நான் திருச்சி சேவா சங்கம் மகளிர் பள்ளியில் +1 படிக்கும்போது, செய்முறை தேர்வுக்கு தமிழக அரசியலில் முக்கியமான நிகழ்வுகளை தொகுக்கவேண்டும் என்றும்; அது "நக்கீரன்' இதழில்தான் இருக்கும் என்றும் நக்கீரன் இதழை அறிமுகப்படுத்தினார்கள் என் பள்ளி ஆசிரியர்கள். அதன் பிறகு நக்கீரனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்து தற்போதுவரை படித்துக்கொண்டு வருகிறேன்.
உண்மைச் செய்திகளுக்காக "நக்கீரன்' இதழ் நடத்தும் நீண்டநெடிய போராட்டத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஒரு பாலபாடம். எதிர்கால தலைமுறையினருக்கு பெரிய ஆவணம்.
2020, ஜன. 04-07 இதழ்:
அட்டைப்படமே தமிழக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதை யொட்டிய "ஆளுக்கு ஒரு நீதி' கட்டுரைத் தொகுப்பு மிகஅருமை.
"இந்திராவை பிரதிபலிக்கும் பிரியங்கா' செய்தி, உத்திரப்பிரதேச அரசியல் நிஜ நிலவரம், களத்தில் இருக்கும் நெருக்கடியை வெளிப்படுத் தும் நல்ல ஆய்வுக் கட்டுரையாக வந்திருக்கிறது.
"மாணவிகள் எதிர்காலத்தைப் பாழாக்கியது யார்?' என்கிற தலைப்பில் மாணவிகளின் குடிப்பழக்கத்தை வீடியோவாக நீங்கள் வெளியிட்டதைப் படிக்கும்போது மனசே வலிக்கிறது.
மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒன் றான ஆவின் பாலில் இவ்வளவு கோடிகளை சம்பாதிக்க முடியுமா? படிக்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது.
கோலம் போட்டால் பாகிஸ்தான் தீவிரவாதியா?, தமிழ் இலக்கியத்தில் ஊடுருவல் பா.ஜ.க. வின் அடுத்த அஸ்திரம் ஆகிய செய்திகள் தமிழக மக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு மூலம் நமக்கு கொடுக்கும் நெருக்கடியை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
_____________
வாசகர் கடிதங்கள்!
அஞ்சலகப் போராட்டம்!
அஞ்சல்துறை கட்டுரை, தாத்தாவின் கைத்தடியைப் பிடித்துச் செல்லும் பேரனைப் போல நம்மை அழைத்துச் சென்று... பழைய காலத்துக்குள் கொஞ்சநேரம் உறைய வைக்கிறது. இதில், "இந்தியா போஸ்ட் பேமண்ட்' திட்டத்தின் வாடிக்கையாளர்களை முதலீடாக்கி ரிசர்வ் வங்கியை மத்திய அரசு ஏமாற்றுவது கண்டனத்திற்குரியது. இதுகுறித்த அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிறுசேமிப்பு பயனாளிகளும் கலந்துகொண்டு எதிர்ப்பை பதிவிட வேண்டும்.
-ஆர்.கார்மேகம், கடலூர்.
படிக்காத ஆதியோகி!
"குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாணவர்கள் படிக்காமல் போராடுவது கெட்ட செயல்' என்கிறார் ஜக்கி. இதைப் படிக்காத ஜக்கிக்கு மட்டும் அது நல்ல சட்டமாம். என்னங்க இது, எல்லாம் தெரிந்த ஆதியோகிக்கு வீடியோவில் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கலாமானு தோணாமல் போனது ஏன்?
-எம்.எஸ்.சிவச்சந்திரன், கோயமுத்தூர்.