மிழர் பண்பாட்டுச் செறிவின் அடையாளம் திருவள்ளுவர். உலக வாழ்வியலின் சமகாலத்துக்கும், எதிர்காலத்துக்குமான மாண்புகளை எழுதிச் சென்றவர் அவர். அத்தகையவரின் புகழ்பாடும் விதமாக, "வள்ளுவர் எங்கள் அடையாளம். திருக்குறள் எங்கள் அறிவாழம்'’என்ற முழக்கத்தோடு திருவள்ளுவர் திருவிழா நடந்தது.

tt

வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி, சென்னை அடையாறில் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், பிப்ரவரி 15-ந் தேதி இந்த விழாவை நடத்தியது. மூன்றுவயது குழந்தை மழலைமொழி மாறாமலும், பிழையின்றியும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா தொடங்கியது.

திரைப்பட பின்னணிப் பாடகி மகதி, கர்நாடக இசையில் குறள்களைப் பாடி குறள் பண்ணிசை நிகழ்த்தினார். தொழில்நுட்பத் துறைக்கு சென்றிருந் தாலும், தமிழ்ப் பற்று குறையாத இளம் பெண் கவிஞர்கள் வள்ளுவனைப் போற்றி குறள் கவிதைகளை அரங்கேற்றினர். தொடர்ந்து, தமிழ் மறையான திருக்குறளை, தமிழ்க் கலையான பறை இசைத்துப் பாடி நிமிர்வு கலைக்குழு வினர் அட்டகாசப்படுத்தினர். இந்த நிகழ்வை அடுத்து, தொழில்நுட்பமும், மேற்கத்திய ஆதிக்கமும் நிறைந்த உலகில் சமகால ttவாழ்வியலோடு திருக்குறள் பொருந்திப் போவதை விளக்கும் குறள் வீதி நாடகம் நடந்தது.

Advertisment

குறள் உரை ஆற்றவந்த பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, ""மறை என்பது, சொல்லப்படுகிற பொருளுக்குள் அடங்குவது அல்ல. காலத்துக்கு ஏற்ற வகையில், நாம் துயருகிற பொழுதும், நமக்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய விஷயத்திற்குத்தான் மறை என்று பெயர். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு உறுதுணையாக இருக்கும் மறையான திருக்குறள் தான் நம் சொத்து. இன்றைக்கு இந்த வள்ளுவனை எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண ஆடை அணிவிக்கிறார்கள். நெற்றியில் குறியீடுகளையும், கழுத்திலும், இடையிலும் அடையாளங்களையும் புகுத்துகிறார்கள். அவர்கள் மீது எனக்குக் கோபம் வரவில்லை. அப்படியாவது வள்ளுவனை வாசிக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் வருகிறது. வேணுகோபால் சர்மா வரைந்த வள்ளுவனில் எந்த அடையாளமும் தென்படவில்லை. அந்த ஓவியத்தையே கலைஞர் நாட்டுடைமை ஆக்கினார். எல்லா அடையாளங் களையும் உள்ளடக்கிய அந்த அடையாளம்தான் தமிழ் அடையாளம் என்பதனை உலகுக்கு சொல்லக் கூடிய வடிவம் வள்ளுவனுடையது'' என்று பேசினார்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான தமிழச்சி தங்கப்பாண்டியன், ""திருக்குறளை எத்தனையோ பெருந்தகைகள், அறிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். திருக்குறள் தமிழர்களுக்கான நன்னெறி என்கிறார் வ.உ.சி. திருக்குறளை நன்றாக அறிந்தவர்கள் உள்ளுவரோ மனுநீதி என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார். திருக்குறளை பிற்பட்ட மக்களின் குரு என்கிறார் ஜி.யு.போப். தன்னோடு தொடர்ந்து கடிதங்களின் வழியே நட்பு பாராட்டிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயிடம், "உங்க ளுடைய கதைகளின் மையத்தை எதிலிருந்து எடுத்துக்கொள்கிறீர்கள்' என்று காந்தியடிகள் கேட்டபோது, திருக்குறளில் இருந்து எடுத்ததாக சொல்கிறார். ஆரியத்திற்கும் மனு சாஸ்திரத்திற்கும், வர்ணாஸ்திரத்திற்கும் எதிரானது திராவிடத்தின் அடையாளமான திருக்குறள். இனத்தின் மனதைச் சொன்னது மொழி. அந்த அமுதமான தமிழ் மொழியிலே, திராவிட சமுதாய, பண் பாட்டு, வரலாற்று வாழ்வியலை உலகப் பொதுமறை என்று உலகிற்குத் தந்த திராவிடத்தின் முப்பாட்டன் திருவள்ளுவர்'' என்றார் பெருமையுடன்.

இறுதியாக விழா வில் கலந்துகொண்ட வர்களுக்கு பரிசுகள் வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து, ""திருக் குறளை விட்டுவிடாமல் தமிழ்ச் சமூகம் நூற் றாண்டுகள் தோறும் ஏன் கொண்டாடிக் கொண்டே வருகிறது. திருக்குறளைப் போல இத்தனை உரையெழுதப்பட்ட நூல், தமிழில் வேறெதும் இல்லை. தருமர், மணக்குடவரில் தொடங்கி, கலைஞர், நாமக்கல் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன், மு.வரதராசனார் என எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது, என் கடமை யாக, தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நான் செய்கிற காணிக்கையாக, திருக்குறளுக்கு நான் என் உரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கு கல்வி நிறைய தேவைப்படுகிறது. திருவள்ளுவருக்கு உரையெழுதக் கூடிய கல்வி எனக்கு போதாது என்பதை, சில குறள்களுக்கு உரை எழுதுகிறபோது உணர்கிறேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூலச்சூத்திரத்தைச் சொன்ன திருவள்ளுவர், காலச்சூத்திரத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருக்குறளை இங்கு உயர்த்திப் பிடித்திருக்கிறோம். இது ஒருநாள், இருநாள் பணியல்ல. எங்கள் வாழ்நாள் பணி எனக் கொள்வோம்'' என்று தன் உரையில் வள்ளுவனுக்குப் பெருமைசேர்த்தார்.

Advertisment

எந்த அடையாளத்திற்குள்ளும் திணித்துவிட முடியாதவர் திருவள்ளுவர். அவருக்கு மதச்சாயம் பூசி தனிமைப்படுத்துகிறவர்களுக்கு மத்தியில், புகழ்மாலை சூடி, பூவுலகிற்கு பொதுவானவர் என்ற உண்மையைப் பேசியிருக்கிறது வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி.

-ச.ப.மதிவாணன்