டந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய நிலையிலும், அங்கே தி.மு.க.வினர் மத்தியிலேயே பெரும் புகைச்சலும் சலசலப்பும் கிளம்பி இருக்கிறது.

பண்ருட்டி நகராட்சிக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், அங்குள்ள 34 வார்டுகளில் தி.மு.க. 17-ஐயும், அதன் கூட்டணிக்கட்சிகளான வி.சி.க 1, த.வா.க.3, ம.தி.மு.க. 1, மு.லீக். 1, த.மு.மு.க.1 என்ற வகையிலும் வெற்றிவாகையைச் சூடின. அதேபோல் அங்கே அ.தி.மு.க 7 வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டிலும் வெற்றி பெற்றன.

cc

Advertisment

தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து மொத்தம் 24 இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்த நிலையில் தி.மு.க. தலைமை, நகர மன்ற சேர்மன் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி பண்ருட்டி இரண்டாவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர் சிவாவை சேர்மனாக தேர்வு செய்யுமாறு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் இதை ஏற்காத தி.மு.க. நகரச்செயலாளர் ராஜேந்திரன், சேர்மன் நாற்காலியில் தான் அமர்வதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்தார்.

பண்ருட்டி தேர்தல் அதிகாரியும் ஆணை யாளருமான மகேஸ்வரி முன்னிலையில் சேர்மன் தேர்தல் நடைபெற்றபோது, தி.மு.க. சார்பில் சிவா நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, இவரை எதிர்த்து தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரனும் மனு தாக்கல் செய்து உடன்பிறப்புக்களையே அதிரவைத்தார். அந்தத் தேர்தலில் 17 வாக்குகள் பெற்று ராஜேந்திரன் சேர்மனாக வெற்றி பெற்றுவிட்டார். சிவாவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன.

ஒரு ஓட்டு அதிகம் பெற்ற ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக ஆணையர் மகேஸ்வரி சான்றிதழ் வழங்கினார். தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 24 பேரில் 16 வாக்குகளை சிவா பெற்றுள்ளார். மீதி 8 தி.மு.க வாக்குகள் மட்டுமே ராஜேந்திரனுக்குக் கிடைத்திருகிறது. அப்படி இருந்தும், அ.தி.மு.க தரப்பின் வாக்குகளையும், சுயேச்சைகளின் வாக்குகளையும் பெற்று தி.மு.க. நகரச் செய லாளர் ராஜேந்திரன் 17 வாக்குகளைப் பெற்றிருப்பது சர்ச்சையை எழுப்பியது. இந்த களேபரத்தால், அன்று நடக்க இருந்த நகராட்சித் துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

cc

Advertisment

இந்த நிலையில் ராஜேந்திரன் வெற்றி பெற்றது தவறு என்றும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சிவா தலைமையில் அவர் ஆதரவுக் கவுன்சிலர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

இது குறித்து சிவா நம்மிடம், "உட்கட்சி ஜனநாயகம் எங்கள் கட்சியில் உள்ளது. மேலும் தலைவர் தளபதி கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதுபோல் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவி விலகி உள்ளனர். ஆனால் இங்கே எங்கள் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் போன்றவர்கள் கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் பதவி விலக மறுத்து அடம்பிடித்து வருகிறார்கள். தலைமையால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும். இது தொடர்பாக கட்சித் தலைவர் தளபதி அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்''’என்றார் அழுத்தமாக.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி நகர மன்றக் கூட்டத்தை கூட்டினார் சேர்மன் ராஜேந்திரன். அந்தக் கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கலந்து கொண்ட 7 அ.தி.மு.க உறுப்பினர்களும் மின்சார விளக்குகள் வாங்கியதில் சரியான கணக்கு வழக்குகள் காட்டப்படவில்லை என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்கள்.

இதன்மூலம் வெற்றிபெற்ற சேர்மன் ராஜேந்திரனை கவுன்சிலர்கள் முழு அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள் சிவா ஆதரவாளர்கள்.

இதுகுறித்து சேர்மன் ராஜேந்திரனிடம் நாம் கேட்டபோது, "தலைவர் தளபதி அவர்கள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை மட்டுமே பதவி விலகுமாறு கூறியுள்ளார். எங்கள் கட்சியில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவோடு நான் வெற்றி பெற்றுள்ளேன். இதில் ஒன்றும் தவறு இல்லை. 11 உறுப்பினர்கள் இருந்தாலே போதும், நகர மன்றக் கூட்டத்தை நடத்தலாம். மேலும் அன்று சிலருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நகர மன்ற கூட்டத்திற்கு வரவில்லை. மற்றபடி எந்த சலசலப்பும் இல்லை. எல்லாம் சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது''’என்றார் கூலாய்.

இந்நிலையில்... அறிவாலயத்தில் நடந்த மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும். அதேபோல, கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்'' என கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்.

நகராட்சித் தலைவர் பதவியை வென்ற நிலையிலும் தி.மு.க.வினர் மத்தியில் சர்ச்சை புகைந்துகொண்டுதான் இருக்கிறது.