மிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பல்வேறு புதிய திட்டங்களை முன் னெடுப்பதாலும், சாலை வசதிகளை மேம்படுத்துவதாலும், புதிய குடியிருப்பு கள் கட்டப்படுவதாலும் கட்டுமானத் தொழில் செழித்து பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது பொதுவான பேச்சாக இருக்கும். ஆனால் இம்முறை தி.மு.க. ஆட்சியில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு களை அதிரடியாக 300% வரை உயர்த்தும் பணி யை பத்திரப்பதிவுத் துறை முடுக்கிவிட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

oo

தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரலில்தான் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பீட்டை (கைடு லைன் வேல்யூ) பல மடங்கு அதிகரித்தது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் 50 சதவீதத்திற்கும் மேலாக பதிவுகள் குறைந்தது. இந்நிலையில், விரிவாக்கப் பகுதி நிலத்தின் மதிப்பை மீண்டும் அதிகப்படுத்த பத்திரப்பதிவுத் துறை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அரசு அனுப்பி யுள்ள உத்தரவில், ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில், விரிவாக்கப் பகுதிகளின் அளவு, தற்போதைய அரசு மதிப்பு, மார்க்கெட் மதிப்பு, அவற்றை எவ்வளவு அதிகரிக்கலாம் உள்ளிட்ட விபரங் களையும், சார்பதிவாளர்களின் பரிந்துரைகளை யும் வழங்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் 2012ல் சீரமைக்கப்பட்டன. இதில் குளறுபடி கள் காணப்பட்டதால் பத்திரப்பதி வுப் பணிகள் முடங்கின. இதை யடுத்து, 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளில், ஒட்டுமொத்தமாக, 33 சதவீதத்தை குறைத்து, 2017ல் அரசு உத்தரவிட்டது. இந் நிலையில், 2017ல் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலாக, 2012ல் இருந்த வழிகாட்டி மதிப்புகளை அமல்படுத் தப் போவதாக 2023ல் பதிவுத்துறை அறிவித் தது. இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு தரப் பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பதிவுத்துறை, 2023ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால், 2017 நிலவரப்படியான வழிகாட்டி மதிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.

இதுகுறித்து, சார்பதிவாளர்கள் தரப்பில் பேசியபோது, "உயர் நீதிமன்ற நெருக் கடியால், நில வழிகாட்டி மதிப்புகளை தற்காலிக ஏற்பாடாக மாற்றியமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கிராம வாரியாக தெருக்களின் விபரம் திரட்டப்பட்டு, அதற்கான மதிப்பை நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயிக்கப்படும் மதிப்பு விபரங் களுக்கு, கலெக்டர் தலைமையிலான மாவட்ட மதிப்பு நிர்ணயக் குழுவின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். மே 24க்குள் மாவட்ட குழு ஒப்புதல் பெற கெடு விதிக்கப்பட் டுள்ளது. அதன்பின், ஜூன் இறுதியில், மாநில அளவிலான மையக்குழுவிடம் ஒப்புதல் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 2012ம் ஆண்டு உத்தரவைத் திரும்பப்பெற்றுவிட்டு, 2017ல் குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை சமீபத்திய மாற்றங்களுடன் அமல்படுத்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தற்போதைய நிலவரத்திலிருந்து, 100 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் உயரவுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருமுன், இப்பணி களை முடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் நாகராஜன், "தமிழ்நாடு பொதுப்பணிதுறை வருடாவருடம் இடத்தோடு கட்டடங்களுக்கும் சேர்த்து பதியும்போது 10% வரை கட்டணத்தை உயர்த்துவார்கள். அது பெரிய சுமையாகத் தெரியாது. ஆனால் கடந்த 40 வருடங்களில் இல்லாதவகையில் 300% வரை நிலத்தின் மதிப்பை அரசு கூட்டினால், சிறுகச் சிறுக சேமித்த பணத் தோடு கடனையும் வாங்கி வீடு கட்ட நினைக்கும் சாதாரண மக்களின் நிலை என்னாவது? அரசு 70% மட்டுமே உயர்த்துவதாகக் கூறுகிறது. உண்மையில் 300% உயர்த்துகிறது. சில இடங்களில் நிலத்தின் விற்பனை மதிப்பைவிட அரசின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. இப்படிச்செய்வதால் பணப்புழக்கம் முற்றிலும் குறைந்துவிடும். ஒரு இடத்தில் வீடு கட்டுவதென்றால் முதலில் மாநகராட்சியில் கட்டட அனுமதிக்காக பணம் செலுத்தவேண்டும். பின் மின் இணைப்பிற்கு, செங்கல், சிமென்ட், கம்பி, மணலுக்காக பணம் செலவழிக்க வேண்டும். அனைத்திலும் அரசுக்கு ஜி.எஸ்.டி. வருமானம் இருக்கிறது. பின்னர் வீட்டு வேலை நடக்கும்போதும் தொடர்ச்சியாக பணம் புழக்கத்தில் இருக்கும். அதனால் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் கைடுலைன் வேல்யூ அதிகரித்தால் மொத்தப் பணிகளும் முடங்க, பணப்புழக்கம் தடைப்பட்டு, மக்களுக்கும் அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

வீடு, மனை வாங்குவதும், வீடுகள் கட்டு வதும் மொத்தமாக முடங்கக்கூடும். கட்டுமானத் தொழிலும் முடங்கி, தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படக்கூடும்'' என எச்சரிக்கிறார். கைடுலைன் வேல்யூ உயர்வதால், எகிறும் வீட்டுமனை விலையால், சொந்த வீட்டுக் கனவிலிருக்கும் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கோபம், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கே பின்னடைவாகக்கூடும் என்கிறார்கள்.

பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, இவ்விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நல்ல தீர்வு காணவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

Advertisment