கோவில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜா மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு, பெரியகுளம் அருகிலிருக்கும் கைலாசநாதர் கோயிலில் கல்லுப்பட்டியை சேர்ந்த பட்டியலினத்தவரான நாகமுத்து என்பவர் பூசாரியாக இருந்துவந்தார். இக்கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில், ஓ.பி.எஸ்.ஸின் தம்பியான பெரியகுளம் முன்னாள் சேர்மன் ஓ.ராஜா உள்பட சிலர், பூசாரி நாகமுத்துவை ஜாதிப்பெயரைச் சொல்லி திட்டி இழிவுபடுத்தியிருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன நாகமுத்து, "என் சாவுக்கு ஓ.ராஜா தான் காரணம்' என்று கடிதமெழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்து வெகுண்டெழுந்த பட்டியலின சமூகத்தினர், ஓ.பி.எஸ்.ஸின் தம்பியை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

opsbro

அதையடுத்து, பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஓ.ராஜா மற்றும் பேரூராட்சி தலைவர் பாண்டி உட்பட ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தேனி மாவட்டத்தில் நடந்தால் நீதி கிடைக்காதெனக்கூறி, வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறும், அரசு தரப்பில் வழக்கறிஞர் போட வேண்டுமென்றும் நாகமுத்து தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டார். வழக்கும், திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த வாரம் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட ஆறு பேரும் (பேரூராட்சி தலைவர் பாண்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்) கலந்து கொண்டனர். இவ்வழக்கின் தீர்ப்பினை நீதியரசர் முரளிதரன் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அதைக் கேட்டு ஓ.ராஜா விற்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதாம். தீர்ப்பின் சாதக, பாதகங்களை நினைத்து குடும்பத்தினர் புலம்புகிறார்களாம்.

Advertisment

இது சம்பந்தமாக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டபோது, "கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து, கடந்த 5.5.2012ஆம் தேதி இரவு கிரிவலம் சுற்றி வரும்போது அங்கிருந்த இரண்டு நபர்கள் ஜாதியைச் சொல்லித் திட்டி அடித்திருக் கிறார்கள். இதனால் மனம் நொந்துபோன நாகமுத்து, பெரியகுளம் போலீசில் ஓ.ராஜா மீது புகார் கொடுத்திருக்கிறார். புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜை மிரட்டியிருக்கிறார்கள். அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓ.ராஜா விற்கு ஆதரவாக அப்போதிருந்த போலீஸ் அதிகாரிகளான சேது, உமா, இளங்கோ ஆகியோரும், புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். அதோடு திருட்டுப் பழியும் சுமத்தியிருக்கிறார்கள். இதனால் வாழ்வதை விட சாகலாமென நினைத்துதான் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு 8.12.2012-ல் நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார்.

ddopsbro

அதன்பின், மக்கள் போராட்டம் செய்தும்கூட இந்த வழக்கைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் கிடப்பிலேயே போட்டு விட்டனர். அதன்பின் தான் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 23 சாட்சிகளிடம் விசாரணை செய்தோம். இந்த விசாரணை நடக்கும்போதே போலீஸ் அதிகாரிகளான சேது, உமா, இளங்கோ, செல்லப்பாண்டி ஆகியோரும் இதில் சம்பந்தப் பட்டு இருக்கிறார்கள் என்று போராடியும்கூட எடுபடவில்லை. பூசாரி நாகமுத்து தற்கொலை செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அவர் துன்புறுத்தப்பட்டு, ஆளுங்கட்சி அதிகார பலத்தால் அவர்கள் குடும்பத்தையும் தாக்கி திருட்டுப்பட்டம் சுமத்தியதாலேதான் தற்கொலை செய்துகொண்டார். வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி பத்து ஆண்டுகள் தண்டனை கிடைக்கக்கூடிய வகையில் அதற்கான சாட்சிகளையும், ஆவணங்களையும் கொடுத்திருக்கிறோம். அப்படியிருந்தும் அரசு தரப்பைப் பொறுத்தவரை காவல்துறை சரிவர ஒத்துழைப் பில்லை. ராஜா உள்பட 6 பேரும் இந்திய தண்ட னைச் சட்டம் 306, வன்கொடுமை சட்டம் 325ன்படி தண்டிக்கப்படக் கூடியவர்கள். அந்த அளவுக்கு ஜாதியை இழிவுபடுத்தித் திட்டி வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக் கிறார்கள். தமிழ்நாட்டில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் சேர்மனாக இருந்ததால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதையெல்லாம் நாங்கள் இறுதி விசாரணையில் அம்பலபடுத்தியிருக்கிறோம். இதன்மூலம் தான் இறுதி விசாரணை முடிந்து வருகிற 14ஆம் தேதி நீதியரசர் முரளிதரன் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறார். அடுத்த வாய்தாவில் தீர்ப்பு வெளியாகும்'' என்று கூறினார்.

Advertisment

பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜா உள்பட ஆறு பேருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று வழக்கறிஞர்கள் பலரும் நம்புகிறார்கள். அதற்கு நேர்மாறாக, இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி விடுவோம் என்று ஓ.ராஜா ஆதரவாளர்கள் வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள். இருந்தாலும், ஓ.ராஜாவுக்கு தண்டனை கிடைத்து விடுமோவென்ற பீதியும் ஓ.பி.எஸ், குடும்பத்தாரை சூழ்ந்தேயுள்ளது.

-சக்தி