"ஆவின் பால் விலையை 25 ரூபாயாக குறைப்போம்' என 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார் செல்வி.ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா நல்லாசியுடன் நடைபெறும் எடப்பாடி ஆட்சி, 1 லிட்டர் பாலுக்கு 6 ரூபாய் அதிரடியாக உயர்த்தியதால் 34 ரூபாயாக இருந்த 1 லிட்டர் பால் 40, 37-லிருந்து 43, 41-லிருந்து 47, 45-லிருந்து 51 என ரகம் வாரியாக விலை ஏறி பொதுமக்களை கொதிக்க வைத்துள்ளது.

dafd

சீனி, காபித்தூள் விலை உயர்வால் சாதாரண டீக்கடை களில் 8 ரூபாயாக இருந்த டீ, 10 ரூபாய் ஆனது. 10 ரூபாயாக இருந்த காபி 12 ரூபாய் ஆனது. இப்போது உயர்த்தியிருக்கும் பால் விலை உயர்வால், டீ, காபி விலை எகிறப் போவது குடும்பத்தின் மாதாந்திர பட் ஜெட்டிலும் சிக்கல் வரத்தான் போகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு பலன் தரக்கூடிய கொள்முதல் விலை உயர்வால் விற்பனை விலையை உயர்த்த வேண்டி யுள்ளதாக சொல்கிறார் முதல்வர் எடப்பாடி. "மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பால் விலை குறைவு' என்கிறார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த பால் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisment

""பால்விலை ஏற்றம் இத்தோடு முடியப் போறது கிடையாது. நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலையும் ஏறத்தான் போகிறது. டாஸ்மாக் சரக்கு விலையை எவ்வளவு வேணும்னாலும் ஏத்துங்க, பால் விலையை ஏத்தி எங்க வயித்தெரிச்சலை ஏன் கொட்டிக்கிறீங்க'' இப்படியெல்லாம் கொந்தளிக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

dd

இப்படி அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான முல்லைவேந்தனோ, பால் விலை உயர்வுக்கு வரவேற்பு தெரிவிப்பதோடு, வேறொரு செய்தியையும் சொல்கிறார்.

Advertisment

""நாட்டு இனத்தைச் சேர்ந்த மாட்டுப் பால் மருத்துவ குணம் நிறைந்தது. எந்த வயதினருக்கும் உடல்ரீதியாக தீங்கு விளைவிக்காது. இந்தப் பாலை உற்பத்தி செய்யும் கிராமப்புற விவசாயிகள், இதற்கு நல்ல விலை கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். பல வியாபாரிகள் இந்த வகை பாலை லிட்டர் 60 ரூபாய் என வாங்கி, நகர்ப்புறங்களில் 80 முதல் 100 ரூபாய் வரை விற்கிறார்கள்.

எருமைப் பாலை தரம் பிரிப்பது போல் இந்த நாட்டு இன மாட்டுப் பாலையும் பிரித்தால், அதன் தரம் இன்னும் உயரும். ஆவின் நிர்வாகமே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் இந்தப் பாலை வாங்கினால், கிராமப்புற விவசாயிகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்கிறார்.

தரம் உயர்வானது என்றாலும் விலை தாறுமாறு என்றால், மக்களின் கொதிநிலை பல டிகிரி செல்சியஸுக்கு எகிறுமே.

-அருண்பாண்டியன்