"ஹலோ தலைவரே, தி.மு.க.வில் ’"கோ பேக் ஐ பேக்'’ என்கிற கோஷம் அதிரடியாக எழத் தொடங்கியிருக்கு.''
""பலே, கோ பேக் மோடி என்பது போன்ற கோஷங்களை உருவாக்கிய ஐ-பேக்குக்கு எதிராகவே இப்படியொரு கோஷமா?''
""ஆமாங்க தலைவரே, தி,மு.க.வின் அரசியல் ஆலோசனை டீமான பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் மீது, தி.மு.க. சீனியர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பது குறித்து நாம் போனமுறையே பேசிக்கிட்டோம். இதைத் தொடர்ந்துதான் "கோ பேக் ஐ பேக்' என்கிற கோஷத்தை அவங்க தரப்பு கிளப்ப ஆரம்பிச்சிருக்கு. மேலும் தி.மு.க. சீனியர்கள் ஐந்துபேர் ஒன்று சேர்ந்து, நமக்கு வழிகாட்ட ஐ பேக் தேவையில்லைன்னு கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கே அழுத்தம் திருத்தமாக் கடிதம் எழுதியிருக்காங்க. இதற்கு ஸ்டாலின் எந்தவித ரியாக்ஷனையும் காட்டலையாம். அதேசமயம், தி.மு.க. இளைஞர்கள் தரப்பிலோ, இது பா.ஜ.க.வின் சதித் திட்டம். திமு.க.வின் வெற்றியைத் தடுத்தே ஆகனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கும் பா.ஜ.க., தி.மு.க.விடமிருந்து ஐ பேக்கைப் பிரிக்க நினைக்கிது. அதன் தூண்டுதலால்தான், இதெல்லாம் நடக்கு துன்னு பரபரப்பா டாக் அடிபடுது.''’’
""வரும் சட்டமன்றத் தேர்தலில், யார் ஜெயிச்சாலும் பரவாயில்லை. தி.மு.க.வும் அதன் தலைமை நிர்வாகிகளும் ஜெயிக்கக்கூடாதுன்னு பா.ஜ.க. தீவிர வியூகம் வகுக்குதாமே?’’
""இந்த கொரோனா காலத்திலும் பேப்பர் செய்திகளை தவறாமல் படிக்கிறீங்கன்னு தெரியுதுங்க தலைவரே... தி.மு.க.வை வருகிற சட்டமன் றத் தேர்தலில், கடுமையாக வீழ்த்திப் படுக்க வச்சிடனும்னு பா.ஜ.க. விதவிதமான வியூகங்களை இப்பவே வகுத்துக்கிட்டு இருக்கு. அதே போல் ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்னாலும், அந்தத் தொகுதியில் பா.ஜ.க.வின் திடீர் துணைத் தலைவராகியிருக்கிற முன்னாள் ஐ.பி. எஸ்.ஸும் ஆட்டுக்குட்டி வளர்த்து தற்சார்பு அடைபவருமான அண்ணாமலையை நிறுத்து வதுன்னு பா.ஜ.கவில் ப்ளான் போடப் பட்டிருக்குதாம்.''
""அப்ப கொளத்தூரில் டஃப் ஃபைட் காட்டுமா பா.ஜ.க.?''
""ஸ்டாலினுக்கு சாதகமான தொகுதியா கொளத்தூர் இருந்தாலும் சென்ட்டிமென்ட்டா இல்லை. இரண்டு முறை அவர் அங்கே ஜெயிச்சப்பவும் தி.மு.க. எதிர்க்கட்சியாதான் வந்தது. அதுபோல, தி.மு.க.வின் கோட்டையான திருவாரூரிலும் கலைஞர் இரண்டு முறை அமோக வெற்றி பெற்றப்பவும் அவரால் முதல்வராக முடியலை. அதனால ஸ்டாலினுக்கான லிஸ்ட்டில் சேப்பாக்கமும் ஆயிரம் விளக்கும் இருக்குதாம். அங்கே பா.ஜ.க. சார்பில் அண்ணாமலையா வேறு ஏதாவது மலை மோதுமான்னு தேர்தல் நேரத்தில் பார்க்கலாம்.''
""அரசியல்ரீதியா தி.மு.க-பா.ஜ.க. மோதிக்கிட்டிருக்கிற நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திச்சிருக் காங்களே?''
""பாஜ.க. தங்களுக்குக் குழிவெட்டத் துடிப்பதை அறிந்திருந்தாலும், தி.மு.க.வைப் பொறுத்தவரை, தமிழக நலனுக்காக மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டியதைக் கேட்டே ஆகணும்ங்கிறதுதான் அதன் நிலைப் பாடு. தமிழகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீர்வோம்'னு கர்நாடகா அடம்பிடிக்கிது. எடப்பாடியோ இதுபற்றிக் கவலையே படலை. அதனால் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தனும்னு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, அதை டி.ஆர்.பாலு எம்.பி.யிடம் கொடுத்தனுப்பினார் ஸ்டாலின். பா.ஜ.க. அரசின் வேளாண்மை மசோதாவைக் கடுமையாக தி.மு.க. எதிர்த்த நிலையிலும், பாலு கேட்டதும் உடனே சந்திக்க அப்பாயிண்மெண்ட் கொடுத்துட்டார் மோடி.''
