பஞ்சாமிர்தத்துக்குப் பேர்போன பழனியை, துப்பாக்கிச் சூடுக்கு பேர்போன ஸ்தலமாக மாற்றியிருக்கிறது பழனி பிரமுகர் நடராஜனின் துப்பாக்கிச் சூடு சம்பவம். சினிமாவில் காட்டுவதுபோல் எதிரியை சுட்டு வீழ்த்திவிட்டு, புகை பறக்கும் துப்பாக்கியை ஊதி இடுப்பில் மட்டும்தான் சொருகவில்லை. மற்றபடி அசால்டாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு நடராஜன் காட்டிய நிதானம் பார்த்தவர்களை வயிறுகலங்க வைத்துவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/palani-incident.jpg)
பழனி நகரிலுள்ள பிரபல வள்ளுவர் தியேட்டர் உரிமையாளரும் முக்கிய பிரமுகருமான நடராஜனுக்கும் அக்கரைப் பட்டியைச் சேர்ந்த இளங்கோவனுக்கும் இடையே கடந்த பல வருடங்களாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் பிரச்சினைக்குரிய இடமான பழனி ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் 12 சென்ட் இடத்தை இளங் கோவனுடன் அவரது உறவினர்களான சுப்பிரமணி, பழனிச் சாமி உள்பட சிலர் வந்து சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த நடராஜனோ, "இது என்னுடைய இடம். நீங்கள் சுத்தம் செய்யக்கூடாது' என்று சொல்ல... இரு தரப்புக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென நடராஜன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி யை எடுத்து சுப்பிரமணியை குறிவைத்துச் சுட்டதில் இடுப்பில் குண்டு பாய்ந்தது. அதைத் தொடர்ந்து பழனிச்சாமியையும் தொடையில் சுட்டதால் அதே இடத்தில் கீழே விழுந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/palani-incident1.jpg)
இப்படி அடுத்தடுத்து நடராஜன் துப்பாக்கியால் சுட்டது கண்டு பதறிப்போன உடனிருந்த முருகேசன் அங்கிருந்த கற்களை எடுத்து நடராஜன் மீது வீசினார். அதைக்கண்டு டென்ஷனாகி முருகேசனையும் சுட முயற்சி செய்தார் நடராஜன். அதற்குள் முருகேசன் அங்கிருந்த ஒரு குழிக்குள் பதுங்கிக்கொண்டார். இப்படி சினிமா பாணியில் துப்பாக்கிச் சூடு நடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சிலர் அப்பகுதிக்கு ஓடிவந்தும்கூட எதையும் கண்டுகொள்ளாமல் 80 வயதான முதியவர் நடராஜன் ஒரு இளைஞர்போல் டூவீலரில் ஏறிப்போய் போலீஸ் ஸ்டேஷனில் தனது கைத் துப்பாக்கியை கொடுத்து சரணடைந்தார். இப்படியொரு சம்பவத்தை எதிர்பாராத காக்கிகளே விஷயமறிந்து அதிர்ச்சி அடைந்துவிட்டனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த துப்பாக்கி சூடு காட்சிகள், தமிழகம் முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காயம்பட்ட இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் வயிற்றில் குண்டுபாய்ந்து அபாய கட்டத்திலிருந்த சுப்பிரமணியன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத் துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். எனினும் அதீத இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இந்த விஷயத்தில் நிலத்தின் உரிமை தாரராகச் சொல்லப்படும் இளங்கோவன், ""நாடார் சமூகத்திற்கு சொந்தமான இடத் தை பிளாட் போட்டு விற்பனை செய்தார் கள். அதில்தான் நான் 12 சென்ட் இடத்தை வாங்கினேன். அப்படி இருக்கும்போது நடராஜன் என்னிடம் வந்து நான் இந்த இடத்திற்கு பவர் போட்டிருக்கிறேன் என்று கூறி பிரச்சனை செய்ததின் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன் அடிப் படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
நடராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துவிட்டு வழக்கை நடத்த ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு எங்கள் இடத்தை சுத்தம் செய்தபோது, நடராஜன் எங்கள்மேல் போலீசில் புகார் கொடுத்தார். நானும் என் னிடம் உள்ள பட்டா பத்திரம், கோர்ட் தீர்ப்பு உள்பட அனைத்து ஆவணங்களையும் காட்டினேன். ஆனால் நடராஜன் எந்த ஒரு ரெக்கார்டும் கொண்டுவராமல் பதினைந்து நாள் காலஅவகாசம் கேட்டார்.
