""அவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து எப்படி தப்பிச்சீங்க...''
#மனோகரன்
எப்பவும் நான் வெள்ளனம் நடைப்பயிற்சிக்கு ஆபீஸ் பக்கத்துல உள்ள ஒரு இடத்துக்குப் போவேன். அங்க எனக்கு முன்னாடியே வந்து நடைப்பயிற்சி பண்ணிக்கிட்டிருக்கிற அண்ணன்கள்ல ஒருத்தரு, அவர ரொம்பநாளா நான் பாத்திருக்கேன். ஆனா இன்னிக்குத்தான் அவரோட பேச சந்தர்ப்பம் கிடைச்சது. அவர் பேரு மனோகரன். அவரும் பேசிட்டுப் போனோம்...
""நான் ரொம்ப வாட்ச்பண்ணுனேன் ஸôர்... 2012ல உங்க ஆபீஸ அடிச்சு நொறுக்குறப்ப நான் அங்கதான் இருந்தேன்''ன்னாரு.
""என்ன சார் இப்படிச் சொல்றீங்க? அடிக்க வந்த அ.தி.மு.க. கும்பல்ல நீங்களும் இருந்தீங்களா?''ன்னு கேட்டேன்.
""ஐயய்யோ இல்ல சார்... என்ன சார் நீங்க, அப்படியெல்லாம் இல்ல... எந்தக் கட்சிக்காரனும் இல்ல. நான் ஒரு பிசினஸ்மேன். ஜுஸ் போடுற எசன்ஸ் சப்ளை பண்ணிக்கிட்டிருந்தேன். அப்புறமா ஐ.டி.சி. புராடக்ட் எடுத்து பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். அந்த டைம்ல ஒங்க ஆபீஸ் இருக்கிற ராயப்பேட்ட ஏரியாவுக்கெல்லாம் வருவேன். ஆனா அன்னிக்குத் தேதியில எனக்கு அங்க வரவேண்டிய வேலை இல்ல. ஆனா நக்கீரன் ஆபீஸ இன்னைக்கோட க்ளோஸ்பண்ணப் போறாங்க... முடிக்கப் போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சது. ஆயிரக்கணக்கான ஆளுங்க வந்து ஆபீச சூழ்ந்து நின்னு எரிக்கிறாங்க... அடிக்கிறாங்க... ஆபீசுக்குள்ள அத்துமீறி நுழையப் போறாங்கன்னு ப்ரெண்ட் சர்க்கிள்ல இருந்து எனக்குச் சொன்னாங்க. எனக்கு எப்பவுமே ஒரு க்யூரியாஸிட்டி உண்டு, அதாவது நான் எந்தக் கூட்டத்துலயும், எந்தப் போராட்டத்துலயும் கலந்துக்கல. ஆனா என்ன நடக்குதுங்கிறத பார்க்கிற ஆர்வம் உண்டு. அதனால விஷயம் கேள்விப்பட்டவுடனே அங்க வந்துட்டேன்''னாரு.
""என்ன சார் இது... வினோதமா இருக்கேன்னேன். சரி... எத்தன மணிக்கு வந்தீங்க?''ன்னு கேட்டேன்.
""ஒரு 4:30 மணி இருக்கும்''னு சொன்னாரு.
""சரி... என்ன நடந்தது?''ன்னு கேட்டேன்.
""ஸôர்... ஒரு ஆள்கூட அந்தப் பக்கம் வரமுடியாத அளவுக்கு தெரு முழுக்கவும் கட்சிக்காரங்க கூட்டம். ஆம்பளைகளும், பொம்பளைகளுமா கையில கல்லு, பெரிய பெரிய கம்புகள வச்சுக்கிட்டு ஆபீஸ் முன்னாடி கும்பல், கும்பலா நின்னு அசிங்கமான வார்த்தையால காது கூசுற அளவுக்கு ரொம்ப ரொம்ப மோசமா பேசுனாங்க. உங்களயும் தனிப்பட்ட முறையில ரொம்பவும் கீழ்த்தரமா திட்டித் தீர்த்தாங்க. அதுமட்டுமில்லாம பாடை கட்டுறது இருக்கில்ல... அதுவும் சொல்லக்கூடாதுதான், அதையே எத்தனையோ பேரு கட்டி, கட்டி எடுத்துட்டு வர்றான். சாரை சாரையா கொடும்பாவி கட்டி உங்க முகத்த வரைஞ்சு தூக்கட்டு வர்றானுக. அவங்க யாரையும் போலீஸ்காரங்க தடுக்கவே இல்ல. எல்லாத்தையும் போகவிட்டு வேடிக்கைதான் பாத்துக்கிட்டிருந்தாங்க. எப்படி சார் அவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சீங்க? என்ன மாதிரி வேடிக்கை பார்க்க வந்தவங்க, இன்னிக்கு தேதியோட நக்கீரனோட சகாப்தமே முடிஞ்சுது, அவ்வளவுதான் மண்ணோட மண்ணா போகப்போகுதுன்னும், பாவம் எத்தனையோ போராட்டத்த எதிர்கொண்டவருக்கா இந்தக் கதின்னு ஆதங்கத்தோட என் காதுபட எல்லாரும் பேசிக்கிட்டாங்க. சத்தியமா நீங்க பொழச்சு வருவீங்கன்னு நெனைக்கல. அன்னிக்கு நடந்த பயங்கரத்துல இருந்து உசுரோட வந்தது மறுஜென்மம்தான். இப்பவும் நான் நம்பல. உங்கள இங்க ரொம்பநாளா பார்க்குறேன். முதல்நாள் உங்களப் பார்க்கிறப்ப ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு. எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சு வெளிய வந்திருக்கீங்க''ன்னு அங்கலாய்ப்போட சொன்னவரு, எனக்கு வாழ்த்தும் சொன்னாரு.
