தஞ்சை பர்மா காலனி கூலித் தொழிலாளி குணசேகரன், ராஜலட்சுமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களுக்கு இரு குடும்பங்களின் ஆதரவும் இல்லாத சூழ-ல், ராஜலட்சுமியின் பிரசவத்திற்காக இராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி செவ்வாய்க்கிழமை, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது, 'உனக்கு தாயாக நான் இருக்கிறேன்' என்று ராஜ லட்சுமியிடம் அன்பும் ஆதரவும் காட்டிய ஒரு பெண், வெள்ளிக்கிழமை காலையில் ராஜலட்சுமி குளியலறைக்கு சென்ற பிறகு, அவரது குழந்தையைக் கடத்திச்சென்றுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில், அந்த பெண்மணி, ஒரு பச்சை நிறக் கட்டைப் பையில் குழந்தையை வைத்து தூக்கிக்கொண்டு மருத்துவமனையி-ருந்து வெளியேறி, ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து, டி.எஸ்.பி. கபிலன் தலைமையில் 3 தனிப்படைப் போலீசாரை நியமித்து, தேடும் பணியை முடுக்கிவிட்டிருந்தார் மாவட்ட எஸ்.பி. ரவளிப் பிரியா.
கடத்தப்பட்ட குழந்தை யின் அம்மா ராஜலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், கடைசியாக குழந்தையின் அடையாள எண் உள்ள அட்டை ஒன்றை அந்தப் பெண் வாங்கிச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது. அந்த அடையாள எண் கொண்ட அட்டையை, மருந்தகத்தில் தான் பயன்படுத்த முடியும் என்பதால், மருந்தகத்தில் குவிந்திருந்த அடையாள அட்டைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் எழுதியிருந்த செல்போன் எண்ணை எடுத்து முகவரி பார்த்தபோது, பட்டுக் கோட்டையிலுள்ள முகவரியைக் காட்டி யுள்ளது.
உடனடியாக, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக் கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. டீம், அந்த முகவரிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட செல்போனைப் பயன்படுத்தும் பெண்ணைக் கண்டு பிடித்தனர். அந்த பெண்ணிடம் தீவிரமாக விசாரித்தபோது, எனக்கும் குழந்தைத் திருட்டுக்கும் சம்பந்த மில்லை என்று மறுத்துள்ளார். அவரிடம், குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி. கேமரா புகைப்படத்தைக் காட்டியபோது, அந்த பெண்ணின் சேலைக் கலரைப் பார்த்தவுடன், 'இது என் தோழி விஜி' என்று அடையாளம் காட்டியுள்ளார். அப்போதுதான் அக்யூஸ்ட்டை நெருங்கிவிட்டோம் என்ற நிம்மதி போலீசாருக்கு வந்தது. அந்த விஜி என்ற பெண் குறித்து மேலும் விசாரிக்கையில், அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னாங்க என்று கூறியவர், விஜியுடன் தான் எடுத் துக்கொண்ட புகைப்படங்களைக் காட்டியுள்ளார்.
அந்த விஜி தற்போது பாலமுருகன் என்பவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. எனவே, பட்டுக்கோட்டை போலீசாருடன் தஞ்சை போலீசாரும் இணைந்து, பாலமுருகன் வீட்டில், கடத்திவந்த குழந்தையுடன் பதுங்கியிருந்த விஜி மற்றும் கடத்தப்பட்ட குழந்தையையும் கண்டுபிடித்தனர். கட்டைப்பையில் வைத்துக் கடத்தப்பட்டதாலும், சரியான உணவு அளிக்கப்படாததாலும் சோர்வாக இருந்த குழந்தையை, உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவப் பரிசோதனைகள் செய்தபின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். கடத்தல்காரி விஜியை கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் விஜி, "எனக்கு 3-வது புருசன் பாலமுருகன். (அவருக்கு நான் 2-வது பொண்டாட்டி) பாலமுருகனுக்கு குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டேன். ஆனால் கர்ப்பமாகல. அதனால அவரோட சொத்துகள் வேறு யாருக்காவது போயிடுமோ என்ற கவலை எனக்கு. அதனால, கடந்த 10 மாதமாக கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில் துணியைக் கட்டி நாடகமாடினேன். போனவாரம் பிரசவத்திற்காக தஞ்சாவூர் போறதா சொல்லிட்டு இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு போனேன். அங்கே, யார் ஆதரவும் இல்லாமல் ராஜலட்சுமி தனியாக பிரசவமாகித் தவிப்பதைப் பார்த்து, நட்போட பழகி, கூட இருந்து கவனித்துக்கொண்டேன்.
வெள்ளிக்கிழமை, ராஜலட்சுமி பாத்ரூம் போன நேரத்தில் குழந்தையை கட்டைப்பையில் வைத்து தூக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏறி, புது பஸ் ஸ்டாண்ட் போய் பட்டுக்கோட்டை வந்துட்டேன். எனக்கு குழந்தை பிறந்திருக்குன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். மெடிக்கல்ல பேம்பர்ஸ் வாங்கும்போது போன் நம்பர் கேட்டாங்க. என் நம்பரக் கொடுத்தா மாட்டிக்குவோம்னு என் தோழி நம்பரைக் கொடுத்துட்டு வந்தேன்" என்று கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தையை குணசேகரன்- ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தபோது, போலீசாரின் காலில் விழுந்து நன்றி கூறியுள்ளனர். குழந்தை திருடு போய் 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டதால் போலீசாரைப் பொதுமக்கள் பாராட்டுகின்றனர். இந்த இராசா மிரசுதார் அரசு மருத்துவமனைக்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருச்சி என சுமார் 10 மாவட்ட மக்களும், பிரசவத்துக்கும் வைத்தியத்துக்கும் வருவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிக்கடி, குழந்தை கடத்தல், திருட்டு நடப்பது வழக்கமாக இருந்தது. 15 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை குழந்தை விற்பனை செய்ததை நக்கீரன் ஆக்சன் ரிப்போர்ட்டாகக்கூட செய்தி வெளியிட்டது. சில வருடங்களாகக் குழந்தை கடத்தல் குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கி உள்ளது. தற்போது சி.சி.டிவி. கேமரா மட்டும் இங்கே இல்லையென்றால் இந்த குழந்தையையும் மீட்டிருக்க முடியாது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.