செவ்வாய்க் கிழமையன்று, அதிகாலை தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய நிலையில் மூன்று நபர்கள் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் முத்தவல்லி (அறங் காவலர்) ஜாகீர் உசேன் பிஜிலி. வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி யதாலேயே கொலையுண்டார். இதற்கு பின்னணியிலிருந்தது காக்கி அதிகாரிகளே என்கின்றது அதிர்ச்சிகர உண்மை.

நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி. காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், சென்னையில் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்துவந்துள்ளார். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு காவல்துறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) இருந்துவந்திருக்கிறார்.

ss

ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்குச் சென்றார். தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள தனது வீட்டுக்கு, தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்துவந்த நிலையில், அவரைப் பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்டமுயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சிசெய்துள்ளார். ஆனால், அதற்குள் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கிய அந்த கும்பல், ஜாகீர் உசேனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.

"என் தந்தைமீது குற்றமில்லை என ஆதாரங்களை போலீசாரிடம் காட்டியும், தந்தை மீது வன்கொடுமை வழக்குபோட்டனர். ஆனால், அந்த வழக்கில் உண்மையில்லை என நிரூபித்து வழக்கிலிருந்து என் தந்தை வெளியே வந்தார். எனவே, உண்மையில் தவறுசெய்தவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் என் தந்தையை அவர்கள் கொன்றுவிட்டனர். என் தந்தை பேசிய வீடியோவை ஏற்கனவே காவல்துறையிடம் கொடுத்தோம். எனினும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. டவுன் காவல்நிலைய போலீசார்மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனது தந்தையிடம் போலீசார் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார் கொலையுண்டவரின் மகளான மோசினா.

Advertisment

இதேவேளையில் அனைத்துக்கட்சிகளும் தமிழக அரசை குற்றஞ்சாட்டி கண்டன அறிக்கைகளைப் பறக்கவிட்டிருந்தன.

ஜனவரி மாதத்திலேயே சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் ஜாகீர் உசேன் பிஜிலி, "கிருஷ்ணமூர்த்தி என்பவர் தௌபிக் எனத் தனது பெயரை மாற்றி இஸ்லாமிய மதத்தில் சேர்ந்துள்ளார். இரண்டாவதாக இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில், தனது மனைவி மூலமாக வக்பு வாரியத்தின் சொத்தான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றுவருகிறார். அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் என்மீதும், எனது மனைவிமீதும் வன்கொடுமை வழக்கு கொடுத்துள்ளார். அது விசாரணையில் உள்ளது. பிரச்சனைக்குரிய நிலத்தின் அருகிலுள்ள 2.5 சென்ட் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் வருமானம் ஈட்டும் நடவடிக்கையாக ஒரு தற்காலிகக் கொட்டகை அமைக்க முயன்றேன். அப்போது பகிரங்கமாக கிருஷ்ணமூர்த்தி (எ) தௌபிக் கொலைமிரட்டல் விடுத்தார். எனது உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எப்படியும் என்னை கொலைசெய்துவிடுவார்கள். கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தேன். தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர்தான் எதிர்த் தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். கொலை மிரட்டல் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் ஆதாரமாகக் கொடுக்கப் பட்டும் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றிருந்தார்.

ss

Advertisment

நெல்லை டவுன் ஜாகிர்உசேன் பிஜிலி கொலையில் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் தாங்கள்தான் கொலை செய்ததாக சரண்டராகினர்.

"இந்த இட விவகாரத்தில் முதலில் நீதிமன்றத்தில் போராடி வெற்றிபெற்றிருக்கிறார் ஜாகிர்உசேன். இந்த நிலையில் இவர் மீது வன்கொடுமை வழக்கு போடப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியராக மாறிவிட்டார். வன்கொடுமை வழக்கு செல்லாது என அதற்கும் நீதிமன்றத் தில் தடை வாங்கிவிட்டார். ‘"உன் வீட்டையும், மொத்த இடத்தையும் காப்பாத்தணும்னா வேற வழியில்ல, முடிச்சுவிட்டுடு'’ என இவருக்கு ஆதரவாக இருந்த ஏ.சி. செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆலோசனை கொடுத்துள்ளதாகத் தெரிகின்றது. அதன்பிறகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளும் சிக்குவார்கள்" என்கின்றார் மாநகர நுண்ணறிவு அதிகாரி ஒருவர்.

முத்தவல்லி ஜாகிர்உசேன் பிஜிலி படுகொலையில் சூத்ரதாரியாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் நெல்லை டவுன் (தற்பொழுது கோவை மாநகர நுண்ணறிவு ஏ.சி.) உதவி ஆணையர் செந்தில்குமார் ஏற்கனவே, இரவு ரோந்தின்போது ஜங்ஷன் உடையார்பட்டி பகுதியி லுள்ள தியேட்டருக்கு சென்று புஷ்பா-2 படம் பார்த்து மெமோ வாங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ss

சட்டமன்றக் கூட்டத்தொட ரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனி சாமி, "தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங் களுக்கு முன்பே திருநெல்வேலி மாநகர் காவல் ஆணையர், டவுன் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய் வாளர் ஆகியோரிடம் புகாரளித்தும், முறையாக காவல்துறையினர் விசா ரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஜாகிர் உசேன் யாரை குற்றம்சாட்டி புகாரளித்தாரோ அவரை அழைத்து காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்ததாகத் தெரியவருகிறது. காவல்துறையினர் ஜாகிர் உசேன் புகார் அளித்தபோதே முறையாக விசாரணை நடத்தாத காரணத்தினால் இப்படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது'' என குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, இந்த கருத்தினை காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் ஆதரித்தன.

ssநெல்லை மாநகரில் நடைபெற்ற கொலைவழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது தௌபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியைப் பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையில், நெல்லை மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெருமாள்புரம் காவல் நிலையம், ரெட்டியாப்பட்டி பகுதி யில் பதுங்கியிருந்த குற்றவாளியை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்ற பொழுது, தலை மைக் காவலர் ஆனந்தை அரி வாளால் வெட்டி யதால், கொலைக் குற்றவாளி முகமது தௌபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை கைது செய்தது என அறிக்கை வாசித்தது நெல்லை மாநகர காவல்துறை. இதே வேளையில், கொலைக்குப் பின்னணியிலிருந்து செயல்பட்ட நெல்லை டவுன் காவல் நிலைய ஆய்வாளர் கோபால கிருஷ்ணனையும், அப்போதைய உதவி ஆணையரான செந்தில்குமாரையும் சஸ்பெண்ட் செய்து தற்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக காவல்துறை.

இவ்விவகாரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும், தமிழக அரசின் செயல்பாடு மீது அதிருப்தியில் இருப்பது தி.மு.க. கூட்டணியை அசைத்துப் பார்ப்பதாக உள்ளது.

படங்கள்: விவேக்