"ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி கூட்டிய அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திடீர்னு தேதி தள்ளிவைக்கப்பட்டிருக்கே''’

""ஆமாம்பா, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களுக்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சித் தலைமைக்குமே ஷாக் அனுபவங்கள்தான் கிடைச்சிதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, வரப் போகும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலோடு விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் rrதேர்தலையும் ஏப்ரலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. அது தொடர்பான ஆலோசனைக்காகத்தான் கடந்த 10-ந் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு இந்தக் கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார். தேர்தல் நேரத்தில் ஒத்துழைக்காத கட்சிப் பிரமுகர்களைப் பற்றி, தங்கள் தலைமையிடம் நேரடியாகப் புகார் சொல்லணும்ங்கிற எண்ணத்தோட, இந்தக் கூட்டத்துக்குப் போனவங்க, அங்க சம்பந்தப்பட்டவங்களைப் பற்றிப் பேச முடியாமல் திகைச்சிருக்காங்க''’

""ஏன்?''’

Advertisment

""உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்றேங்க தலைவரே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. கடுமையான தோல்வியைச் சந்திச்சிது. மாஜி மந்திரியும் எம்.பி.யுமான வைத்திலிங்கம்தான் இந்தத் தோல்விக்குக் காரணம்னு தலைமையிடம் புகார் சொல்லப்போன கட்சிப் பிரமுகர்கள், அந்தக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் வரிசையில் வைத்திலிங்கம் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும், ஒன்றும் பேசமுடியாமல் திகைச்சிப் போயிருக்காங்க. இன்னும் சிலரோ, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட தேர்தலை எல்லாம் இப்போதைக்கு நடத்தாதீங்க. நடத்தினால் நாம் பள்ளம் படுகுழியில்தான் விழுவோம்னு எடப்பாடியின் முகத்துக்கு நேராவே சொல்ல, ரொம்பவே ஆடிப் போயிட்டாராம் எடப்பாடி''’

""ம்...''

""கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமாரைப் பார்த்து சிலர், எதற்கெடுத்தாலும் அறிக்கையும் விளக்கமும் கொடுக்கற நீங்க, உங்க துறை சம்பந்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் பற்றி ஏன் தெளிவான விளக்கத்தைத் தரலைன்னு கேள்வி களை எழுப்பியிருக்காங்க. ஜெயக்குமார் நெளிய, எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும், தேவையில்லாததைப் பேசாதீங்க. ஆசை காட்டும் தி.மு.க.விடம் பலியாயிடாதீங்கன்னு அவர்களை அதட்டி உட்கார வச்சிட்டாங்களாம். இதனால், அப்செட்டான கட்சிப் பிரமுகர்கள், மனம் விட்டுப் பேசமுடியாத இந்தக் கூட்டத்தில் கலந்துக்கறதே வேஸ்ட்டுன்னு மற்ற நிர்வாகி களிடம் சொல்ல, அடுத்த நாள் கூட்டத்தில் பெரும்பாலானோர் தலையைக் காட்டலை. கட்சியினரின் எதிர்ப்பைக் கண்டு திகைத்துப் போன எடப்பாடி, 13-ந் தேதி நடக்க இருந்த கூட்டத்தை 15-ந் தேதிக்கு ஒத்திவச்சதோட, ஏப்ரலில் நடத்தவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் யோசனையில் இருக்கிறாராம்.''

Advertisment

""காவிரி டெல்டா பகுதிகளை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலம்னு எடப்பாடி அறிவித்தது எந்த அடிப்படையிலாம்?''

""நாடாளுமன்றத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. டேமேஜ் ஆனதால், அதைச் சரிக்கட்ட எதையாவது அதிரடியா அறிவிக்கணும்னு நினைச்சார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40-க்கு 40-ல் முழுசா தோல்வியடைஞ்சிது. இதனால் ஷாக்கான அப்போதைய முதல்வரான ஜெயலலிதாகூட மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு-கோழி பலியிடத் தடை, அரசு ஊழியர்கள் மீதான எஸ்மா, டெஸ்மா இதையெல்லாம் ரத்து செய்தாரே!''

""ஆமாம்பா...''

""அது மாதிரிதான், முதல்வர் எடப்பாடி இப்ப வேளாண் மண்டல அறிவிப்பைச் செய்திருக்கார். இந்தத் திட்டத்துக்கு விவசாயி களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் பலத்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கு.''

""காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு என்ன சொல்லுதாம்?''’