"போர்க்களம்'... எதுக்காக இந்தப் போர்க்களம்ங்கிறது, அதுதான். எவ்வளவு பெரிய ஜனநாயக நாடுங்கிறான். மோடி வந்தபிறகு அது சர்வாதிகாரத்த நோக்கிப் போய்க்கிட்டிருக்கு. ஜெயல-தா இருந்தப்ப, அதுவும் சர்வாதியாரியாத்தான் இருந்துச்சு. நாமதான் ஜனநாயகம், ஜனநாயக நாடுன்னு சொல்-க்கிறோம். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. "ஆளச்சொல்லு, ரூல்ஸ சொல்றேன்'கிற மாதிரிதான் போய்க்கிட்டிருக்கு.
ஏற்கனவே நான் சொன்னேன்ல, "ரிட்டையர்டு ஆயிட்ட ஒரு போலீஸ்காரர் தேவாரம், தி.மு.க. ஆட்சிக்கு எதிரா இருந்தவரு எழுதுன புத்தகத்த... ஆட்சி மாறி, புது ஆட்சி வந்தும்... இந்த ஆட்சியிலயும் அந்தப் புத்தகத்த அரசாங்கமே வித்துக்கிட்டிருக்காங்க'ன்னு. நம்மளும் நாலஞ்சு தடவ... எத்தனையோ முறை சொல்-ட்டோம். ஆனா அந்தப் புத்தகம் இன்னும் விக்குதே! அதுல வேற அது எவ்வளவு வித்துருக்குன்னு தேவாரத்துக்கு டெய்- கணக்கு குடுக்கணுமாம். அப்போ... இந்த அரசாங்கத்தோட போலீசு, ரிட்டையர்டான ஒரு போலீசுக்கு வேலை பார்த்துக்கிட்டிருக்காங்கள்ல. இத என்னன்னு சொல்றது? வால்டர்ங்கறவரு, ஒரு சர்வாதிகார அம்மாவுக்கு தளபதியா இருந்தவரு. இப்பவும் அவரு பேச்சுதான எடுபடுது.
இன்னிக்கு காலைல மனோகரன் சார் என்கிட்ட சொன்னது... அப்படியே சுடச் சுட மனசுக்குள்ளயே இருந்தது. ஏன்னா... "எவ்வளவு பெரிய ஆபத்து, எப்படிப்பட்ட ஆபத்துல இருந்தெல்லாம் நாம தப்பிச்சுருக்கோம்'ங்கிறத உங்கள்ட்ட பகிர்ந்துக்கணும்னுதான் இத பதிவு பண்ணுனேன்.
சரி... போன இதழ்ல பேசுன சுப்பன் மனைவி மணி தொடர்ந்து பேசும்போது...
""உன் கணவரோட சடலத்த இங்கிருந்து எடுத்துட்டுப் போ''ன்னு போலீஸ்காரங்க சொன்னாங்கன்னு அழுத சுப்பன் மனைவி மணியால தொடர்ந்து பேசச்கூட முடியல...!
