"நக்கீரன்' என்று பேர் வைத்துவிட்டால் மட்டும் போதுமா? அரசாள்வோரின் நெற்றிக்கண்ணுக்கு அஞ்சாமல் நடைபோட எவ்வளவு சிரமங்களை அனுபவிக்க வேண்டும் என்பதையும் அனுபவத்தில் புரியவைத்தவர் நக்கீரன் கோபால். "துணிவே துணை' என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார். "இதையெல்லாம் கேட்க ஆளில்லையா' என்று டீக்கடையில் பேசுகிற ஒரு விஷயத்தை அடுத்துவரும் நக்கீரன் இதழ் வெளியே கொண்டுவந்திருக்கும். அதுதான் அண்ணனின் துணிச்சல். பாதிக்கப்படுகிற மக்களின் பக்கமே நக்கீரன் எப்போதும் நின்றிருக்கிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் கொலைபாதகச் செயலை அம்பலப்படுத்தியதையும், சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தையும் நக்கீரனைத் தவிர வேறு யாரும் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்திருக்க முடியாது என்பதை அடித்துச் சொல்ல முடியும். அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, தி.மு.க.வில் நடக்கும் தவறுகளையும் வெளிப்படுத்தும் நேர்மை நக்கீரனுக்கு உண்டு.
2019, ஆகஸ்ட் 14-16 இதழ்:…
மத்திய-மாநில அரசுகளுக்கு அஞ்சாமல் பா.ஜ.க.வின் தகிடுதத்தங்களை வெளிப்படுத்தும் வகையில் "சாதி அரவணைப்பு, ரவுடிகளுக்கு ஆதரவு, ஆபரேஷன் திராவிடா, பா.ஜ.க. பலே திட்டம்' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் செய்தி, நெஞ்சத்தில் பகீர் தீயை பற்றவைக்கிறது.
தி.மு.க.வின் உள்கட்சிப் பூசல்களை மாவலி பதில்களிலும், வேலூர் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளிலும் குத்திக் காட்டியிருப்பது தெரிகிறது. கேட்கிறார்களோ இல்லையோ சொல்ல வேண்டியது கடமை என்ற நக்கீரனின் நினைப்பு புரிகிறது.
_______________
வாசகர் கடிதங்கள்!
சாய்பாபாவுக்கு எதிர்ப்பு!
இடத்தைக் கொடுத்தார் விநாயகர். மடத்தையே ஆக்கிரமித்திருக்கிறார் சத்துவாச்சேரி சாய்பாபா. "இந்த விவகாரமே எங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது' என மவுண்ட் வியு குடியிருப்புவாசி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை அந்நாட்களில் அங்குள்ள மும்மதத்தினரும் வீட்டுச்சிறையில் இருந்திருப்பார்களோ!
-எம்.எஸ்.பிரதாப், சேலம்.
துயரத்திலும் பிரச்சாரம்!
கேரள மழை வேகம் அம்மக்களை மரணக்குழியில் புதைத்திருக்கிறது. இத்துயரத்தில், "நிவாரணம் வழங்காதே' என திமிர்ப் பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ். இச்செயல் கண்டனத்துக்குரியது.
-கே.திருவேங்கடம், திருமழாப்பாடி.