""மத்திய அரசுதான் இதுபற்றி முறைப்படி அறிவிக்கவேண்டுமாம். வேளாண் பாதுகாப்பு மண்டலத்தைக் கொண்டு வர்றதுன்னா, அந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்கக்கூடாது. ஆனால் அண்மையில்தான் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லைன்னு மத்திய அரசு தெரிவித்தது. ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறு வனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கு. இதேபோல் எடப்பாடியும் அண்மையில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு ஒப்பந்தம் போட்டிருக்காரு. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடுகிறவர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பறாங்க''’

""நியாயம்தானே?''’

""ஆமாங்க தலைவரே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால், அந்தப் பகுதியில் நாலடிக்கு மேல் மணலைத் தோண்டி எடுக்கக் கூடாது. ஆனால் இப்போது எடப்பாடி தரப்பு ஆளுங்களே பல அடி ஆழத்துக்குக் குழி தோண்டி, ஆற்று மணலையும் சவுடு மண்ணையும் அள்ளிக்கிட்டு இருக்காங்களேன்னு பொதுமக்களே கேள்வி எழுப்பறாங்க. இந்த நிலையில், யாரைக்கேட்டு இப்படியொரு திட்டத்தை அறிவிச்சீங்கன்னு இன்னொரு பக்கம் மத்திய அரசு, தலைமைச் செயலாளர் சண்முகத்தைக் கேள்விகளால் குடையுதாம். இப்படி மத்திய அரசின் கோபத்தை இதன் மூலம் சம்பாதித்திருக்கும் எடப்பாடி, டெல்லியை சமா தானப்படுத்தும் நடவடிக்கைகளையும் அங்கிருக்கும் தன் லாபி மூலம் முடுக்கி விட்டிருக்காராம்''’

ee

""திருச்சியை நிர்வாகத் தலைநகராக மாற்றுவது குறித்தும் எடப்பாடி ஆலோசிச்சாராமே?''’ .

rr

""சென்னையில் நெருக்கடி அதிகரிப்பதால், சென்னையில் சட்டமன்றம் மட்டும் இருக்கட்டும், தலைமைச் செயலகம் திருச்சியில் நடக்கட்டும் என்பதுதான் அவர் கருத்தாம். அண்மையில் ஆந்திராவுக்கு 3 தலைநகர் அறிவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும்தான் அவருக்கு இப்படி ஒரு ஞானோதயம் தோன்றுச்சாம். சீனியர் அமைச்சர்களோ, எம்.ஜி.ஆர்.காலத்திலேயே இப்படி யோசித்து, சரி வராதுனு கைவிட்டாச்சுன்னு எடுத்துச் சொன்னாங்களாம்.''

""டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேணும்ன்னு தி.மு.க. குரல் எழுப்புதே?''’

""உண்மைதாங்க தலைவரே, டி.என். பி.எஸ்.சி. விவகாரத்தைத் தோண்டத் தோண்ட புதுப்புது பூதமா கிளம்பிக்கிட்டிருக்கு. அதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற ணும்ன்னு தி.மு.க வலியுறுத்துது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த அக்கட்சியின் எம்.பி.க்களான ஆர்.எஸ்.பாரதியும், வில்சனும், அவரிடம் இது தொடர்பான புகார் மனுவைக் கொடுத்திருக்காங்க. அப்ப, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கலைன்னு தலைமைச்செயலாளர் சொல்லியிருக்காரு. தி.மு.க. தரப்பிலோ, சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பினால் யாரும் தப்ப முடியாதே... அதையே செய்யலாமேன்னு பேசப்பட்டிருக்கு.'' ’

""தேசிய குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக, தி.மு.க. கூட்டணி ஒரு பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடிச்சிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, ஏறத்தாழ. 2 கோடி பேரின் கையெழுத்துக்களை தி.மு.க. தரப்பு வாங்கியிருக்கு. அறிவாலயத்துக்கு கொண்டு வரப்படும் இந்த கையெழுத்துப் பண்டல்கள், விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கு. தி.மு.க.வின் இந்த கையெழுத்து இயக்கம் எப்படி நடக்குதுன்னு கண்காணிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கும் மத்திய உளவுத் துறை, கையெழுத்து பெறப்படுகிறவர்களின் முகவரியோ, வேறு அடையாளங்களோ அந்தப் படிவத்தில் இல்லைன்னு சொல்லி யிருக்கு. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கும் இந்த 2 கோடி கையெழுத்துக்களால் என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகுதுங்கிற கேள்வியும் இருக்கு''’

""தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி ஏப்ரலில் காலியாகுதே... போட்டி எப்படி?''’

""அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வுக்கு புதிதாக தலா 3 எம்.பி. பதவிகள் கிடைக்கப்போகுது. அந்த இடங்களுக்கு ரெண்டு கட்சியிலும் முட்டி மோத ஆரம்பிச்சிருக்காங்க. ஆளும்கட்சியில் தன் ஆதரவாளர்களுக்கே 3 சீட்டையும் ஒதுக்கணும்னு எடப்பாடி விரும்ப, அதில் ஒன்றையாவது தன் தரப்புக்கு ஒதுக்கணும்ன்னு ஓ.பி.எஸ். எதிர்பார்க்கிறாராம். இந்த நிலையில், த.மா.கா. தலைவர் வாசன், அ.தி.மு.க. தரப்பிலிருந்து ஒரு சீட்டை எப்படியும் வாங்கிடணும்ன்னு பரபரக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் டெல்லிக்கு நீங்கள் வர வேண்டியிருக்கும்ன்னு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்கனவே அவரிடம் சொன்னதால், விரைவில் டெல் லிக்குப் போகிறார் வாசன். இந்த பயணத்தின்போது, தனது ராஜ்யசபா சீட் குறித்து அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கும்படி பா.ஜ.க. தரப்பிடம் அவர் கேட்கலாம்னு சொல்லப்படுது. தி.மு.க.வோ மூன்று சீட்டிலும் தங்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் களையே உட்காரவைக்கும் முடிவில் இருக்கிறதாம்''’

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். வர்ற 21-ந் தேதி சிவராத்திரி வருது. பக்தர்கள் காலங்காலமா கோவை மாவட்டத்தில் இருக் கும் வெள்ளியங்கிரி மலைக்குப் போறது வழக்கம். புதுசா வெள்ளியங்கிரி மலைக்குப் போக நினைத்த பக்தர்கள், கூகுளில் அது தொடர்பான மேப்பை ஆராய்ந்த போது, வெள்ளியங்கிரியின் ஏழாவது மலைக்குன்றுக்கு ஜக்கி வாசுதேவ் என்கிற பெயர் இருப்பதைப் பார்த்து திகைத்துப் போயிருக்காங்க. இதுகுறித்து அவர்கள் விசாரித்தபோது, அடிவார வனப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஜக்கி தரப்பு, மொத்த மலையையும் ஆக்கிரமிக்கும் ஆசையோடு, ஜக்கி பெயரை கூகுள் மூலம் வச்சிருக்கோன்னு சந்தேகம் வந்திருக்கு. ஜக்கி பெயரை உடனே நீக்கணும்னு கூகுள் நிறுவனத்தை நோக்கி புகார்கள் போகத் தொடங்கியிருக்கு''

_____________

இறுதிச்சுற்று

"நேருவின் மகனே வருக!' -திருச்சி தி.மு.க. பரபர!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வில் தனித்தன்மையோடு வலம் வருபவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. மாவட்டச் செயலாளராக இருந்த அவரை, தலைமை நிலையச் செயலாளராக்கி சென்னைக்கு அழைத்துக்கொண்டது தி.மு.க. தலைமை.

ff

நேரு அடிக்கடி சென்னை சென்றுவிடுவதால் திருச்சியில் கட்சிக்காரர்களை சந்திப்பதிலிருக்கும் சிரமத்தைத் தவிர்க்க, அவரது மகன் அருணை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று நேரு ஆதரவாளர்கள் விருப்பப்பட்டனர்.

இந்நிலையில் அருண் சமீபத்தில் திருச்சி தி.மு.க. தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வந்து கட்சியினரை சந்தித்தது ஆச்சரியம் கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கே.என்.நேரு கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அருண் கலந்துகொண்டார். உடன் தி.மு.க. மாநகர செயலாளர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி ஆகியோர் உடன்சென்றனர். அருணை வரவேற்று திருச்சி மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

காடு வெட்டி தியாகராசன், அன்பில் மகேஷ், வைரமணி என திருச்சிக்கு மூன்று மா.செ.க்களை தலைமை நியமித்துள்ள நிலையில், நேருவின் மகன் அருணின் திடீர் அரசியல் பிரவேசம் திருச்சி தி.மு.க.வினரிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

-தாவீதுராஜ்