புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் பதவி வகித்து வருகிறார். அவரை மாற்றவேண்டும் என காங்கிரஸில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் ஒரு பிரிவாகவும், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கந்தசாமி, ஷாஜஹான், அனந்தராமன் ஆகியோர் சோனியாகாந்தியை சந்தித்து உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தலைவரை மாற்றி, கட்சியை பலப்படுத்தும் நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு சோனியா, மாநிலத் தலைவர் பதவி தொடர்பாக ஆலோசிக்க விரைவில் மேலிடப் பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பையும் சமாதானப் படுத்தும் வகையில் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கடந்த 21-ஆம் தேதி காங்கிரஸ் அலுவலகத்தில் 16 பேர் கொண்ட அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கு வதற்கு முன்பாக குண்டுராவிடம் கந்தசாமி, ஷாஜஹான், அனந்த ராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், ‘முதலில் தங்களிடம் தனியாக பேசவேண்டும்’ என்றனர். அதற்கு அவர், ‘கூட்டத்தை முடித்து விட்டுப் பேசலாம்’ என்று கூறியுள்ளார்.
2 மணி நேரம் கூட்டம் நடந்தும் குண்டுராவ் வெளியே வரவில்லை. இதனால் காங்கிரஸ் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், "தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்றம் செய்! திறமையான புது தலைவரை நியமி!'’ என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். சற்று நேரத்தில் வெளியே வந்த குண்டுராவை அதிருப்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சிலர் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவிடமும் வாக்குவாதம் செய்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் குண்டுராவின் சட்டை லேசாக கிழிந்தது. தொண்டர்கள் தாக்கியதில் குண்டுராவின் கார் கண்ணாடி ஒன்றும் உடைந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் நம்மிடம், “ "2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தொண்டர் கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. பலர் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுகொண்டுள்ளனர். தற்போதைய தலை வர் ஏற்கனவே பதவியிலிருந்த காலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்துள்ளது. நாராயணசாமி சொல் வதைச் செய்யும் தலையாட்டி பொம்மையாக அவர் உள்ளார். அவர் தொடர்ந்து தலைவராக செயல்பட்டால் மீண்டும் தோல்வியையே சந்திக்கும். எனவே தான் அவரை மாற்றவேண்டும் என்கின்றனர். அதேசமயம், அவரை மாற்றினால் அந்த பதவிக்கு நாராயணசாமியும், வைத்திலிங்க மும் வர நினைக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே பல பதவி களில் இருந்தவர்கள். இன்னொரு பக்கம் கந்தசாமி, ஷாஜ ஹான், அனந்தராமன் அணியும் தலைவர் பதவிக்கு மோது கிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை கட்சி செல்வாக்கும், தனிநபர் செல்வாக்கும் இருந்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே கட்சித் தலைமை விசுவாசம், பணபலம், சமுதாய பலம், மக்களிடமுள்ள செல்வாக்கு எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கட்சி புத்துயிர் பெற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முடியும்''’என்றனர்.
இதுகுறித்து முன்னாள் அரசு கொறடா அனந்தராம னிடம் பேசினோம். "காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர் கள் மத்தியில் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால்தான் கட்சிக்கு வலுவூட்ட முடியும். தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவர்களுக்கும் 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்களால் இளைஞர்களின் உணர்வு களுக்கு ஏற்றபடி செயல்பட முடியாது. எனவே தலைவரை மாற்றவேண்டும் எனும் எண்ணத்தை தொண்டர்கள் மேலிடப் பார்வையாளரிடம் தெரிவிக்க முயன்றிருக்கிறார் கள். ஆனால் அவரை அவர்களிடம் பேசவிடாததால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. தொண் டர்களின் உணர்வுகளை தலைமை புரிந்துகொள்ள வேண்டும்''’என்கிறார்.
இதனிடையே, மேலிட பார்வை யாளரிடம் தகராறு செய்ததாகக் கூறி மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், கருணாநிதி, மாநிலச் செயலாளர் கள் பி.எம்.சரவணன், சிவாஜி, சேவாதள துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகிய 5 பேர் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும், தகுந்த விளக்கம் அளிக்கவில்லையெனில் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் எனவும் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு நீக்கினால் எதிரணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 45 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக வெளியேறுவோம் என எதிர்த்தரப்பு மிரட்டல் விடுத்துள்ளதாம்.
புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சி எனும் அஜெண்டாவோடு மத்தியில் ஆளும் பா.ஜ.க. களமிறங்கிச் செயல்படும் நிலை யில், மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டிய காங்கிரஸ், சொந்தக் கட்சிக்குள்ளேயே கோஷ்டி அரசிய லால் கலகலத்துப் போகுமோ என கவலைப்படுகின்றனர் முற்போக்கு சக்தி கள்.