ஸ்ரீஜாவரயா மனைவி எர்ரம்மா
""என் கண்ணு ரெண்டையும் துணியால கட்டி, ரெண்டு காலுலயும் சங்கி-யப் போட்டுக் கட்டி லத்தியால அடிச்சாங்க. அப்படி அடிச்சதுல லத்தி என் கண்ணுல பட்டு, வலது கண் பார்வைய இழந்துட்டேன். என் கண்ண கட்டுனதோட இல்லாம... கைய பின்பக்கமா மடக்கி, பின்முதுகுல இரும்புச் செயினால கட்டுனாங்க. அதோட விடாம... ஒயர்ல இணைச்சிருந்த கிளிப்ப என் காதுல வச்சு மின்சாரத்தப் பாய்ச்சினாங்க. என்ன நிர்வாணப்படுத்தி... பின்பக்க கழுத்து, மார்பகம், பெண்குறி... எல்லாத்துலயும் மின்சாரத்த பாய்ச்சினாங்க...''
சித்தம்மா என்ற சித்தி
""எம்.எம். மலையில உள்ள முகாமுக்கு என்ன அழைச்சுட்டுப் போனாங்க. சாயங்காலம் 5.00 மணி இருக்கும். முகாமுக்குள்ள நுழைஞ்சவுடன என் கண்ண கட்டிட்டாங்க. ரெண்டு காலையும் கையையும் ஒரே இரும்புச் சங்கி-யாலே ஒரு ஜன்னல்ல கட்டி அப்படியே தரையில் படுக்கவச்சு என் பின்பக்கத்துல உதைச்சாங்க. "நீ, வீரப்பனுக்கு உணவுப் பொருள் குடுக்கிறியா... இல்-யா?'ன்னு கேட்டாங்க. ரத்தம் அதிகமாக வழிஞ்சதுனால அந்த நேரத்துல என்னால ஒண்ணுமே சொல்ல முடியல. ரத்தம் வடியுறதப் பாத்தும் அவங்க அத கண்டுக்கவே இல்ல.
ஒருநாள் ராத்திரி இரண்டு மணி இருக்கும். ஒரு அதிகாரி வந்து, என்கிட்ட "உங்க சங்கத்துக்கும் வீரப்பனுக்கும் என்ன தொடர்பு? நீ ஏன் வீரப்பனுக்கு உணவுப் பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்த'ன்னு கேட்டாரு.
"எனக்கு ஒண்ணும் தெரியாது, நான் எதுவுமே செய்யல'ன்னு சொன்னேன். ஆனா அவரு, ரெண்டு போலீஸ் ஏட்டுகள அழைச்சு என்னை இறுக்கமாகப் பிடிச்சுக்கச் சொல்-, மின்சார வயர்ல இணைச்ச கிளிப்ப என் காது, மார்புக் காம்புன்னு எல்லா இடத்துலயும் கரண்ட் ஷாக் வச்சாங்க. என்னால அந்த வ-ய தாங்கவே முடியல. என்ன எந்தெந்தப் போலீஸ்காரங்க கற்பழிச்சாங்கன்னு அவங்கள என்னால அடையாளம் காட்ட முடியும்...''
சிவன்னா மனைவி ரத்தினி என்கிற ரத்னா
""நாலு வருசத்துக்கு முன்னால என் அப்பா, அம்மா ரெண்டுபேரையும் போலீஸ்காரங்க கைது பண்ணிட்டாங்க. ஒருநாள் அதிகாலை ரெண்டு மணி இருக்கும்... நான் வீட்டுல தனியா இருந்தேன். ரெண்டு ஜீப்ல வந்த போலீஸ், என்னை எம்.எம்.ஹில்ஸ் முகாமுக்கு அழைச்சுட்டுப் போனாங்க. ஏற்கனவே அங்க இருந்த ஒரு போலீஸ் ஆபீஸர் என் உடம்புல மின்சாரத்த பாய்ச்சினதுனால நான் உடனே மயக்கமாயிட்டேன். சுயநினைவு வந்து முழிச்சப்ப பக்கத்து ரூமுக்கு மாத்தியிருந்தது தெரிஞ்சது. குடிக்கத் தண்ணி கேட்டேன். தண்ணீ தர மறுத்து, சிறுநீர குடிக்கக் குடுத்தாங்க. பிறகு என் நிலையப் பார்த்து கொஞ்சமா தண்ணி குடுத்தாங்க. அடுத்தநாள் பத்துபேருக்கு மேல என்னக் கற்பழிச்சாங்க. பதினைந்து நாளு என்னை காவல்ல வச்சிருந்து ஒவ்வொரு நாளும் கரண்ட் ஷாக் வச்சு சித்ரவத பண்ணுனாங்க. கொஞ்சநாளு கழிச்சு அந்த போலீஸ் ஆபீசரு, என்ன மலைமகாதேஸ்வராவுக்கு அழைச்சுட்டுப் போய் சிவன்னாவுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாரு.''
சித்தன் மனைவி லெட்சுமி
""என்ன தொந்தரவு செய்யாதீங்க''ன்னு கெஞ்சுனேன்...
(புழுதி பறக்கும்)