""சந்திப்பு எப்படி இருந்ததாம்?''
""தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி ஆகியோர் மோடியை சந்திச்சி, ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்தாங்க. அதைப் படித்துப் பார்த்த மோடி, "பிரச்சனையின் தீவிரம் புரியுது. இந்த விசயத்தில் நிச்சயம் மத்திய அரசு தமிழகத் திற்குத் துணை நிற்கும்'னு சொன்னதோட, ஸ்டாலினின் நலத்தை விசாரிச்சிருக்கார். விடைபெற்றுக் கிளம்பும் போது, மோடியிடம் டி.ஆர்.பாலு, "எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு நீங்கள் சொல்லும் பதில்?' என்று கேட்க, மோடியோ, "அவரை விசாரித்ததாகச் சொல் லுங்கள். தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் எந்த அணையைக் கட்டவும் மத்திய அரசு அனுமதிக்காது' என்பதையும் சொல்லுங்கள்ன்னு அழுத்தமாகவே கூறியிருக்கிறார். அந்த சந்திப்பின்போது, தி.மு.க எம்.பி.க்களிடம் சில விசயங்களை மனம் விட்டு மோடி பேசியதாகவும் சொல்லப்படுது.''’’
""28-ந் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட இருக்கும் நேரத்தில், கட்சியில் புதிய நியமனங்கள் கூடாதுன்னு வழக்கு போடப் பட்டிருக்கே?''
""ஆமாங்க தலைவரே, சசிகலாவின் விடுதலை நெருங்கிவரும் நிலையில், கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? கட்சியின் தலை மைப் பதவியாக இருந்த பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கலாமா என்பது போன்ற கேள்விகள் அ.தி.மு.க. சீனியர்கள் மட்டத்திலேயே எழுந்திருக்கு. இந்த நேரத்தில்தான், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியமூர்த்தி என்பவர், அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகி களை நியமிக்கத் தடை விதிக்க னும்னு உயர்நீதி மன்றத்தின் கதவைத் தட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கார். சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரா ஆயிடக் கூடாதேங்கிற நோக்கத்தில், அவருக்கு எதிர்தரப்புதான் இந்த வழக்கைப் போட்டிருக்குன்னு ஒரு தரப்பு சொல்லுது. இன்னொரு தரப்போ, சசிகலா ரிலீசாவதற்கு முன்பாகவே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் தான் அமர்ந்துடனும்ன்னு ஓ.பி.எஸ். மல்லுக்கட்டுகிறார். அதனால் எடப்பாடித் தரப்புதான் இப்படியொரு வழக்கால் அவருக்கு செக் வச்சிருக்குன்னு சொல்லுது.''
""செயற்குழுவில் தங்கள் பலத்தை நிரூபிக்க எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் வரிஞ்சிகட்டத் தொடங்கிடிச்சே?''
""உண்மைதாங்க தலைவரே, சசிகலா ரிலீஸாகறதுக்கு முந்தியே, தங்களுக்கான பவர் நாற்காலியை உறுதிப்படுத்திக்கனும்ங்கிற எண்ணத்தில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் ஆட்டத்தைத் தொடங்கிட்டாங்க. செயற்குழுவிலும் மல்லுக்கட்டு நீடிச்சுதுன்னா, அடுத்ததா பொதுக்குழுவைக் கூட்டணும். தமிழகம் முழுக்க இருக்கும் கட்சியின் ஒ.செ.க்களும் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பதால், அவர்களை வெயிட்டாகத் தன் வசப்படுத்தும் முயற்சியில் அதிரடியாக் குதிச்சிருக்கார் எடப்பாடி. தென்மாவட்டங்களில் இருக்கும் ஒ.செ.க்களை மாஜி எம்.பி.தளவாய் சுந்தரம் மூலமும், வடமாவட்ட ஒ.செ.க்களை சேலம் இளங்கோவன் தரப்பு மூலமும் அவர் ஒருங்கிணைச்சிக்கிட்டு இருக்கிறார்.''
""ஓ...''
""அந்த வகையில் முதலில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்களை எடப்பாடி சந்திக்கிறார். இதையெல்லாம் அறிந்து டென்சனான ஓ.பி.எஸ்., 21-ந் தேதி, முன்னாள் அமைச்சர் செம்மலையுடன் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விசிட் அடிச்சி, கட்சியின் அதிகாரம் தன்னிடம்தான்னு உணர்த்தி இருக்கார். எடப்பாடிக்கு சேவகம் செய்யும் தளவாய் சுந்தரத்தின் மீது கடும் கோபமடைந்திருக்கும் ஓ.பி.எஸ்., கட்சியின் கட்டமைப்பைக் குலைக்க நினைக்கிறார் தளவாய். அதனால் அவரைக் கட்சியை விட்டே நீக்கனும்ன்னு கொடி பிடிக்கவும் தயாராயிட்டாராம்.''’’
