அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதனை விசாரித்து பதில் கொடுக்குமாறும் தமிழக அரசுக்கு பட்டியலின தேசிய ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், சுமார் 900 கீழமை நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இங்கு, சிவில், குற்றவியல் மற்றும் சிறப்புச் சட்டங்களுக்காக தமிழக அரசின் கீழ் வருகின்ற பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஆணையங்கள், பல்கலைக்கழகங்கள், போக்குவரத்துத் துறை கழகங்கள், மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சிகள் என கீழமை நீதிமன்றங்களில் சுமார் 3,000 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் சமூக நீதியின்படி எஸ்.சி, எஸ்.டி.க்களுக்கென ஒதுக்கப்பட்ட 19 சதவீத இட ஒதுக்கீட்டின் படி 3,000 பேரில் 570 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lawyers_8.jpg)
அதேபோல, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் அதன்கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கு இதுவரை 205 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை அரசு வழக்கறிஞர்கள் முதல் குற்றவியல் மற்றும் சிவில் அரசு வழக்கறிஞர்கள் வரை சுமார் 205 பேரில் 19 சதவீத இட ஒதுக்கீட்டின்படி எஸ்.சி, எஸ்.டி. பிரிவில் 38 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுகுறித்து உண்மை நிலை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்த பதவிகளுக்கு எத்தனை பேர் விண்ணப்பம் கொடுத்தார்கள்? அதில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதா, அப்படி நடத்தப்பட்டு இருக்கும் பட்சத்தில், நேர்முக தேர்வுக்கு 1-5 என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதா? அதில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்காக மொத்தம் 2,485 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், இந்த பதவிகள் நியமனத்துக்காக தமிழக அரசு சார்பில் எந்தவொரு தேர்வுக்குழுவும் எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ நடத்தவில்லை என்றும், இதுவரை 201 பேர் நியமனம் செய்யப் பட்டுள்ளதாகவும், இந்த நியமனத்தில் எந்தவொரு இட ஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை என்றும் கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எந்தவொரு பணிக்கும், 45 நாட்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ நியமிக்கப்பட்டால், அந்த நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல, அரசு பொதுப் பணத்திலிருந்து ஊதியம் வழங்கினால், அந்த பணிகளுக்கான தேர்வு முறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த இரு உத்தரவுகளையும் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தன்னிச்சை யாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதியில், முன் அனுபவம், வயது, வருமானம் உட்பட 4 பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்து, அதன்பேரில் நீக்கப்பட்டது. அதன் அடிப் படையில் செய்திருந்தாலும் கூட, பட்டியலினத் தவர்களுக்கான 19 சதவீதமும், பெண்களுக்கான 30 சதவீதமும் பின்பற்றாமல், தற்போதுள்ள ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக நீதியைப் பின்பற்றாமல் தேர்வு செய்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lawyers1_1.jpg)
இது குறித்து பேசிய மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ் கருப்பையா, "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் சமூக நீதியைப் பின்பற்றும் வகையில் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் அந்த இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் 201 அரசு வழக்கறிஞர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் பெற்ற சமூக நீதி, உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இல்லாமல் போய்விட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏ.ஜி. வழக்கறிஞர்கள் 14 பேர் நியமனம் செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர்கூட எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவராக இல்லை. தற்போது தி.மு.க. ஆட்சியில், நியமிக்கப்பட்ட 11 பேரிலும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., என ஒருவர்கூட இல்லை. சிலரின் சுய லாபத்திற்காக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த விவகாரம், சமூக நீதியைக் காக்கும் தற்போதைய அரசின் பெயரைக் கெடுக்கும் வகையில் உள்ளது" என்றார்.
இது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில் தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை. மெசேஜ் அனுப்பியும் எந்த பதிலும் தரப்படவில்லை. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே சட்டம் இருக்கிறது. அந்த சட்டம் படித்து அதிகாரத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கே சமூக நீதி மறுக்கப்படுவதும் ஒருவகையில் அடக்குமுறையே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/lawyers-t.jpg)