தென்னிந்தியாவின் இந்தி முற்றுகை!
"பாகுபலி', "கே.ஜி.எஃப்', "புஷ்பா' போன்ற படங்களின் வருகை மற்றும் ஓ.டி.டி. வளர்ச்சிக்கு பிறகு தென்னிந்திய படங்கள் வடஇந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளன. அதேபோல இதற்கு முன்பு தென்னிந்திய மொழிகளில் வெளியான பல படங்களையும் இந்தியில் டப்பிங் செய்து ஓ.டி.டி. தளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் வெளியிட இந்தி திரையுலகினர் ஆர்வம்காட்டி வருகின்றனர். அந்த வகையில் "புஷ்பா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "அலா வைகுண்தபுரம்லோ' படம் தற்போது இந்தியில் டப் செய்யப் பட்டு குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் இப்படத்தைத் தொடர்ந்து, ராம்சரணின் "ரங்கஸ்தலம்' படமும் இந்தி மொழியில் டப் செய்யப் பட்டு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதேபோல, விஜய் நடித்த "மெர்சல்', அஜித் நடித்த "விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களையும் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம் படத்தின் டப்பிங் உரிமையை வைத்துள்ள நிறுவனங்கள். ஆனால், "அலா வைகுந்தபுரம்லோ', "ரங்கஸ்தலம்' படங்களின் வசூலைப் பொறுத்தே "மெர்சல்', "விஸ்வாசம்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் டப்பிங் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்கரில் ஒலிக்கும் ஜெய்பீம்!
நடிகர் சூர்யா நடிப்பில் 90-களில் நடந்த உண்மைச் சம்பவத் தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட "ஜெய் பீம்'’படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘"ஜெய் பீம்'’ படத்தைப் பாராட்டினாலும் படம் சில சர்ச்சைகளையும் கிளப்பியது. சமீபத்தில் "ஜெய் பீம்' படக்காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை "ஜெய் பீம்' பெற்றது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் "ஜெய்பீம்' திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான "ஜெய் பீம்' மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான "மரைக்காயர்' ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டியில் இறுதிப்பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
சமுதாய ஆஸ்கர் தமிழர்கள்!
ஆண்டுதோறும் மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பைக் கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார். இதில் "ஜெய் பீம்' படத்தை தயாரித்ததற்காக சூர்யா, ஜோதிகா இருவருக்கும் 2021-ஆம் ஆண்டின் மதிப்புமிக்க இந்த விருது வழங்கப்படவுள்ளது. இதேபோல நடிகரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு "சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் "சமுதாய ஆஸ்கர் விருது' வழங்கப்படவுள்ளது. இவ்விழா அடுத்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.
அஜீத் 61-ல் மீண்டும் வலிமை கூட்டணி!
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள "வலிமை' படம், பொங்கல் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில்... கொரோனா 3-ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட் டது. இதையடுத்து ‘"வலிமை'’ படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் "வலிமை' படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜீத் -எச்.வினோத் - போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் "அஜித் 61' படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கோடை காலத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி, விரைவாக மொத்த படப்பிடிப்பையும் முடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
எதிர்மறை குணம் கொண்ட கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கும் இப்படம், குறைவான ஆக்ஷன், நிறைய வசனங்களுடன் "சதுரங்க வேட்டை' படம் போல இருக்கும் என வினோத் கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், தற்போது இப்படமும் இவ்வாண்டிலேயே வெளியாகும் என்ற தகவல் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.
-சந்தோஷ்