மீண்டும் எந்த ஒரு ரிக்கார்டையும் நடராஜன் கொண்டுவராததால் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், "நீங்கள் போய் உங்கள் இடத்தை சுத்தம் செய்து வேலையைப் பாருங்கள். அவர் ரிக்கார்டு கொண்டு வரட்டும், அதற்கப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறினார். அதோடு "அந்த இடத்திற்குப் போய் பிரச்சனை ஏதும் பண்ணக்கூடாது' என நடராஜனிடம் எழுதி வாங்கித்தான் அனுப்பிவைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/palani-incident3.jpg)
அதன் பேரில்தான் நானும் நகராட்சியில் வீடுகட்ட அனுமதி வாங்கி, உறவினர்களான சுப்பிரமணி, பழனிச்சாமி உள்பட சிலருடன் போய் அந்த இடத்தை சுத்தம் செய்து பூமி பூஜை போட ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம். அப்போதுதான் நடராஜன் வேண்டுமென்றே வந்து பிரச்சனை செய்தவர் சற்றும் எதிர்பாராமல் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டார். என் உறவினர் குடும்பம், குடும்பத் தலைவரைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறது'' என் றார். இது சம்பந்தமாக சி.பி.எம். மாவட்ட செயற் குழு உறுப்பினரும் பழனி முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ராஜமாணிக்கத்திடம் கேட்ட போது, “""பழனி ஒரு புண்ணியத் தலமாக இருப்பதால் இங்கு வரக்கூடிய பக்தர்களை நம்பித்தான் வியாபாரிகளும் மக்களும் இருந்துவருகிறார்கள். அப்படிப்பட்ட நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது மக்கள் மத்தியில் பெரும்பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. சமுதாயத்தில் மதிக்கக்கூடிய ஒருவர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. துப்பாக்கிகளுக்கு மாவட்ட நிர்வாகம்தான் உரிமம் கொடுக்கிறது. அப்படி கொடுக்கும்போது அந்த நபர்களுக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் இருக்கிறதா? அல்லது மலைக்காடுகளில் இருப்பவர் களுக்கு வனவிலங்குகள் மூலம் பாதிப்பு இருக்கிறதா? என்று தீவிர விசாரணை செய்து கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு வசதி படைத்தவர்களுக்கு எல்லாம் கொடுக்கலாம் என்று இறங்கினால் இப்படித்தான் தவறான விளைவுகள் ஏற்படும். இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் துப்பாக்கி லைசென்ஸ் நடைமுறையை முறைப்படுத்த வேண்டும்''’என்று கூறினார்
""நடராஜனின் கைத்துப்பாக்கி உரிமம் 2019 வரைதான் செல்லுபடியாகும். 2020-க்கு லைசென்சை புதுப்பிக்க மனு கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது தனது பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதுவரை அவர்மேல் எந்த ஒரு வழக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை. "நிலங்களும் தியேட்டரும் வைத்திருப்ப தால் பணப்புழக்கம் அதிகம் இருக்கிறது. அதனால எனக்கு துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும்' என்று கூறியதன் பேரில்தான் அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதை தனது சுயநலத்துக்காக பயன்படுத்திவிட்டார். இனிமேல் அவரது துப்பாக்கி உரிமம் ரத்துசெய்யப்படும். முதலில் அவர்மேல் பதிவு செய்யப்பட்டிருந்த கொலைமுயற்சி வழக்கு, தற்போது கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டி ருக்கிறார்''’என்றார் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/palani-incident4.jpg)
""நகரிலுள்ள பிரபல பஞ்சாமிர்த சித்தநாதன் சன்ஸ் குடும்ப சம்பந்தியாக இருக்கக்கூடிய நடராஜன், நகரின் முக்கிய வி.ஐ.பி.யாக வலம் வந்துகொண்டு அப்பாவி மக்கள் வாங்கும் இடத்தில் பிரச்சனை செய்வதும் பிரச்சனைக்குரிய இடங்களை வாங்குவதும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்றவர்கள், தனது மிரட்டலுக்குப் பணியாதவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் வந்தி ருக்கிறாராம். அப்படியொரு மிரட்டல் செல்லுபடியாகததால், அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் இறங்கி, ஒரு உயிர் பறிபோகவும் காரணமாகிவிட்டார்' என் கிறார்கள்'' ஊர் நிலவரம் தெரிந்தவர்கள்.
தமிழக தலைநகரமான சென்னையில் கடந்த நவம்பர் 13 அன்றுதான், குடும்பத் தகராறில் மருமகள் ஜெயமாலா மகாராஷ்டிராவிலிருந்து அடியாட் களை அழைத்துவந்து தனது மாமனார், மாமியார், கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அதை அருகிலிருந்து பார்த்து ரசித்த விவகாரம் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
"அதெல்லாம் வடஇந்தியக் கலாச்சாரம், நம்மஊர் ஆட்கள் அப்படியெல்லாம் அடாவடியாக இறங்கமாட்டாங்க' என்ற நம் பிக்கையில் இருந்தார்கள் தமிழக மக்கள். ஆனால், பட்டப் பகலில் நட்ட நடுவீதியில் பழனியில் கன் ஃபைட் நடத்தி பழனிமலை முருகனையே அதிரவைத்திருக்கிறார் நடராஜன்.
""தமிழகம் முழுவதும் வழங்கப் பட்ட துப்பாக்கி உரிமங்களை சோதித்து, சரியான காரணமின்றி உரிமம் வைத்திருப்பவர்களின் உரிமங்களை ரத்து செய்யவும், உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர் களைக் கைதுசெய்யவும் தமிழக அரசு முன்வரவேண்டும்.
இல்லையெனில் 90-களில் வந்த தமிழ்ப் படங்களில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் மெஷின் கன்னால் சல்லடையாக்கப்பட்ட சினிமா செட் போல தமிழகம் மாறிவிடும்'' என எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அந்தப் பழனிச் சாமியை சாட்சியாக வைத்து கொலை நடந்துவிட்டது. துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுக்க நம்ம பழனிச்சாமியார் என்ன செய்யப் போகிறார் என பார்க்கலாம்.
-சக்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/palani-incident-t.jpg)