கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் செல்போன்களை தேவைப்படுபவர்கள் மட்டுமே வாங்கினோம்... பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தினோம். தொலைபேசியிலிருந்து செல்பேசிக்கு அனைவரையும் மாற்றுவதற்காக ஃப்ரீ இன்கம், இரவு நேரத்தில் மட்டும் ஃப்ரீ அவுட்கோயிங் கால், மலிவு விலையில் செல்போன்கள் எனப் பல்வேறு விதமாக நம்மை செல்போன்களுக்கு பழக்கப்படுத்தினார்கள். செல்போன் வைத்திருப்பது நம்முடைய கவுரவம் என்பதாக தூண்டில்போட்டு வாங்கவைத்தார்கள்.
முதன்முதலில், 2008ஆம் ஆண்டில், ஹெச்.டி.சி. நிறுவனம் ஆன்ட்ராய்டு போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக சாம்சங், மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆன்ட்ராய்டு போன் விற்பனையில் தீவிரமாக இறங்கின. இன்னொருபுறம், வலுவான செல்போன் சேவைக் கட்டமைப்பைக் கொண்டுள்ள பி.எஸ்.என்.எல்., காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே வலுக்கட்டாயமாகப் பின்னுக்கு தள்ளப்பட்டு ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், ஹட்ச் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவைத்துறையில் முன்னணிக்கு வந்தன. தொடர்ந்துவந்த மோடி அரசும் இதில் ரிலையன்ஸ் ஆதரவு அரசியல் செய்ய, தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் எஞ்சி நிற்கின்றன. பி.எஸ்.என்.எல். இவர்களோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது.
நம் அனைவரின் அடை யாளத்தையும் உறுதிப் படுத்துவதாகக்கூறி 2016ஆம் ஆண்டில், அனைவரும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த வேண்டுமென்பதற்கான சட்டம் கொண்டுவரப் பட்டது. அதன்பின் ஆதார் அட்டையை அனைவரின் மொபைல் எண்களோடு இணைக்க வேண்டு மென்றார்கள். அடுத்ததாக, பணமதிப்பிழப்பின் மூலம் அனைவரையும் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளி னார்கள். தங்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள் வதற்காகவே அதுவரை வங்கிக்கே செல்லாதவர் களும்கூட வங்கிக்கணக்கு தொடங்க வேண்டிய சூழல். இன்னொருபுறம் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தினார்கள். வங்கிக்கணக்கு தொடங்கியாச்சா, இனி ஏ.டி.எம். கார்டு மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்கள். பணமதிப் பிழப்பின்போது மூடப்பட்ட ஏ.டி.எம். மையங் களில் பலவற்றை நிரந்தரமாகவே மூடினார்கள்.
அடுத்து தான் வங்கிகள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கான வழியை வகுத்துக்கொடுத்தது மோடியின் அரசு. ஆதாரை செல்போன் எண் ணோடு இணைத்தது போல, வங்கிக்கணக்கை யும் ஆதாரோடு இணைக்க வேண்டும், ரேஷன் கார்டையும் ஆதாரோடும், செல்போன் எண் ணோடும் இணைக்க வேண்டும், பான் கார்டை யும் இரண்டோடும் இணைக்க வேண்டும், கேஸ் மானியத்துக்கும் போன் நம்பர் வேண்டும், அதற்கு வேண்டும், இதற்கு வேண்டும் என்று பல்வேறு தனியார், பொதுத்துறை சேவை களோடு ஆதார் எண்ணையும், வங்கிக்கணக் கையும், செல்போன் எண்களையும் இணைத் தது. தீவிரவாதிகளைக் கண்காணிப்பதற்காக என்றும், தவறு செய்பவர்களைக் கண்காணிக்க என்றும் கூறிக்கொண்டு, பொதுமக்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் அம்பலத்தில் ஏற்றிவிட்டது ஒன்றிய அரசு! இதன் பின்விளைவாக இப்போது என்ன நடக்கிறது?
ஆதார், ரேஷன் கார்ட், வங்கிக்கணக்கு, உரிமைத்தொகை, கேஸ் கனெக்சன் என ஒவ்வொன்றுக்கும் சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் நம்பர்களோடு இணைக்க வேண்டியுள்ளது. ஆக, வீட்டிலுள்ள அனை வரும் தேவையில்லாதபட்சத்திலும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தற்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் அனைவரும் மாதாமாதம் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்காவது ரீசார்ஜ் செய்யவேண்டியிருக் கிறது. ஆக, நான்கு பேர் இருக்கும் குடும்பத்தில் செல்போன் ரீசார்ஜுக்காக மட்டுமே 1000 ரூபாயை எடுத்துவைக்க வேண்டியுள்ளது. செல்போன் சேவை நிறுவனங்களின் ஒரு மாதமென்பது 28 நாட்கள் என்பது இன்னொரு கொடுமை! ஸ்மார்ட்போன்களின் விற்பனை இதன்மூலம் அதிகரித்திருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில், 71% இந்தி யர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியுள் ளார்கள். 2023ஆம் ஆண்டில் மட்டுமே 14.60 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் விற்பனைச்சந்தையாக இந்தியா உள்ளது. அதேபோல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் பல்லாயிரம் கோடிகளைக் குவிக்கின்றன. 2023ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே 8,345.9 கோடி லாபமீ ட்டியிருக்கிறது. சில குறிப்பிட்ட ஆப்களை இன்ஸ்டால் செய்ய மொபைல்போன் வெர்சன் களை அப்டேட் செய்யும்படி கேட்கின்றன. இதற்காக புதிய மொபைல்போன்களை வாங்கும் கட்டாயம்! இன்னொருபுறம் வங்கிகள், எஸ்.எம்.எஸ்., ஏ.டி.எம். பயன்பாடு, கிரெடிட் கார்டு, மினிமம் பேலன்ஸ் என்று என்னென்ன பெயரிலெல்லாமோ அபராதம், கட்டண மென்று நம் அக்கவுன்டிலிருந்து பணத்தை பிக்பாக்கெட் அடிப்பது போல எடுப்பது தொடர்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி ஆன்லைன் மோசடியாளர்களும் அப்பாவிகளை ஏமாற்றி பணத்தை ஆட்டையைப் போடுவதும் தொடர்கிறது!
நம்மை டிஜிட்டல் இந்தியாவுக்குள் தள்ளிய ஒன்றிய அரசோ, வங்கிக்கணக்கிலுள்ள மக்களின் பணம் பிக்பாக்கெட் அடிக்கப் படுவதை தடுக்க வழிவகை செய்யாமல், கள்ள மவுனமாக ரசிக்க மட்டும் செய்கிறது!
செல்போன், தொலைத் தொடர்பு நிறு வனங்களுக்கும், வங்கிகளுக்கும் மூக்கணாங் கயிறு கட்டப்பட வேண்டுமென்பதே சாமானியனின் எதிர்பார்ப்பு!