தொடர முடியும்? என்ற கோணத்திலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.''