""அது சரிப்பா, தினகரனின் திடீர் டெல்லி விசிட் பற்றி சசிகலா தரப்பு என்ன சொல்லுது?''
""சசிகலா ரீலீஸ் நேரம் நெருங்கிவருவதால், அதுக்கு தானும் முயற்சி செய்ததுபோல் காட்டிக்கத்தான் தினகரன், திடீர்ன்னு டெல்லிக்குப் பறந்து ஒரு டிராமாவை நடத்தியிருக்கார்ன்னு, சசிகலா உறவினர்களே சொல்றாங்க. டெல்லியில் சசிகலா ரிலீஸ் தொடர்பா, அவர் யாரையும் சந்திக் கலை. அதுக்காகச் சிறு துரும்பையும் எடுத்துப் போடலைன்னு சொல்லும் அவர்கள், சசி ரிலீஸ் ஆகும்போது அவருக்கு அருகில், அரசியல் சாணக் யத்தில் தேர்ச்சி பெற்ற திவாகரன்தான் இருப்பாருன்னும், அ.தி.மு.க.வின் லகான் சசி கைக்கே வரும்படி அவர் மேஜிக்குகளை நிகழ்த்துவாருன்னும் உறுதியாச் சொல்லுது. அதன் பின்னணி பற்றி நம்ம நக்கீரனில் தனி செய்தி ஒண்ணு இருக்குங்க தலைவரே... படிச்சிப் பாருங்க.''’’
""காங்கிரஸ் கட்சியிலும் புதிய விறுவிறுப்பு தெரியுதே?''
""ஆமாங்க தலைவரே, தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் தலைமை, புத்துணர்வோட செயல்பட முனையுது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக்கைத் தூக்கிவிட்டு, அந்த பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவை நியமிச்சிருக்கார் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி. பொறுப்பு கொடுக்கப்பட்ட சூட்டோடு சென்னை வர நினைச்ச குண்டுராவ், கொரோனாவின் தீவிரத்தைப் பார்த்துத் தயங்கினார். இருந்தும், 21-ந் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கப்பட்டபடி, பா.ஜ.க.வின் வேளாண்மை சட்ட மசோதாவை எதிர்த்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வுக்காக, 24-ந் தேதி சென்னைக்கு வந்திருக்கார் தினேஷ் குண்டுராவ்.''
""அவரோட மூவ் எப்படி இருக்குதாம்?’’
""சென்னைக்குக் கிளம்பறதுக்கு முன்பே, காங்கிரஸின் தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாதுன்னு வீராவேச டயலாக்கைப் பேசிட்டுத்தான் கிளம்பினார். முன்னதாகவே, தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரையும் தொடர்புகொண்டு, தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் தி.மு.க.-காங்கிரஸ் உறவு பற்றியுமே விசாரிச்சிருக்கார். 2004-லிருந்து நாடாளுமன்ற- சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை பற்றியெல்லாம், தெரிஞ்சிக்கிட்டவரிடம், இங்குள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள், கடந்த தேர்தலில் பெற்ற சீட்டுகளைக்கூட இந்த முறை தி.மு.க நமக்கு ஒதுக்காதுன்னு ஆதங்கப்பட்டிருக்காங்க.''’’
""ம். அதையும் மேலிடப் பார்வையாளர் உணர்ந்திருப்பாரே.''
""ஆமாங்க தலைவரே, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கக் கூடாதுன்னு பா.ஜ.க. நினைக்குது. அதன் ஆசைப்படி, கூட்டணியிலிருந்தே காங்கிரசை விலக்கிவிட தி.மு.க. தயாராக இருக்குன்னும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், தினேஷ் குண்டுராவிடம் சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக்கிட்ட அவர், தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியை பெங்களூருக்கு 22-ந் தேதி அழைத்து இது பற்றியெல்லாம் விவாதிச்சிருக்கார். அழகிரியுடன் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் குண்டுராவை சந்திச்சிருக்கார். இந்த சந்திப்பின் போது, தி.மு.க-காங்கிரஸ் உறவு பற்றியே அதிகம் விவாதித்த தினேஷ், காங்கிரஸின் சொந்த செல்வாக்கை முதலில் நாம் நிரூபிக்கனும்னு அவர்களிடம் சொல்லியனுப்பினாராம். தினேஷாவது இங்கிருக்கும் கோஷ்டி கானத்துக்கு முடிவுகட்ட முயற்சிப்பாராங்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்களுக்கு இருக்கு.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். மத்திய பா.ஜ.க அரசு, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வேளாண்மை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிரடியாக நிறைவேற்றியிருக்கு. இதற்கான கோப்புகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கு. இதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திடக் கூடாதுன்னு வலியுறுத்துவதற்காக, 23-ந் தேதி அவரை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மனுகொடுத்ததோடு, இந்த மசோதாவின் பாதகங் களைப் பற்றி அவரிடம் கவலையோடு விவரிச்சிருக்காங்க.''